search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Traffic violation"

    • ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை மீறி ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளார்.
    • ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது.

    போலீஸ் பாதுகாப்புடன் ராஜஸ்தான் துணை முதல்வரின் மகன் போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு ரீல்ஸ் வீடியோ வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ராஜஸ்தான் துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவாவின் மகன் ஆஷூ பைர்வாவும் அவரது நண்பர்களும் திறந்தவெளி ஜீப்பில் போக்குவரத்து விதிகளை காற்றில் பறக்கவிட்ட படி பயணம் செய்து ரீல்ஸ் வீடியோ எடுத்துள்ளனர். ஜீப்பிற்கு பின்னால், துணை முதல்வரின் மகனுக்கு ராஜஸ்தான் காவல்துறை பாதுகாப்பு வழங்கியபடி சென்றது பெரும் கண்டனத்திற்கு உள்ளானது.

    இந்த சம்பவம் குறித்து பேசிய துணை முதல்வர் பிரேம்சந்த் பைரவா, "என்னுடைய மகன் பள்ளி உயர் கல்வி தான் பயின்று வருகிறார், அவருடன் பள்ளி மாணவர்கள் தான் இருக்கிறார்கள். மகனுக்கு இன்னும் 18 வயது கூட ஆகவில்லை. மகான்களின் பாதுகாப்புக்காகவே போலீஸ் வாகனம் பின்னல் சென்றது என்று தெரிவித்தார்.

    இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறி பயண செய்ததற்காக ராஜஸ்தான் துணை முதல்வரின் மகனுக்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளனர். விதிகளை மீறி ஜீப்பில் பெரிய அளவிலான டயரை பொருத்தியதற்காக 5000 ரூபாய் அபராதமும் சீட் பெல்ட் அணியாததற்கு 100 ரூபாய் அபராதமும் செல்போனில் பேசியபடியே பயணம் செய்தற்காக 1000 ரூபாய் அபராதம் என மொத்தமாக 7000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும்.
    • சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    சென்னை:

    போக்குவரத்து காவல்துறை சார்பில் சென்னை முழுவதும் இன்று தடை கோட்டை தாண்டி செல்லக் கூடாது என்று வாகன ஓட்டிகளிடம் போலீசார் விழிப்புணர்வு செய்தனர்.

    போக்குவரத்து சிக்னல்களில் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளை செல்போனில் படம் பிடித்து அபராதம் விதிக்கும் முறை தீவிரமாக சென்னை முழுவதும் நடந்து வருகிறது. அவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டு வாகன ஒட்டிகளின் செல்போனுக்கே சில நிமிடங்களில் அபராதம் சென்று விடும்.

    இதுகுறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று முதல் 3 நாட்களுக்கு நடக்கிறது. அனைத்து போக்குவரத்து சந்திப்புகளிலும் தடை கோட்டை தாண்டும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் சாலை விதிகளை மீறக்கூடாது. சிக்னல்களில் போடப்பட்டுள்ள தடை கோட்டை தாண்டினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தேவையில்லாமல் அபராதத்தை செலுத்தாதீர்கள். ரூ.500 இருந்தால் ஒரு குடும்பத்தின் ஒரு நாள் சராசரி செலவை சமாளிக்கலாம். தேவையில்லாமல் உங்களுக்கு அபராதம் விதிக்க எங்களுக்கு ஆசையில்லை. எனவே போக்குவரத்து விதிமுறைகளை மதித்து செல்லுங்கள் என விழிப்புணர்வு செய்தனர்.

    வேப்பேரியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பாண்டிவேலு தலைமையில் சிக்னலில் பொம்மைகளுடன் கலை நிகழ்ச்சி நடத்தி போக்குவரத்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

    • சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தில் போக்குவரத்து விதிமீறல் தொடர்பான புகார்கள் பெறப்படுகின்றன.
    • பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

    சென்னை:

    சென்னை காவல்துறை மற்றும் சென்னை போக்குவரத்து காவல்துறையின் டுவிட்டர் பக்கத்தின் மூலம் தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டுபவர்கள் நடைபாதையில் வாகனங்களை நிறுத்துபவர்கள், தவறான பாதையில் வாகனத்தை இயக்குதல், இருசக்கர வாகனத்தில் மூன்று நபர்கள் பயணம் செய்தல் போன்ற விதிமீறல்கள் பற்றிய புகார்கள் பெறப்படுகின்றன.

    கடந்த ஐந்து மாதங்களில் இது போன்ற 5,010 புகார்கள் டுவிட்டர் மூலம் பெறப்பட்டுள்ளன. இவ்வாறு பெறப்பட்ட புகார்களில் ஏற்கனவே 4,902 புகார்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னையில் மாநகர சாலைகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
    • வாகன எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு செலான்கள் அனுப்பப்படுகிறது.

    சென்னை:

    விபத்துகளை குறைக்கவும், போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடுபவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் போக்குவரத்து போலீசார் பல்வேறு நட வடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் மாநகர சாலைகளில் பல இடங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இவற்றில் பதிவாகும் காட்சிகள் மூலம் வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் விதி மீறல், சிக்னல்களை கவனிக்காமல் செல்லும் வாகனங்கள், ஹெல்மெட் அணியாமல் செல்பவர்கள், சீட் பெல்ட் அணியாமல் செல்லும் வாகன ஓட்டிகள் என போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்காணிக்கப்படுகிறது.

    பின்னர் அந்த வாகன எண் மூலம் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு செலான்கள் அனுப்பப்படுகிறது.

    இந்த முறையில் சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளரே விதி மீறல் செய்தவராக கருதப்படுகிறார். ஆனால் சில நேரங்களில் வாகனங்களின் உரிமையாளர்கள் அந்த வாகனத்தை ஓட்டி செல்லாமல் தங்களது நண்பர்களுக்கு கொடுக்கும் போது அவர் விதிமீறலில் ஈடுபட்டாலும், வாகன உரிமையாளரே விதிமீறல் செய்தவராக கருதப்படும் நிலை உள்ளது.

    இந்நிலையில் சமீபத்தில் போக்குவரத்து திருத்த விதிகளின்படி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடாத வாகனங்களின் உரிமையாளர்கள் தங்களது வாகனத்தை வேறொரு நபர் ஓட்டியதற்கான ஆதாரத்தை வழங்கி, தாங்கள் நிரபராதி என நிரூபிக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

    அதன்படி உரிய ஆதாரங்களை போலீசாரிடம் சமர்பித்தால் ஏற்கனவே போலீசார் அனுப்பிய அபராத செலான்கள் ரத்து செய்யப்பட்டு உண்மையான குற்றவாளியின் பெயரில் அவரது ஓட்டுனர் உரிம எண்ணை பயன்படுத்தி வழக்குப்பதிவு செய்யப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளையும் வாகனங்களையும் போலீசார் தங்களது செல்போன் கேமராவில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் சுமார் 80 லட்சம் வாகனங்கள் உள்ளன. ஆண்டுதோறும் சராசரியாக 6.51 சதவீதம் வாகனங்கள் அதிகரித்து வருகிறது. அதிக சாலை விபத்துகள் நடைபெறும் பெரு நகரங்களில் சென்னை முதல் 3 இடங்களுக்குள் உள்ளது.

    சென்னையில் சாலை விபத்துக்களை தடுப்பதற்காக, போக்குவரத்து விதி மீறலில் ஈடுபடும் வாகன ஓட்டிகள் மீது போலீசார் பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    சென்னையில் மொத்தம் 312 சிக்னல்கள் உள்ளன. இதில் 186 சிக்னல்களை ரிமோட் மூலம் இயக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த சிக்னலை இயக்கும் போலீசார் சிக்னல் அருகில் எந்த இடத்தில் நின்றபடியும் ரிமோட் மூலம் சிக்னலை இயக்கலாம்.

    இந்த சிக்னலை இயக்கும் போலீசாருக்கு வேலைப்பளு பெருமளவு குறைந்துள்ளதால் அவர்களுக்கு சிக்னல் பகுதியில் விதிமீறலில் ஈடுபடுவோர்மீது வழக்குப் பதிவு செய்யும் பணியும் வழங்கப்பட்டுள்ளது. அதன் படி போக்குவரத்து போலீசார் விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    ஹெல்மெட் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டுதல், விதிமுறைகளை மீறி பதிவு எண் பலகை வைத்திருத்தல், சிக்னல் நிறுத்த கோட்டை மீறுதல், தவறான திசையில் செல்லுதல் உள்ளிட்ட 7 வகையான விதிமுறை மீறலுக்கு அவர்கள் அபராதம் விதிக்கிறார்கள்.

    இந்த விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளையும் வாகனங்களையும் போலீசார் தங்களது செல்போன் கேமராவில் வீடியோ அல்லது புகைப்படம் எடுக்கிறார்கள். இதில் விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகள் ஆதாரங்களுடன் சிக்கிக் கொள்கிறார்கள்.

    அதன்பிறகு உடனடியாக அபராதம் விதிக்கும் நடைமுறை தொடங்குகிறது. போக்குவரத்து போலீசார் தங்கள் செல்போன்களில் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சம்பந்தப்பட்ட போக்குவரத்து போலீஸ் நிலைய அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு வழக்குபதிவு செய்யப்படுகிறது. பின்னர் சம்பந்தப் பட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதித்து குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.

    இந்த புதிய நடைமுறை கடந்த 1-ந்தேதி முதல் அமலுக்கு வந்தது. ஆரம்பத்தில் சில நாட்கள் விதிமீறலில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளை செல்போன் மூலம் படம் எடுத்து எச்சரித்து அனுப்பினார்கள். அதன்பி றகு அவர்கள் மீது வழக்குப்ப திவு செய்து அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக கடந்த 22 நாட்களில் மட்டும் 42 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதிக பட்சமாக நிறுத்தக் கோட்டை மீறியதாக மட்டும் 17,043 வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டியதற்காக 13,484 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சிக்னலை மீறியதாக 3511 வழக்குகளும், தவறான திசையில் வாகனத்தை ஓட்டி சென்றதாக 7564 வழக்குகளும், விதிமுறையை மீறி பதிவு எண் பலகை வைத்திருந்ததாக 1103 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. தினமும் சராசரியாக 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்படுகிறது.

    சென்னையில் உள்ள முக்கியமான சிக்னல்களில் ஒன்றரை நிமிடத்தில் இருந்து 2 நிமிடம் வரையும், சாதாரண சிக்னல்களில் அரை நிமிடத்தில் இருந்து ஒரு நிமிடம் வரையிலும் காத்திருப்பு நேரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இந்த காத்திருப்பு நேரத்தில்தான் வாகன ஓட்டிகள் விதிமுறைகளை மீறி அபராதம் கட்டி வருகிறார்கள். 

    • முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.
    • 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள்.

    சென்னை :

    சென்னை போக்குவரத்து போலீசார் போதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட் அணியாமல் இருத்தல் போன்ற விதிமீறல் குற்றங்களுக்கு அதிக அளவில் அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் முறையற்ற பதிவெண் கொண்ட வாகனங்களுக்கும் கடந்த வாரம் முதல் ரூ.500 அபராதம் விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் நேற்று முதல் 'ஸ்டாப்லைன்' கோட்டை தாண்டும் விதிமீறல் குற்றத்துக்காகவும் ரூ.500 அபராதம் விதிக்கும் அதிரடி நடவடிக்கையை போக்குவரத்து போலீசார் கையில் எடுத்துள்ளனர். இதற்காக போலீசார் நேற்று சென்னை முழுவதும் 287 இடங்களில் விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தினார்கள். இதுபோன்ற அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கைகளால் வாகன ஓட்டிகள் விழிபிதுங்கி நிற்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    • 9003130103 என்ற செல்போன் எண் வாயிலாக ‘வாட்ஸ் அப்’பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம்.
    • புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

    சென்னை :

    சென்னை போக்குவரத்து போலீஸ் கூடுதல் கமிஷனர் கபில்குமார் சி சரத்கர் நேற்று நிருபர்களுக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    'வாட்ஸ் அப்', 'பேஸ்புக்' , 'டுவிட்டர்', 'இன்ஸ்டாகிராம்' போன்ற சமூக ஊடகங்கள் வாயிலாக போக்குவரத்து போலீசுக்கு தற்போது பொதுமக்கள் புகார் அளித்து வருகிறார்கள். 9003130103 என்ற செல்போன் எண் வாயிலாக 'வாட்ஸ் அப்'பில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். போக்குவரத்து இடையூறுகள், விதிமீறல்கள், போக்குவரத்து போலீசார் செய்யும் தவறுகள் குறித்து புகார்கள் வருகிறது.

    இதுபோல் வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. போக்குவரத்து போலீசின் 'டுவிட்டர்' பக்கத்தை 69 ஆயிரத்து 162 பேர் பின்தொடர்கிறார்கள். அதன் வாயிலாக கடந்த 2 மாதங்களில் 10,400 தகவல்கள் பெறப்பட்டது. அதில் போக்குவரத்து விதிமீறல்கள் தொடர்பாக வந்த 1267 புகார்களில் 90.5 சதவீதம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டது.

    இதுபோல 'வாட்ஸ் அப்' வாயிலாக இந்த ஆண்டு 669 புகார்கள் பெறப்பட்டு உரிய தீர்வு காணப்பட்டது. 'பேஸ்புக்'கை 1 லட்சத்து, ஆயிரத்து 734 பேர் பின் தொடர்கிறார்கள். 'இன்ஸ்டாகிராம்' பக்கத்தை 5,256 பேர்கள் பின்தொடர்கின்றனர்.

    சமூக ஊடகங்கள் வாயிலாக சிலர் தவறான புகார்கள் கூட அனுப்பி விடுகிறார்கள். அதிக அபராத தொகை விதிப்பதால் கோபங்கொண்டு சமீபத்தில் 3 பேர் போக்குவரத்து போலீஸ் மீது புகார் அனுப்பி விட்டனர். பின்னர் தங்கள் தவறுக்கு வருந்தி மன்னிப்பு கேட்டு வீடியோ தகவல் அனுப்பி இருந்தனர். இதுபோல் புகார் அனுப்புகிறவர்கள், சம்பவம் நடந்த இடம், தேதி, நேரம் ஆகியவை பற்றியும் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விசாரணை நடத்த எளிதாக இருக்கும்.

    போலீசுக்கு எதிராக கொடுக்கப்படும் புகார்கள் பற்றியும் உடனுக்குடன் விசாரிக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆனால் அதே நேரத்தில் போலீசுக்கு எதிராக தவறான, அவதூறு பரப்பும் புகார்கள் கொடுப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அது போன்ற தகவல்கள் அனுப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    சென்னை அமைந்தகரையில் போக்குவரத்து போலீசார் மீது தாக்குதல் நடத்திய 4 பேர் சட்டம்-ஒழுங்கு போலீஸ் மூலம் கைது செய்யப்பட்டனர். சமூக ஊடகங்கள் வாயிலாக பொதுமக்கள் நியாயமான, உண்மையான புகார்களை தெரிவிப்பதை வரவேற்கிறோம். ஆலோசனை கூட தெரிவிக்கலாம்.

    அரசு பஸ்கள் மற்றும் இதர அரசு வாகனங்கள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. சட்டம் எல்லோருக்கும் பொதுவானது. அரசு பஸ்சை ஓட்டும் டிரைவர்கள் தவறு செய்தால், அந்த தவறை பொதுமக்களும் செய்கிறார்கள். அரசு வாகன டிரைவர்கள் முன்மாதிரியாக இருக்க வேண்டும்.

    அண்ணாநகர் மாநகர பஸ் பணிமனையில் பணியாற்றுபவர்கள் மீது அதிக அளவில் விதிமீறலில் ஈடுபட்டதாக புகார்கள் வந்துள்ளது. இது குறித்து மாநகர பஸ் போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.

    மாணவர்கள் பஸ் படிக்கட்டில் பயணம் செய்வது ஆபத்தானது. அது பற்றி சட்டம்-ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசார் கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அவ்வாறு பயணம் செய்யும் மாணவர்கள் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியில் புகார் தெரிவிக்கப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்களை வரவழைத்தும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.

    பஸ் டிரைவர், கண்டக்டர்கள் இதை அனுமதிக்க கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பஸ் தினவிழா கொண்டாடுவதை கண்காணித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    போதையில் வாகனம் ஓட்டி போலீசில் மாட்டுபவர்கள் உரிய அபராத தொகையை 14 நாட்களுக்குள் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்தா விட்டால் சம்பந்தப்பட்டவர்களின் குறிப்பிட்ட வாகனங்கள் அல்லது அவர்களின் இதர வாகனங்கள் போன்ற அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    பேட்டியின்போது மக்கள் தொடர்பு உதவி கமிஷனர் விஜயராமுலு உடன் இருந்தார்.

    • அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.
    • அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னையில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசலும் வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதனால் போக்குவரத்து விதி மீறல்களும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன.

    இப்படி விதி மீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளால் நாள்தோறும் விபத்துகளும் அதிகரித்து வருகின்றன. இதனை கருத்தில் கொண்டு போக்குவரத்து போலீசார் விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி அபராதம் விதிப்பதை வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள்.

    வேகமாக வாகனங்களை இயக்கியவர்கள் சிக்னலை மீறி சென்றவர்கள், ஹெல்மெட் அணியாமல் பயணித்தவர்கள் என பலருக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

    இது போன்று அபராதம் விதிக்கும்போது வாகன ஓட்டிகளிடம் போலீசார் பணமாக அபராத தொகையை வாங்குவதில்லை. டிஜிட்டல் பணபரிவர்த்தனையில் மட்டுமே ஈடுபட்டு வருகிறார்கள். பே.டி.எம் கியூ. ஆர்.கோடு மூலமாகவும் ஏ.டி.எம். கார்டு மூலமாகவும் அபராத தொகையை வசூலித்து வருகிறார்கள். விதி மீறலில் ஈடுபடும் நபர்களிடம் பணம் இல்லையென்றால் போலீசார் அபராத ரசீதை கையில் கொடுத்து ஆன்லைனில் பணத்தை செலுத்திவிடுமாறு கூறி விடுவார்கள்.

    இந்த அபராத தொகையை ஆன்லைனில் செலுத்தாமல் பலரும் காலம் தாழ்த்திக்கொண்டே வருவது வழக்கம். பலர் அபராதம் விதிக்கப்பட்டதையே மறந்து போய் இருப்பார்கள். இது போன்ற நபர்களிடம் இருந்து அபராத தொகையை வசூலிப்பதில் போக்குவரத்து போலீசார் ஏற்கனவே தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இதற்காக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனி அலுவலகம் ஏற்படுத்தப்பட்டு அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அபராதம் கட்டாமல் ஏமாற்றி வருபவர்களை போனில் அழைத்து நேரில் வரவழைத்து அபராத தொகையை வசூலித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் விதி மீறலில் ஈடுபடுபவர்களின் அபராத ரசீதை வாங்கி வைத்துக்கொண்டு அதைப்பற்றி கவலைப்படாமல் இருப்பவர்களை சாலையில் மடக்கி பிடித்து அபராத தொகையை வசூலிக்க உத்தரவிட்டுள்ளார்.

    போக்குவரத்து இணை ஆணையர் மயில்வாகனன் மேற்பார்வையில் அனைத்து போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்களும் அபராத வசூல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நடவடிக்கை நேற்று முதல் தொடங்கி உள்ளது. இனி சாலைகளில் நின்று விதிமீறல் வாகனங்களை பிடிக்கும் போக்குவரத்து போலீசார் வாகனங்களின் நம்பரை வைத்து குறிப்பிட்ட வாகனம் விதிமீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாமல் இருந்தால் உடனடியாக அபராத தொகையை வசூலிக்க நடவடிக்கை எடுப்பார்கள். இதற்காக போக்குவரத்து காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 3 இடங்களை தேர்வு செய்து முகாம் அமைத்து அபராத வசூல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நடவடிக்கை நேற்று தொடங்கியது.

    இதன்படி அபராத வசூல் நடவடிக்கைகளில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பம்பரமாக சுழன்று பணியாற்றி வருகிறார்கள். இவர்களில் சிறப்பாக பணி புரிந்து அதிக அபராத தொகையை வசூலிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பாராட்டு பத்திரம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக அபராத தொகையை வசூலிப்பவர்களுக்கு ரொக்கப்பரிசும் வழங்கப்பட உள்ளது. போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் இவர்களை நேரில் அழைத்து பாராட்ட உள்ளார். இப்படி போக்குவரத்து போலீசார் அபராத வசூல் நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.

    உங்கள் வாகனம் எங்கேயாவது போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்டு உள்ளதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து அதற்கான அபராத தொகையை கட்டி விடுங்கள். இல்லையென்றால் நீங்கள் வெளியில் செல்லும்போது போக்குவரத்து போலீசாரிடம் நிச்சயம் மாட்டிக்கொள்வீர்கள். அப்போது இத்தனை நாட்களாக ஏன் அபராத தொகையை கட்டவில்லை என்று போலீசார் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய கட்டாயம் ஏற்படலாம். எனவே உஷாராக இருங்கள்.

    இந்நிலையில் நேற்று நடைபெற்ற சிறப்பு முகாமை போக்குவரத்து இணை கமிஷனர் மயில்வாகனன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வேப்பேரியில் அவர் ஆய்வு செய்த போது உதவி கமிஷனர் கிறிஸ்டோபர், இன்ஸ்பெக்டர் பாண்டிவேல் ஆகியோர் உடனிருந்தனர்.

    • அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
    • சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது.

    சென்னை:

    உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2023ஐ மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில், சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

    • எண்ணூர் விரைவு சாலையில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
    • அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று டிரைவர் இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.

    சென்னை:

    சென்னை எண்ணூர் விரைவு சாலையில் மணலி சி.பி.சி.எல். சந்திப்பு வளைவு பகுதி அருகில் ஏராளமான கனரக வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    அந்த பகுதியில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் சோதனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.

    அப்போது லாரி டிரைவர் ஒருவரை அழைத்தார். அவர் காக்கி சட்டையும், லுங்கியும் அணிந்திருந்தார். எதற்காக சீருடை அணியவில்லை என்று கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் அவருக்கு ரூ.500 அபராதம் விதித்தார்.

    அதற்கு லாரி டிரைவர் என்னால் 500 ரூபாய் அபராதம் கட்ட இயலாது. இரவு முழுக்க கண் விழித்து லாரி ஓட்டினால் தான் என்னால் 500 ரூபாய் சம்பாதிக்க முடியும். அதையும் அபராதமாக கட்டி விட்டால் குடும்பம் நடத்த என்ன செய்வேன் என்று இன்ஸ்பெக்டரிடம் கெஞ்சினார்.

    அதற்கு அவர் விடாபிடியாக அபராதம் விதித்து நீ கட்டாவிட்டால் உன் லாரி உரிமையாரை கட்ட சொல் என்றார். அதற்கு லாரி டிரைவர் விழி பிதுங்கியபடி அவர் கட்டமாட்டார். எனது ஒருநாள் உழைப்பு வீணாகி விட்டதே என்று கண்ணீர் விட்டு புலம்பினார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

    • அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார்.
    • பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    சென்னை:

    அரசு பள்ளி சிறுமி ஒருவர் போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காவிட்டால் ஏற்படும் ஆபத்தை பற்றி பாட்டாக பாடி எல்லோரது கவனத்தையும் ஈர்க்கிறார். அவர் பாடிய பாடல் வருமாறு:-

    பைக்கில ஏறி நீ பண்ணுற ஜாலி

    நீ தவறி விழுந்துட்டா ஆளே காலி

    பத்திரமா போவனும்டா நீயும் வீட்டுக்கு

    பாதை மாறி நீயும் போயிடாத சுடுகாட்டுக்கு

    ரோட்டுலத்தான் சின்ன பசங்க குறுக்க போகும்டா

    பைக்க ஓட்டுற நீ தான் நாலு பக்கமும் பாத்து போகனும்டா

    எட்டு வயசு பையன்கூட பைக்கை ஓட்டுறான்

    அவனை பெத்தவனும் ஓட்டுறத பார்த்து ரசிக்கிறான்

    பைக்கை ஓட்டத்தான் பையன் அடம்புடிக்கிறான்

    பாதி வயசுலையே சுடுகாட்டுல இடம்புடிக்கிறான்

    ஓரம் ஒதுங்கி வழிய விடனும் 108க்கு

    தலையில ஹெல்மெட்டை நீ போடனும் உன் பாதுகாப்புக்கு

    போக்குவரத்து விதிகளைதான் மதிச்சு போகனும்

    ரோட்டுல ட்ராவல் செய்யும் போலீசுக்கும் உதவி செய்யணும்

    போன உசுருதான் மீண்டும் திரும்ப வராது

    ஒருத்தன அநியாயமா கொன்ன பாவம் உன்ன விடாது

    பச்சை, மஞ்ச, சிவப்பு விளக்கு மேல எரியுது

    நீ நின்னு போக வெள்ளகோடு கீழே தெரியுது

    சாலை விதிய மீறி நாம போகக்கூடாது

    தண்ணிய அடிச்சுட்டுத் தான் வண்டிய நீ ஓட்டக்கூடாது

    செஞ்சத் தப்புத்தான் நான் குத்திக்காட்டல

    ரோட்டுல பாத்தததான் பாடுறன்ப்பா இந்த பாட்டுல

    சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வரும் இந்த பாடல் எல்லோரையும் கவர்ந்துள்ளது.

    இந்த பாடலை கேட்ட போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு இந்த குழந்தையைபோல் யாரும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை என்று வெகுவாக பாராட்டி உள்ளார்.

    • போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.
    • சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    சென்னை:

    சென்னையில் திருத்தம் செய்யப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தின்படி தற்போது விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு உயர்த்தப்பட்ட அபராத தொகை விதிக்கப்பட்டு வருகிறது.

    அதன் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு சாலைகளில் போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகனங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள்.

    அதன்படி சென்னையில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக 30 ஆயிரத்து 699 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ரூ.1 கோடியே 88 லட்சத்து 82 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இதில் 12 ஆயிரத்து 625 வழக்குகளில் அபராத தொகை ரூ.70 லட்சத்து 46 ஆயிரம் வசூல் செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக ஹெல்மெட் அணியாததற்காக 8,240 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக ரூ.42 லட்சத்து 78 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    இந்த தகவலை போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ×