search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tirupati accident"

    திருப்பதி அருகே கோவிலுக்கு சென்று திரும்பிய போது வேன் மீது லாரி மோதிய விபத்தில் 7 பேர் பலியாயினர். 20 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
    திருப்பதி:

    ஆந்திரா மாநிலம் குண்டூரில் இருந்து 35 பேர் ஆந்திராவில் உள்ள கோவில்களில் தரிசனம் செய்வதற்காக நேற்று முன்தினம் வேன் மூலம் புறப்பட்டனர். நேற்று ஸ்ரீசைலம் சிவன் கோவிலில் தரிசனம் செய்தனர். நேற்று இரவு தரிசனம் முடித்து ரெண்ட சிந்த்தலா சாலையில் இன்று அதிகாலை 2 மணி அளவில் வேன் வந்து கொண்டு இருந்தது.

    இரவு நேரம் என்பதால் வேனில் இருந்தவர்கள் அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்.அப்போது சாலையோரம் சிமெண்டு ஏற்றி வந்த லாரி நிறுத்தப்பட்டு இருந்தது. எதிர்பாராதவிதமாக லாரியின் பின்புறம் வேன் பயங்கரமாக மோதியது.

    இதில் வேன் நொறுங்கி சாலையில் கவிழ்ந்தது. வேனில் இருந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்து அலறி கூச்சலிட்டனர்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் இடிபாடுகளில் சிக்கி 7 பேர் பரிதாபமாக இறந்தனர்.

    கோடீஸ்வரி (45), ரோசயம்மா (65), ரமாதேவி (50), கோட்டம்மா (50), ரமணா (50), லட்சுமி நாராயணா (30), பத்மா (38) என தெரியவந்தது.

    விபத்தில் 20 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் நசரத்பேட்டை, குண்டூர் அரசு ஆஸ்பத்திரிகளில்சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஆந்திராவில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    • கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.
    • விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம் சங்கராபுரம் மண்டலம் கட்சி பிடி பகுதியை சேர்ந்தவர் காபு மணி (வயது 29). இவருக்கு வரலட்சுமி என்ற அக்காவும், சிவைய்யா என்கிற அண்ணன் மற்றும் தம்பி ராஜா உள்ளனர்.

    இவருக்கு திருமணமாகி கணவர் மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். கடந்த 7 மாதங்களுக்கு முன்பு காபு மணி பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி இறந்தார்.

    விபத்தில் பலியான காபு மணிக்கு சிலை வடிக்க வேண்டும் என அவரது சகோதர, சகோதரிகள் முடிவு செய்தனர்.

    இதையடுத்து காபு மணிக்கு 7 அடி உயரத்தில் உலோக சிலை வடித்தனர். ரக்சா பந்தன் விழாவையொட்டி அவரது அக்கா வரலட்சுமி, அண்ணன் சிவைய்யா மற்றும் தம்பி ராஜா ஆகியோர் காபுமணி உருவ சிலைக்கு ஆள் உயர மாலை அணிவித்து அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் மேளதாளம் முழங்க ஊர்வலமாக கொண்டு வந்தனர்.

    அப்போது அவர்கள் தன்னுடைய தங்கை பைக் விபத்தில் இறந்து விட்டதால் பொதுமக்கள் வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிந்து கவனமாக வாகனத்தில் செல்ல வேண்டும் என அறிவுறுத்தினர்.

    பின்னர் காபுமணி சிலையை தங்களது வீட்டிற்கு முன்பாக பிரதிஷ்டை செய்தனர்.

    தங்கை மீது கொண்ட பாசத்தால் அவருக்கு சிலை அமைத்து ஊர்வலமாக கொண்டு சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    • எதிரே வேகமாக வந்த கார் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீது மோதி கவிழ்ந்தது.
    • கார் பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சீட்டிலிருந்து எகிறி சாலையில் விழுந்தார்.

    திருப்பதி:

    ஆந்திராவில் பலத்த மழை பெய்து வருவதால் சாலைகள் போக்குவரத்துக்கு லாயக்கு இன்றி குண்டும் குழியுமாக உள்ளது.

    பொட்டி ஸ்ரீ ராமுலு மாவட்டம் காவனி பட்டினத்தில் இருந்து நெல்லூர் நோக்கி அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

    அப்போது எதிரே வேகமாக வந்த கார் குண்டும் குழியுமாக உள்ள சாலையில் இறங்கியதால் கட்டுப்பாட்டை இழந்து அரசு பஸ்சின் மீது மோதி கவிழ்ந்தது. கார் பஸ் மீது மோதிய வேகத்தில் பஸ்சை ஓட்டி வந்த டிரைவர் சீட்டிலிருந்து எகிறி சாலையில் விழுந்தார்.

    இதனால் பஸ் தாறுமாறாக ஓடியது. சுமார் 150 மீட்டர் தூரம் டிரைவர் இல்லாமல் பஸ் ஓடியது பஸ்சில் இருந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர்.

    இதனால் பதறிபோன பஸ் கண்டக்டர் சினிமா பாணியில் வேகமாக ஓடிச் சென்று டிரைவர் சீட்டில் அமர்ந்து பிரேக் பிடித்து பஸ்சை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.

    பதட்டத்தில் இருந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவனி பட்டினம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த பஸ் டிரைவர் மற்றும் காரில் இருந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கண்டக்டர் மட்டும் பஸ்சை நிறுத்தாமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்து இருக்கும். சாமர்த்தியமாக பிரேக் போட்டு பஸ்சை நிறுத்திய கண்டக்டரை பயணிகள் பாராட்டினர்.

    • பூதலப்பட்டு-நாயுடு மங்கலம் இடையே பி.கொத்தகோட்டை என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.
    • காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் போலீஸ்காரர் அனில் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    திருப்பதி:

    கர்நாடக மாநில போலீசார் ஒரு வழக்கு விசாரணைக்காக நேற்று திருப்பதிக்கு வந்தனர்.

    விசாரணை முடிந்து இன்று அதிகாலை 4.30 மணி அளவில் காரில் திரும்பி சென்று கொண்டு இருந்தனர். சித்தூர்-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பூதலப்பட்டு-நாயுடு மங்கலம் இடையே பி.கொத்தகோட்டை என்ற இடத்தில் சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவரில் மோதி சர்வீஸ் சாலையில் கவிழ்ந்தது.

    காரில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர் அவினாஷ் போலீஸ்காரர் அனில் மற்றும் கார் டிரைவர் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர்.

    மேலும் காரில் இருந்த 3 போலீசார் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் போலீஸ் சூப்பிரண்டு நிஷாந்த் ரெட்டி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஈடுபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு சிகிச்சைக்காக திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருப்பதி அருகே ஆம்னி பஸ் மரத்தில் மோதிய விபத்தில் 15 பக்தர்கள் படுகாயமடைந்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருமலை:

    திருப்பதியில் இருந்து தனியார் ஆம்னி பஸ் 40 பயணிகளுடன் பெங்களூருக்கு புறப்பட்டது. இந்த பஸ்சில் திருப்பதி கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஏராளமானோர் பயணம் செய்தனர்.

    சித்தூர், திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் எம்.பண்டபல்லி என்ற இடத்தில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த புளிய மரத்தில் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 15 பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

    பூதலப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மீட்டு பூதலப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பதி அருகே என்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் பைக் மீது அரசு பஸ் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    திருமலை:

    ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் இப்புராஜபல்லியை சேர்ந்தவர் பிரவின் குமார் (23). திருப்பதி அடுத்த ரங்கம்பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் எம்.பி.ஏ. இறுதி ஆண்டு படித்து வந்தார்.

    இவரது நண்பர்களான நெல்லூர் மாவட்டம் வெங்கடகிரி நரேஷ் (22), சித்தூர் மாவட்டம் பூதலப்பட்டு கார்த்திக் (22) ஆகியோர் நேற்று மாலை ரங்கம்பேட்டையில் இருந்து திருப்பதிக்கு ஒரே பைக்கில் வந்து கொண்டிருந்தனர்.

    ஸ்ரீனிவாச மங்காபுரம் செட்டேபல்லி பைபாஸ் சாலையில் வந்த போது எதிரே பீலேரு நோக்கி சென்ற ஆந்திர அரசு பஸ் பைக் மீது மோதியது. இந்த விபத்தில் தூக்கி வீசப்பட்ட 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் பிரவின்குமார், நரேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விபத்து குறித்து தகவல் அறிந்த சந்திரகிரி சப் - இன்ஸ்பெக்டர் ஈஸ்வரய்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கார்த்திக்கை மீட்டு திருப்பதி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ஆனால் வரும் வழியிலேயே கார்த்திக் பரிதாபமாக இறந்தார். விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

    என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்கள் 3 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    திருப்பதி அருகே இன்று காலை லாரி மீது தனியார் கம்பெனி பஸ் மோதி 30 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர்.

    திருப்பதி:

    திருப்பதி அடுத்த காளஹஸ்தி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஸ்ரீ சிட்டி தொழிற்பேட்டை உள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்குள்ள தனியார் செல்போன் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற் சாலையில் திருப்பதி, ரேணிகுண்டா, ஏர்பேடு காளஹஸ்தி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெண் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    இன்று காலை முதல் ஷிப்டுக்கு 30 பெண் தொழிலாளர்கள் அந்நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்சில் வேலைக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த பஸ் காளஹஸ்தி-சென்னை நெடுஞ்சாலையில் வரதய்ய பாளையம் என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரியின் பின்புறம் பயங்கரமாக மோதியது.

    இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட 30 பெண் தொழிலாளர்கள் காயம் அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த வரதய்ய பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிட்டி தொழிற்பேட்டையில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×