search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trichy cental jail"

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று 10 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenary
    திருச்சி:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல் கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும் இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு பெற்ற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திவாகர், ராஜா, பிச்சுமணிவேலு, அய்யனார், கணேசன், புகழேந்தி, பால்ச்சாமி, ரவிசங்கர், குமார், சின்னதம்பி ஆகிய 10 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், எஸ்.பி., நிகிலா நாகேந்திரன் ஆகியோர் பல்வேறு அறிவுரைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 10 பேரையும் அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறை முன்பு குவிந்திருந்தனர். பின்னர் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இது பற்றி விடுதலையான கைதிகளின் உறவினர்கள் கூறும் போது, தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக அறிவித்த தகவல் எங்களுக்கு நேற்றிரவுதான் தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களது உறவினர்கள் விடுதலை செய்யப்படுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.

    இதையடுத்து அவர்களை அழைத்து செல்வதற்காக நேற்றிரவே திருச்சி மத்திய சிறைக்கு வந்து விட்டோம். விடுதலையான எங்களது உறவினர்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான உதவிகளை செய்து கொடுப்போம். அரசும் உதவவேண்டும் என்றனர்.

    ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு செய்த கைதிகள் மேலும் ஏராளமானோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். #MGRcentenary
    ×