search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tree plan cheating"

    தமிழக அரசின் மரம் நடும் திட்டத்தில் ஊழல் செய்தாக கோவை வனத்துறை அதிகாரிகள் மற்றும் காண்டிராக்டர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

    கோவை:

    தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு மாபெரும் மரம் நடும் திட்டம், பசுமை வீடுகள் திட்டம் ஆகிய இரண்டு திட்டங்களை அறிமுகம் செய்தது.

    தமிழகத்தை பசுமையாக மாற்றுவதற்காக வனத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்ட இந்த திட்டங்கள் ஜப்பான் நாட்டு நிதி உதவியுடன் செயல்படுத்தப்பட்டன.

    2011-ம் ஆண்டு முதல் 2019 வரையான 8 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.668.28 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை தவிர மற்ற 31 மாவட்டங்களில் ஒவ்வொரு ஆண்டும் லட்சக் கணக்கில் மரங்கள் நடப்பட்டன. வனப்பகுதிகள் மட்டு மின்றி மற்ற வெட்டவெளி இடங்களிலும் மரங்களை வளர்க்கும் நோக்கத்துடன் இத்திட்டம் அமல்படுத்தப்பட்டது.

    இந்த மாபெரும் மரம் நடும் திட்டத்தில் முறைகேடுகள் நடப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு அடுக்கடுக்கான புகார்கள் சென்றன. இதைத்தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் சில மாவட்டங்களில் இந்த திட்டத்தில் வனத்துறை அதிகாரிகள் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது.

    குறிப்பாக கோவை மண்டல வனத்துறையில் கடந்த 2014-ம் ஆண்டில் இத்திட்டத்தில் முறைகேடுகள் நடந்திருப்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்துள்ளனர். அப்போது, கோவை மண்டலத்திற்குட்பட்ட 16 தொகுப்பு கிராமங்களில் 1.7 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டிருந்தது. இதற்காக ரூ.33.66 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    இதில் 12 போலி பில்களை 2 வனத்துறை அதிகாரிகள் தயாரித்து லட்சக்கணக்கில் மோசடி நடந்துள்ளது. வனத் துறை ஒப்பந்ததாரர் ஒருவர் இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததையும் கண்டுபிடித்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறியதாவது:-

    நாமக்கல் மாவட்ட வனத் துறையில் அதிகாரியாக பணியாற்றி வந்த சேகர்(வயது 55) என்பவர் கடந்த 2014-ம் ஆண்டு கோவை வனத்துறையில் உதவி அலுவலராக கூடுதல் பொறுப்பை கவனித்து வந்தார். அப்போது ஓய்வு பெற்ற வனத்துறை ரேஞ்சர் முருகேசன் என்பவரை இந்த மரம் நடும் திட்டத்துக்காக மீண்டும் பணி வழங்கி உள்ளார்.

    இந்த இருவரும் வனத் துறை ஒப்பந்ததாரர் கணேசன் உதவியுடன் போலி பில்களை தயாரித்து லட்சக் கணக்கில் மோசடி செய்துள்ளனர். குறிப்பாக பிச்சனூர் கிராமத்தில் மரங்கள் நடப்பட்டதாக கூறி 12 போலி பில்கள் தயாரித்து ரூ.10.77 லட்சம் வரை மோசடி செய்திருக்கலாம் என தெரிகிறது.

    இதுதொடர்பாக வனத் துறை அதிகாரிகள் சேகர், முருகேசன் மற்றும் ஒப்பந்ததாரர் கணேசன் ஆகிய 3 பேர் மீதும் ஊழல், கிரிமினல் சதி, நம்பிக்கையை தகர்க்கும் வகையில் செயல்படுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2014-2015-ம் ஆண்டில் மரம் நடும் திட்டத்தில் ரூ.11.03 லட்சம் வரை மோசடி செய்திருப்பதை லஞ்ச ஒழிப்பு போலீசார் கண்டுபிடித்தனர். இதில் 3 வனத்துறை அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதை கண்டுபிடித்துள்ள போலீசார் இது தொடர்பான ஆவணங்களை சேகரித்து வருகின்றனர்.

    ஏற்கனவே மதுரை மாவட்டங்களில் இந்த திட்டங்களில் லட்சக்கணக்கில் மோசடி செய்ததாக 6 அதிகாரிகள் மீது ஊழல் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. #tamilnews

    ×