என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Tirupati Seven Malayan Temple"
- வேதப் பண்டிதர்கள் மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
- தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று ராமநவமி விழா நடந்தது. அதையொட்டி அதிகாலை மூலவரை சுப்ர பாதத்தில் துயிலெழுப்பி தோமால சேவை, அர்ச்சனை செய்யப்பட்டது. கோவிலில் உள்ள ரெங்கநாயக்கர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து 11 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், இளநீர் ஆகிய நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது.
அப்போது வேதப் பண்டிதர்கள் நாலாயிர திவ்யப் பிரபந்தம் பாராயணம் செய்தனர். புருஷுக்தம், ஸ்ரீசூக்தம், பூசூக்தம், நீலசூக்தம், பஞ்சசாந்தி மந்திரங்கள் மற்றும் ராமாயண பாசுரங்களை ஓதினார்கள்.
அதைத்தொடர்ந்து மாலை 6.30 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ராமர், சிறப்பு அலங்காரத்தில் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். அதன்பிறகு இரவு 9 மணியில் இருந்து 10 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசலில் ராமநவமி ஆஸ்தானம் நடந்தது.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை பெரிய ஜீயர் சுவாமி, திருமலை-திருப்பதி தேவஸ்தான அதிகாரி ஏ.வி.தர்மாரெட்டி தம்பதியர் மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திருப்பதி கோதண்டராமர் கோவிலில் நேற்று ராம நவமி விழா நடந்தது. அதிகாலை சுப்ரபாதம், மூலவர்களுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. ஊஞ்சல் மண்டபத்தில் காலை 8 மணியில் இருந்து 9 மணி வரை உற்சவர்களான சீதா, ராமர், லட்சுமணர், அனுமனுக்கு திருமஞ்சனம் நடந்தது. மாலை 3 மணியில் இருந்து 4 மணி வரை திருப்பதியில் உள்ள பெரிய ஜீயர் சுவாமி மடத்தில் இருந்து அர்ச்சகர்கள் பட்டு வஸ்திரங்களை எடுத்து வந்து விமான பிரதட்சணம் செய்து மூலவர்களுக்கும், உற்சவர்களுக்கும் சமர்ப்பித்தனர்.
அதன்பிறகு ராமர் ஜென்ம புராணம், ஆஸ்தான நிகழ்ச்சிகள் நடந்தது. இரவு 7 மணியில் 9 மணி வரை உற்சவர் ராமச்சந்திரமூர்த்தி தனது பிரியமான அனுமன் வாகனத்தில் எழுந்தருளி நான்குமாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
- ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது.
- ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ராம நவமி விழா இன்று நடந்தது. கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் காலை 9 மணியில் இருந்து காலை 11 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சேநயருக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.
இதையொட்டி ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இன்று இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அனுமந்த வாகன சேவை நடக்கிறது. இரவு 10 மணியில் இருந்து இரவு 11 மணி வரை கோவிலில் உள்ள தங்க வாசல் அருகில் ராம நவமி ஆஸ்தானம் நடைபெறுகிறது.
திருப்பதி கோவிலில் நேற்று 67 ஆயிரத்து 294 பேர் சாமி தரிசனம் செய்தனர். 22,765 பக்தர்கள் முடிகாணிக்கை செலுத்தினர். ரூ.2.94 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது. 6 மணி நேரத்திற்கு மேல் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பதி கோவில் ஆர்ஜித சேவைகளுக்கான டிக்கெட் வருகிற 22-ந்தேதியும் ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் 23-ந்தேதியும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.
மூத்த குடிமகன்கள், மாற்றுத்திறனாளி பக்தர்கள் 23-ந்தேதி மதியம் 3 மணிக்கு அதற்கான டிக்கெட் முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம்.
ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வருகிற 24-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இதில் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
- பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர்.
- பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருடப்பிறப்பையொட்டி உகாதி ஆஸ்தானம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, காலையில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் மலையப்பசுவாமி, விஷ்வக்சேனர் விசேஷ சமர்ப்பணம் செய்தனர். பின்னர் விமான பிரகாரம் மற்றும் கொடிமரத்தை சுற்றி ஊர்வலமாக கோவிலுக்குள் சென்றனர்.
தங்க வாசலில் கருடாழ்வார் எதிரே சர்வபூபால வாகனத்தில் உற்சவர்களை கொண்டு வந்தனர். உற்சவர்களுக்கு அடுத்துள்ள மற்றொரு பீடத்தில் விஷ்வக்சேனரை கொண்டு வந்தனர். அதன்பின் மூலவர் மற்றும் உற்சவமூர்த்திக்கு புது வஸ்திரம் அணிவித்தனர்.
அதன்பின் பஞ்சாங்க ஸ்ரவணம் நடைபெற்றது. தங்கவாசலில் ஆகம பண்டிதர்கள் மற்றும் அர்ச்சகர்கள் உகாதி ஆஸ்தானம் செய்தனர். இதில் தேவஸ்தான தலைவர் பூமண. கருணாகர் ரெட்டி, முதன்மை நிர்வாக அதிகாரி தர்மா ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
- சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் குவிந்தனர்.
- திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேற்று அதிகாலை முதல் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. மகா சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளி மற்றும் சனிக்கிழமை அரசு விடுமுறை என்பதால் பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்காக குவிந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டதால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் வைகுந்தம் க்யூ காம்ப்ளக்ஸ் தங்க வைத்து தரிசனத்திற்கு அனுமதித்தனர்.
இதனால் வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸ் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. மேலும் பக்தர்கள் தரிசனத்திற்காக நீண்ட தூரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.
திருப்பதியில் நேற்று 68,446 பேர் தரிசனம் செய்தனர். 28, 549 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.24 கொடி உண்டியல் காணிக்கை வசூலானது. 18 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
- திருப்பதி லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?
- பல்லவர் ஆட்சியில் பக்தர்களுக்கு பிரசாதம் அளிக்கும் திட்டம் தொடங்கியது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக கொடுக்கப்படுவது ஏன் தெரியுமா?
கி.பி.830-ம் ஆண்டில்தான் முதல் முதலாக பல்லவர் ஆட்சியில் ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதம் விநியோகிக்கும் திட்டம் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த காலத்தில் பக்தர்கள் ஏழுமலையானை தரிசிக்க மலையேறி செல்ல பல நாட்கள் ஆகும்.
தரிசித்த பின்பும் சில நாட்கள் மலையில் தங்கி ஓய்வு எடுத்த பிறகு ஊர் திரும்புவது வழக்கம். அவர்கள் திரும்பி வீட்டுக்குச் செல்லும் வரை தேவையான உணவு அவர்களுக்கு கோவில் பிரசாதமாக வழங்கப்பட்டது.
இதனால், முதலில் திருப்பொங்கம் என்ற பெயரில் பிரசாதம் வழங்கப்பட்டது. பின்னால், கி.பி.1445-ம் ஆண்டு முதல் சுய்யம் என்ற இனிப்பு பிரசாதமாகக் கொடுக்கப்பட்டது. 1455-ம் ஆண்டு அப்பம் கொடுக்கத் தொடங்கினார்கள். 1460-ம் ஆண்டில் அது வடையாக மாறியது. 1468-ம் ஆண்டு முதல் வடைக்கு பதில் அதிரசம் தரப்பட்டது. 1547-ம் ஆண்டு மனோஹரம் எனப்படும் இனிப்பு வழங்கப்பட்டது.
1803-ம் ஆண்டு மதராஸ் மாகாணம் அமல்படுத்திய பிரசாத விநியோக முறையில் பூந்தி பிரசாதமாக விற்பனையானது. 1940-ம் ஆண்டு முதல் பூந்திக்கு பதில் லட்டு விற்பனை அமலானது.
ஆரம்பத்தில் திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு ஒன்று எட்டு அணாவிற்கு விற்கப்பட்டது. இதுதவிர, கல்யாண உற்சவ லட்டு, கல்யாண உற்சவத்தில் பங்கேற்கும் பக்தர்களுக்கு மட்டும் வழங்கப்படும்.
- ரத சப்தமி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதியில் குவிந்து வருகின்றனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டுதோறும் ரத சப்தமி எனும் மினி பிரமோற்சவ விழா நாளை நடைபெறுகிறது.
ரதசப்தமி விழாவை முன்னிட்டு கோவில் வளாகம், 4 மாட வீதிகள் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகள் அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.
நாளை காலை ஏழுமலையான் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராய் காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில், 4 மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
அதன்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு ஏழுமலையான் சூரிய பிரபை வாகனத்தில் 4 மாட வீதிகளில் உலா வருகிறார். 9 மணி முதல் 10 மணி வரை சின்னசேஷ வாகனத்திலும், 11 மணி முதல் 12 மணி வரை கருட வாகனத்திலும், 1 மணி முதல் 2 மணி வரை அனுமந்த வாகனத்திலும், 2 மணி முதல் 3 மணி வரை சக்கரத்தாழ்வார் தீர்த்த வாரி நடைபெறுகிறது.
மாலை 4 மணி முதல் 5 மணி வரை கல்பவிருட்சம் வாகனத்திலும், 6 மணி முதல் 7 மணி வரை சர்வ பூபால வாகனத்திலும் ஏழுமலையான் வீதி உலா வருகிறார். 8 மணி முதல் 9 மணி வரை சந்திரபிரப வாகனத்தில் உலா வருகிறார்.
ரதசப்தமி விழாவை காண இன்று காலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்து வருகின்றனர்.
- ரத சப்தமி விழா வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
- லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும்.
திருப்பதி:
ரத சப்தமியையொட்டி தேவஸ்தானம் சார்பில் விழா ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அதன்படி 4 மாட வீதிகளில் வண்ணம் தீட்டுதல், திருப்பதி கோவில் மற்றும் திருப்பதி மலை முழுவதும் வண்ண, வண்ண மின்விளக்குகள் பொருத்துதல், பூங்காக்களை பராமரித்தல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது.
ரத சப்தமி நாளில் காலை முதல் இரவு வரை. சந்திர பிரபை வாகனம், சூரிய பிரபை வாகனம், முத்து பந்தல் வாகனம், தங்க கருட சேவை உள்ளிட்ட 7 வாகனங்களில் ஏழுமலையான் மாட வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
4 மாடவீதிகளில் ஏழுமலையான் உலா வரும்போது முன்னால் கோலாட்டம், பரத நாட்டியம், நாட்டுப்புற நடனம் ஆகியவை நடைபெறுவது கண்கொள்ளா காட்சியாக இருக்கும்.
வருகிற 16-ந் தேதி திருச்சானூரிலும் ரதசப்தமி விழா நடைபெற உள்ளதால் திருப்பதி, திருப்பதி மலை ஆகிய இடங்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூட்டம் அலை மோதும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரத சப்தமி விழாவிற்காக திருப்பதியிலும், திருச்சானூரிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
- மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும்.
- இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரணய கலகோற்சவம் நடந்தது. அதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று உற்சவத்தை கண்டுகளித்தனர்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு தோறும் மார்கழி மாதத்தில் 21 நாட்கள் ஆத்யாயன உற்சவம் நடக்கும். அதன்படி இந்த ஆண்டும் ஆத்யாயன உற்சவம் நடந்து வருகிறது. அதன் 17-வது நாளிலும் மற்றும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 6-வது நாளிலும் பிரணய கலகோற்சவம் (ஊடல் உற்சவம்) நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான பிரணய கலகோற்சவம் நேற்று நடந்தது. அதற்காக நேற்று மாலை உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினார்.
அதேபோல் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் மற்றொரு தனித் தங்கத்திருச்சி வாகனத்தில் எழுந்தருளினர். சாமியும், தாயார்களும் எதிர் எதிர் திசைகளில் கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து ஸ்ரீவாரி புஷ்கரணியை அடுத்த வராகசாமி கோவில் அருகில் வந்து எதிர் எதிரே நின்றனர்.
பக்தர்களின் குறைகள், கோரிக்கைகள், நோய்களை போக்குவதில் முன்நிற்கும் ஏழுமலையான், தனது துணைவியார்களான ஸ்ரீதேவி, பூதேவியர்களை கண்டு கொள்வதில்லை, எனக் குற்றம் சாட்டி அவர்கள் சார்பாக அர்ச்சகர் ஒருவர் மலையப்பசாமி மீது முதலில் 3 முறை பூப்பந்துகளை எறிந்து தங்களின் கோபத்தை வெளிப்படுத்தினர்.
அப்போது நம்மாழ்வார் அருளிய பாசுரங்களை வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் 'கேலி' செய்யும் விதத்தில் பாராயணம் செய்ய, உற்சவர் மலையப்பசாமி உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களை மிரட்டும் தோரணையில் தான் எந்தத் தவறும் செய்யவில்லை, என்று கூறி பயப்படுவதுபோல் நடித்து மன்னிப்பு கேட்டார்.
அதன்பிறகு கோபம் தணிந்து அமைதியாகி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் இருவரும் மலையப்பசாமியின் இருபுறமும் சேர்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியை அடுத்து அவர்களுக்கு கற்பூர ஆரத்தி காண்பித்து ஆஸ்தானம் நடத்தினர். பின்னர் உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி மங்கல வாத்தியங்கள் இசைக்க ஊர்வலமாக கோவிலுக்குள் கொண்டு செல்லப்பட்டனர்.
இந்த உற்சவத்தில் திருமலை ஜீயர்சுவாமிகள், தேவஸ்தான அதிகாரிகள், வேதப் பண்டிதர்கள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர். ஏராளமான பக்தர்கள் சுற்றி நின்றவாறு உற்சவத்தை கண்டு களித்தனர்.
- பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர்.
- பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட துவாதசி விழா நேற்று நடந்தது. அதையொட்டி நேற்று அதிகாலை கோவிலில் இருந்து உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஊழியர்கள் ஊர்வலமாக பூவராகசாமி கோவில் அருகில் ஸ்ரீவாரி புஷ்கரணியின் கரைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை உற்சவர் சுதர்சன சக்கரத்தாழ்வாருக்கு ஸ்நாபன திருமஞ்சனம் செய்து, தீர்த்தவாரி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுதர்சன சக்கரத்தாழ்வாரை ஸ்ரீவாரி புஷ்கரணி புனிதநீரில் அர்ச்சகர்கள் 3 முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர்.
அப்போது புஷ்கரணியில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீவாரி புஷ்கரணியில் 3 முறை மூழ்கி புனித நீராடினர். தீர்த்தவாரி நிகழ்ச்சி முடிந்ததும், சுதர்சன சக்கரத்தாழ்வாரை மேள, தாளம் மற்றும் மங்கள வாத்தியங்கள் இசைக்க கோவிலுக்குள் கொண்டு சென்றனர்.
சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சியில் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பூமண. கருணாகர்ரெட்டி எம்.எல்.ஏ. மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள், அதிகாரிகள், அர்ச்சகர்கள், பக்தர்கள் பங்கேற்றனர்.
வைகுண்ட துவாதசியையொட்டி திருப்பதியில் உள்ள பல உள்ளூர் கோவில்களில் சக்கர ஸ்நானம் நடந்தது. அதன் ஒரு பகுதியாக திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், சீனிவாசமங்காபுரம் கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவில், அப்பலாயகுண்டா பிரசன்ன வெங்கடேஸ்வரசாமி கோவில், திருப்பதி கோதண்டராமசாமி கோவில், கோவிந்தராஜசாமி கோவில், நாராயணவனம், நாகலாபுரம், தொண்டமநாடு ஆகிய பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் ஸ்நாபன திருமஞ்சனம், சக்கர ஸ்நானம் நடந்தது. அதில் திரளான பக்தர்கள் பங்கேற்று புனிதநீராடினர்.
- ஜனவரி 1-ந்தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.
- லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர்.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வைகுண்ட ஏகாதசி முன்னிட்டு நேற்று காலை பரமபத வாசல் எனும் வைகுண்ட வாசல் திறக்கப்பட்டது.
இதன் வழியாக ஜனவரி 1-ந்தேதி வரை தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். பக்தர்கள் சிரமம் இன்றி ஏழுமலையானை தரிசிப்பதற்காக ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் மற்றும் இலவச தரிசன டோக்கன்கள் வழங்கப்பட்டு உள்ளன. 9 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கபடுகிறது.
இந்த நிலையில் வைகுண்ட வாசல் வழியாக ஏழுமலையானை தரிசிப்பதற்காக நேற்று முன்தினம் இரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பதி மலையில் குவிந்தனர். திருப்பதி மலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாக காணப்படுகிறது. திருப்பதியில் தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு உள்ளதால் பக்தர்கள் குளிரில் நடுங்கியபடி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
வைகுண்ட வாசல் திறப்பையொட்டி நேற்று இரவு ஸ்ரீதேவி, பூதேவி சமயதராய் ஏழுமலையான் தங்க தேரில் 4 மாட வீதிகளில் உலா வந்தார்.
- சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.
- 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
திருமலை:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 23-ந்தேதி வைகுண்ட ஏகாதசி நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. காலை 6 மணிக்கு கோவில் தூய்மைப் பணி தொடங்கி 10 மணி வரை 4 மணி நேரம் சுத்திகரிப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக அதிகாலையில் சுவாமிக்கு திருப்பாவை நிவேதனம் செய்த பின், சுவாமி சிலை பட்டுத்திரையால் மூடப்பட்டது.
அதன்பின் ஆனந்த நிலையத்தில் தொடங்கி, தங்க வாசல் வரை மற்றும் உபகோவில்கள், கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை உபகரணங்கள் உள்ளிட்டவை தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்யப்பட்டது.
பிறகு, நாமகோபு, ஸ்ரீசூர்ணம், கஸ்தூரி, மஞ்சள், கற்பூரம், சந்தனப்பொடி, குங்குமம், கிச்சிலிக்கட்டை உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கலந்த புனித நீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
அதன்பிறகு அர்ச்சகர்கள், சுவாமி சிலையை மறைத்திருந்த துணியை அகற்றி, சிறப்பு பூஜை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடத்தினர். கோயில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்ற 4 மணிநேரமும் தரிசனம் ரத்து செய்யப்பட்டிருந்தது.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தேவஸ்தான தலைவர் கருணாகர் ரெட்டி இதுகுறித்து கூறுகையில் பல நூறு ஆண்டுகளாக ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. கருவறை மற்றும் உபகோவில்களின் சுவர்களில் எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் வாசனை திரவியங்கள் தூவப்பட்டுள்ளன என்றார்.
- 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறும்.
- 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது.
திருப்பதி:
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அதிகாலை 3 மணிக்கு சுப்ரபாதம் பாடப்பட்டு சேவை நடந்து வருகிறது. தை மாதம் முதல் கார்த்திகை மாதம் வரை 11 மாதங்கள் ஏழுமலையானுக்கு சுப்ரபாத சேவை நடைபெறுகிறது.
இன்று மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சுப்ரபாத சேவைக்கு பதிலாக அதிகாலை 3 மணிக்கு ஆண்டாள் அருளிய திருப்பாவை பாடப்படுகிறது. இன்று முதல் ஜனவரி 14-ந்தேதி 30 நாட்கள் திருப்பாவை சேவை நடைபெறுகிறது. ஜனவரி 15-ந்தேதி முதல் மீண்டும் சுப்ரபாத சேவை நடைபெறும் என தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த சில நாட்களாக திருப்பதி மற்றும் ஆந்திராவின் பல்வேறு மாவட்டங்களில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது.
திருப்பதி மலை பாதையில் செல்லும் வாகனங்களுக்கு முன்னாள் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவு பனிப்பொழிவு நிலவு வருகிறது.
இதனால் மலைப்பாதையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் சூழ்நிலை உள்ளது. எனவே மலைப் பாதையில் வாகனங்களை மெதுவாக இயக்க வேண்டும் என தேவஸ்தான அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பதியில் நேற்று 59,734 பேர் தரிசனம் செய்தனர். 30,654 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ 3.52 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்