search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Trinamool Congress"

    • வக்பு வாரிய திருத்த சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனை கூட்டம் நடந்தது.
    • இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது.

    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் மத்திய சிறுபான்மை விவகாரங்கள் துறை மந்திரி கிரண் ரிஜிஜு வக்பு வாரிய திருத்தச் சட்ட மசோதாவைக் கடந்த ஆகஸ்ட் 8-ம் தேதி மக்களவையில் தாக்கல் செய்திருந்தார். இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்த சட்டத்திருத்த மசோதாவில் சர்ச்சைகள் இருக்கும் என்பதால், பாராளுமன்றக் கூட்டுக்குழு ஒன்றை அமைத்து மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தன.

    இதையடுத்து, பா.ஜ.க. எம்.பி. ஜெகதாம்பிகா பால் தலைமையில் மொத்தம் 31 பேர் அடங்கிய பாராளுமன்றக் கூட்டுக் குழு அமைக்கப்பட்டது. இதில் ஆ.ராசா, அசாதுதீன் ஒவைசி, தேஜஸ்வி சூர்யா, நிஷிகாந்த் துபே உள்பட பலர் இடம் பிடித்துள்ளனர்.

    இந்நிலையில், தலைநகர் டெல்லியில் வக்பு வாரிய திருத்தச் சட்டமசோதா தொடர்பான பாராளுமன்ற கூட்டுக்குழு ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

    இந்தக் கூட்டத்தில் எம்.பி.க்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் வெளியாகியது. திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானர்ஜி எழுப்பிய கேள்விக்கு பா.ஜ.க. எம்.பி. அபிஜித் கங்கோபாத்யாய ஆட்சேபம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரம் அடைந்த கல்யாண் பேனர்ஜி தனது அருகிலுள்ள கண்ணாடி டம்ளரை எடுத்து மேஜையில் அடித்ததாகவும், அதில் உடைந்த கண்ணாடி துண்டு கல்யாண் பானர்ஜியின் கையை கிழித்ததாகக் கூறப்படுகிறது.

    இதைத் தொடர்ந்து அருகிலுள்ள எம்.பி.க்கள் கல்யாண் பேனர்ஜிக்கு முதலுதவி செய்தனர். அதன்பின், அவருக்கு கையில் 4 தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, இந்தக் குழுவில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

    பாராளுமன்ற கூட்டுக் குழுவில் சலசலப்பு ஏற்பட்டதால் அங்கு சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.
    • கொல்கத்தா நகரம் போர்க்களம் போல் காட்சியளித்தது

    கொல்கத்தா:

    மேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி பெண் டாக்டர் கடந்த 9-ந்தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.

    நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். பெண் டாக்டர் கொலையை கண்டித்து டாக்டர்கள் போராட்டம் நடத்தினர்.

    இதற்கிடையே மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி கொல்கத்தாவில் தலைமை செயலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை மாணவ அமைப்பினர் அறிவித்தனர்.

    அதன்படி போராட்டக்காரர்கள் பேரணியாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் பயங்கர மோதல் ஏற்பட்டது. போலீசார் மீது கற்கள் வீசப்பட்டன. இதையடுத்து போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டன. இதனால் கொல்கத்தா நகரம் நேற்று போர்க்களம் போல் காட்சியளித்தது.


    இந்த நிலையில் மாணவர்கள் மீது தடியடி மற்றும் கண்ணீர்ப்புகை குண்டுகள் வீசப்பட்டதை கண்டித்து இன்று 12 மணி நேர முழு அடைப்புக்கு மாநில பாஜக அழைப்பு விடுத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. குறிப்பாக கொல்கத்தாவில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டது. அங்கு 4,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அரசு பஸ் டிப்போ, மெட்ரோ நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சந்தைகள் உள்ளிட்ட இடங்களில் போலீசார் குவிக்கப்பட்ட னர். இதேபோல் மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

    பாஜகவின் முழு அடைப்பு போராட்டத்தை தோல்வி அடைய செய்ய ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் அரசு தீவிர நடவடிக்கைகளை எடுத்தது. அரசு பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன.


    முழு அடைப்பின் போது பஸ்கள் மீது கற்கள் வீசப்படும் என்ற சூழல் நிலவியதால் டிரைவர்கள், நடத்துனர்கள் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கும்படி அறிவுறுத்தப்பட்டனர். இன்று காலை 6 மணிக்கு முழு அடைப்பு போராட்டத்தை பாஜக.வினர் தொடங்கினர்.

    அதே வேளையில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. டிரைவர்கள், நடத்துனர்கள் ஹெல்மெட் அணிந்தபடி பஸ்களை இயக்கினர்.

    அதே போல் மற்ற வாகனங்கள் இடையூன்றி செல்ல போலீசார் நடவடிக்கை எடுத்தனர். ஆனாலும் மேற்கு வங்காளம் முழுவதும் காலை முதல் பஸ் சேவை பாதிக்கப்பட்டன. கொல்கத்தாவில் குறைந்த அளவில் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் இயக்கப்பட்டன. இன்று அதிகாலை ஹூக்ளி ரெயில் நிலையத்தில் பாஜகவினர் மறியல் செய்தனர்.

    பராக்பூரில், பாஜகவினர் ரெயில்களை மறித்தனர். இதனால் உள்ளூர் ரெயில்கள் பல்வேறு வழித் தடங்களில் நிறுத்தப்பட்டு உள்ளன. கொல்கத்தாவில் சில கடைகள், மார்க்கெட்டுகள் வழக்கம் போல் திறந்திருந்தது.

    ஆனால் முழு அடைப்பு காரணமாக மோதல் சம்பவங்கள் நடைபெறும் என்பதால் கொல்கத்தாவில் மக்கள் வெளியே வர வில்லை. மக்கள் நடமாட்டம் குறைவாகவே இருந்தது. அரசு பஸ்கள் இயக்கப்பட்ட நிலையில் தனியார் வாகனங்கள் ஓடவில்லை. இதனால் நகரின் முக்கிய சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.

    சிலிகுரி, பிதான்நகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டிருந்தன. ஆனால் மாணவர்கள் வருகை குறைவாக இருந்தது.


    முழு அடைப்பு அறிவிப்பையடுத்து பாஜகவினர் இன்று காலை முதலே சாலைகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பாஜகவினர் பொது மக்களை தடுத்து நிறுத்தி வீடுகளுக்கு செல்ல வேண்டும் என்றும் மாணவர்கள் மீதான தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்க முழு அடைப்பில் பங்கெடுக்க வேண்டும் என்றும் கையெடுத்து கும்பிட்டு கேட்டுக் கொண்டனர்.

    அவர்கள் சாலைகளில் அமர்ந்து மறியல் செய்தனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே போலீசார் விரைந்து சென்று மறியல் செய்தவர்களை அப்புறப்படுத்தினர்.

    மேலும் போராட்டம் நடத்த வந்த பாஜக கட்சியினரை தடுத்து நிறுத்தி அழைத்து சென்றனர். இதில் இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    கூச் பெஹார் பகுதியில் போராட்டம் நடத்த சென்ற 2 பாஜக எம்.எல்.ஏ.க்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    கொல்கத்தாவின் பாட்டா சவுக்கில் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக தலைவர் லாக்கெட் சட்டர்ஜியை போலீசார் கைது செய்தனர். அப்போது எத்தனை பேரை போலீசார் தடுத்து நிறுத்துகிறார்களோ, அந்த அளவுக்கு அதிகமானோர் போராட்டத்தில் கலந்து கொள்வார்கள் என்று சாட்டர்ஜி கூறினார்.

    இதேபோன்று மாநிலம் முழுவதும் பாஜக நிர்வாகிகள், தொண்டர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். மேலும் மாணவர் தலைவர் சயான் லஹிரியும் கைது செய்யப்பட்டார்.

    பாஜகவின் முழு அடைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொல்கத்தா விமான நிலையத்திற்கு அருகில் உள்ள கடைகளுக்கு சென்று பந்த் அனுசரிக்க வேண்டாம் என்று வியாபாரிகளை கேட்டுக் கொண்டனர்.

    இதற்கிடையே பல இடங்களில் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. வடக்கு 24 பர்கானாஸ், அலிபுர்து வார் உள்ளிட்ட இடங்களில் இருதரப்பினர் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. ஒருவர் மீது ஒருவர் கற்களை வீசி பயங்கர தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதட்டம் நிலவியது. இரு தரப்பினருக்கும் இடையே வன்முறை வெடிக்கும் சூழல் நிலவியது. இதையடுத்து போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினார்கள்.

    மோதலில் ஈடுபட்ட இரு கட்சியினரையும் போலீசார் விரட்டியடித்தனர். சிலரை பிடித்து சென்றனர். இதே போல மாநிலம் முழுவதும் இரு கட்சி தொண்டர்கள் இடையே மோதல் சம்பவங்கள் அதிகளவில் ஏற்பட்டது. இதை போலீசார் உடனடியாக தடுத்து நிறுத்தினர்.

    இந்த நிலையில் பாஜக தலைவர் பிரியங்கு பாண்டே கூறும்போது, வடக்கு 24 பர்கானாசின் பட்பாராவில் இன்று அதிகாலை எனது கார் மீது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக குற்றம்சாட்டினார்.

    மேலும் பாஜக நிர்வாகிகள் நேதா அர்ஜுன் சிங், பிரியங்கு பாண்டே ஆகியோர் கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா கூறும்போது, உயர்நிலைப் பள்ளிகளை பாஜகவினர் வலுக்கட்டாயமாக மூடுகின்றனர். மேற்கு வங்காளம் உங்களை ஏன் புறக்கணிக்கிறது என்பதை வலுப்படுத்தியதற்காக பாஜகவுக்கு நன்றி என்று தெரிவித்தார்.

    பாஜகவின் இந்த 12 மணி நேர முழு அடைப்பு போராட்டத்தால் மேற்கு வங்காளத்தில் இயல்பு வாழ்க்கை சிறிய அளவில் பாதிக்கப்பட்டது.

    • குற்றவாளி சஞ்சய் ராய் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் இருப்பதாக புகைப்படம் ஒன்றை பகிர்ந்த மத்திய அமைச்சர்
    • மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்

    கொல்கத்தாவில் R G கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பூதாகரமாக மாறியுள்ள நிலையில் மருத்துவர்கள் போராட்டம், உச்சநீதிமன்றத்தின் தலையீடு, சிபிஐ விசாரணை என தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த விவகாரத்தில் மம்தா தலைமையிலான மேற்கு வங்காள திரிணாமுல் காங்கிரஸ் அரசு மெத்தனப் போக்கில் செய்யப்பட்டதாகக் கண்டனங்கள் எழுந்தன.

    குறிப்பாக பாஜக இந்த விவகாரத்தை முன்வைத்து மம்தா அரசை கடுமையாக சாடி வருகிறது. இந்நிலையில் பெண் மருத்துவர் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட குற்றவாளி சஞ்சய் ராய் , கொல்கத்தா துணை காவல் ஆய்வாளர் அனூப் குப்தா மற்றும் தென் தின்ஜாபூர் [Dinajpur] மாவட்ட திரிணாமுல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர்களுடன் உள்ளதாக  புகைப்படம் ஒன்றை மத்திய அமைச்சரும் மேற்கு வங்காள பாஜக தலைவருமான சுகந்தா மஜூம்தார் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் முதல்வர் மம்தா பானர்ஜியைக் கடுமையாக சாடிய அவர், மம்தா உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

    • பயிற்சி டாக்டர் கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்.
    • குற்றவாளிக்கு சிபிஐ தூக்குத்தண்டனை வாங்கிக் கொடுக்க வேண்டும் என மம்தா வலியுறுத்தல்.

    மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி. கர் மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை பயிற்சி டாக்டர் கொடூரமான வகையில் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். நீதி வேண்டி மருத்துவ மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து அறிந்ததும், குற்றவாளிக்கு தூக்குத் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். இதற்கிடையே இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது.

    சிபிஐ வருகிற ஞாயிற்றுக்கிழமைக்குள் (18-ந்தேதி) முழுமையாக விசாரணை நடத்தி, குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என இறுதிக்கெடு விதித்திருந்தார்.

    இந்த நிலையில் இன்று பேரணியில் ஈடுபட்டார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பெண் எம்.பி.க்களுடன் மம்தா பானர்ஜி பேரணி மேற்கொண்டார். அப்போது பேரணியில் கலந்து கொண்டவர்கள் "நாங்கள் குற்றவாளிக்கு தூக்குத் தண்டனையை விரும்புகிறோம்" என கோஷம் எழுப்பினர்.

    "பொதுமக்களின் போராட்டத்திற்கு தலைவணங்குகிறோம். அவர்கள் சரியான விசயத்தை செய்தார்கள்" என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

    • உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி மம்தா பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.
    • பாஜகவும் இன்று பேரணி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது

    கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் கடந்த 9 ஆம் தேதி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. கொல்லப்பட்ட பெண் மருத்துவருக்கு நீதி கேட்டு கால்கத்தாவில் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் கலவரமாகவும் மாறியது. குற்றவாளி கைது செய்யப்பட்ட நிலையிலும் போராட்டம் ஓய்ந்தபாடில்லை. இதற்கிடையில் இந்த வழக்கை மேற்கு வங்க அரசு சிபிஐ இடம் ஒப்படைத்துள்ளது.

    நாடு முழுவதும் பலவேறு மருத்துவமனைகளில் போராட்டம் நடந்து வரும் நிலையில் கல்கத்தாவில் இன்று மாலை மேற்கு வங்க முதலவர் மம்தா பானர்ஜி உயிரிழந்த பெண்ணுக்கு நீதி வழங்க வலியுறுத்தி பேரணி நடத்த உள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

    முன்னதாக மருத்துவர்களின் போராட்டத்தை அரசியல் ஆதாயத்துக்காக பாஜக மற்றும் சிபிஎம் கட்சிகள் மடை மாற்ற முயற்சிப்பதாக மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியிருந்தார். ஏஐ தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட போலி வீடியோக்கள் மூலம் இணையத்தில் வதந்திகள் பரப்பப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் இன்று பாஜக பேரணி அறிவித்துள்ள நிலையில், மம்தாவும் மாலையில் பேரணி நடத்த உள்ளார். கல்கத்தாவின் மவ்லாலி தொடங்கி தர்மஸ்தலா வழியாக இந்த பேரணியை நடத்த உள்ளார் மம்தா.

    வழக்கு இப்போது சிபிஐ வசம் சென்றுள்ள நிலையில் நியாமான விரைவான நீதியை வலியுறுத்தி மம்தா இந்த பேரணியில் ஈடுபடுவதாக திரிணாமுல் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இந்த வழக்கு விசாரணையை காவல் துறை 90 சதவீதம் வரை முடித்துவிட்டது என்றும் சிபிஐ இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. 

    • மேற்கு வங்காளத்தில் இன்று தியாகிகள் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
    • முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் அங்கு பேரணி நடைபெறுகிறது.

    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தின் இளைஞர் காங்கிரஸ் சார்பில் 1993-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். அதனை நினைவுகூரும் வகையில் தியாகிகள் தினம் ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது.

    தியாகிகள் தினத்தை முன்னிட்டு முதல் மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் பேரணி நடைபெறுகிறது. இந்தப் பேரணியில் சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்து கொண்டார்.

    கொல்கத்தா நகரில் எஸ்பிளனேடு பகுதியில் தர்மதலா என்ற இடத்தில் நடக்கும் பேரணியில் பொதுமக்கள் திரளானோர் பங்கேற்றனர்.

    இந்நிலையில், இந்தப் பேரணியில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பேசியதாவது:

    தேர்ந்தெடுக்கப்பட்ட 38 சதவீத பெண் எம்.பி.க்களைக் கொண்ட ஒரே கட்சி திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே.

    தேர்தலுக்கு முன் அரசியலில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக பலர் கூறினர்.

    ஆனால் அதை செய்ய முடியவில்லை. 38 சதவீதம் பெண்கள் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்த ஒரே கட்சி நாங்கள்தான் என தெரிவித்தார்.

    • ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார்.
    • கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் மீது கவர்னர் மாளிகையில் பணியாற்றிய பெண் ஊழியர் ஒருவர் பாலியல் புகார் அளித்தார். ஆனால், அந்த குற்றச்சாட்டை கவர்னர் மறுத்தார்.

    இதனையடுத்து, 'கவர்னர் மாளிகை செல்வதற்கு பெண்கள் பயப்படுகின்றனர்' என்று அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசியிருந்தார்.

    மேலும், அண்மையில் நடைபெற்ற இடை தேர்தலில் வெற்றி பெற்ற 2 திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு பதிவு பிரமாணம் செய்து வைக்காமல் கவர்னர் இழுத்தடித்து வந்தார். அதனால் அந்த 2 எம்.எல்.ஏ.க்களும் இந்த விவகாரம் தொடர்பாக கவர்னரை விமர்சித்தனர்.

    இந்நிலையில், மம்தா பானர்ஜி மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து மேற்கு வங்க கவர்னர் சி.வி. ஆனந்த போஸ் கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    நேற்று இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. அப்போது, கவர்னருக்கு எதிராக அவதூறாக எந்த கருத்தையும் மம்தாவும் அவரது கட்சியினரும் தெரிவிக்க கூடாது என்று நீதிபதி கிருஷ்ணாராவ் உத்தரவிட்டார். 

    • திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளனர்.
    • இந்த தாக்குதல் சம்பவத்தை கண்டித்த எதிர்க்கட்சிகள் மேற்குவங்கத்தில் தாலிபான் கலாச்சாரம் நிலவுவதாக விமர்சித்தனர்.

    மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.

    சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் பகிர்ந்து மேற்குவங்கத்தில் தலிபான் கலாச்சாரம் நிலவுவதாக கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் உள்ள லட்சுமிபூர் கிராம பஞ்சாயத்தில் நடந்துள்ளது

    இதனையடுத்து தாக்குதலில் ஈடுபட்ட திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

    கைது செய்யப்பட்ட தஜிமுல் இஸ்லாம் திருமணம் தாண்டிய உறவில் இருந்ததாக கூறி அப்பெண்ணையும் ஆணையும் தாக்கியுள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.

    திருமணமான சிறிது நேரத்தில் மணப்பெண் தனது காதலனுடன் ஓடியுள்ளார். பின்னர் அப்பெண் ஊருக்கு திரும்பிய போது அவள் தனது கணவருக்கு 10,000 ரூபாய் இழப்பீடு வழங்கவேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டுள்ளது.

    அந்த பணத்தை அப்பெண் கட்ட தவறியதால் தஜிமுல் இஸ்லாம் அப்பெண்ணை தாக்கியுள்ளார். தஜிமுல் இஸ்லாம் உள்ளூர் திரிணாமுல் காங்கிரஸ் எம்எல்ஏ ஹமீதுல் ரஹ்மானின் நெருங்கிய உதவியாளர் என்று கூறப்படுகிறது.

    திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் கருணால் கஹோஷ் இந்த தாக்குதலை நியாயப்படுத்தி பேசினார். மேற்குவங்கத்தில் இத்தகைய சம்பவங்கள் சாதாரணமாக நடப்பவை என்றும் சிபிஎம் ஆட்சிக்காலத்தில் இருந்தே இத்தகைய சம்பவங்கள் நடந்து வருகிறது என்று அவர் தெரிவித்தார். 

    • அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார்.
    • தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

    மேற்கு வங்கத்தில் நடுரோட்டில் ஒரு ஆணையும் பெண்ணையும் ஒரு ஆண் சரமாரியாக தாக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

    அந்த வீடியோவில் ஒரு ஆண் தனது கையில் உள்ள கட்டையால் அந்த பெண்ணையும் ஆணையும் சரமாரியாக தாக்குகிறார். அதனை சுற்றி உள்ள ஏராளமானோர் வேடிக்கை பார்க்கின்றனர்.

    சமூகவலைதளங்களில் வேகமாக பரவும் இந்த வீடியோவை பகிர்ந்து பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் காட்சிகள் பகிர்ந்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    தாக்குதலில் ஈடுபட்ட நபர் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் என்றும் மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

    இந்த தாக்குதல் சம்பவம் வடக்கு வங்காளத்தின் உத்தர தினாஜ்பூர் மாவட்டத்தில் நடந்துள்ளது என்று சொல்லப்படுகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள காவல்துறையினர் குற்றாவாளியை தேடி வருகிறது.

    • கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார்.
    • எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது.

    கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    இந்நிலையில் கடந்த ஜூன் 27 இல் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார்.

     

    இதைத்தொடர்ந்து தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார்.

    இந்நிலையில் தற்போது மம்தாவின் கருத்து குறித்து பேசியுள்ள ஆனந்தா போஸ், மாநிலத்தின் முதல்வர் என்ற முறையில் மம்தாவை நான் மதிக்கிறேன்.அதுபோல மம்தாவும் நாகரீகமான முறையில் பேச வேண்டியது அவசியம். யாரை வேண்டுமானாலும் சீண்டலாம் என்று அவர் நினைத்துக்கொண்டிருக்கிறார்.

    எனது கேரக்டருக்கு மம்தா போன்ற ஒருவர் களங்கம் விளைவிக்க முடியாது. எனது சுய மரியாதையில் நான் சமரசம் செய்து கொள்ள மாட்டேன். மம்தா என்னை சீண்டவோ பயமுறுத்தவே முடியாது. அந்த அளவுக்கு அவர் வளரவில்லை.

     

    ஒரு முதலமைச்சராக சட்டப்படி என்னை அவர் எதிர்க்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் என்னைக் குறித்து பொய்களைப் பரப்பி எனது பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் மம்தா மேனியாவை என்னால் பொறுத்துக்கொள்ள முடியாது. நான் மம்தா என்ற தனி நபர் மீதே அவதூறு வழக்கு தொடர்ந்தேன். அந்த தனி நபர் முதலமைச்சராக உள்ளார் அவ்வளவுதான் என்று தெரிவித்துள்ளார். 

    • ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பெண் ஒருவர் குற்றம் சாட்டியிருந்தார்.
    • நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி பேசினார்.

     திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்க வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி மீது அம்மாநில ஆளுநர் சி.வி.ஆனந்தா போஸ் கல்கத்தா உயர்நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரிணாமுல் காங்கிரசைச் சேர்ந்த முக்கிய தலைவர்கள் மீதும் ஆனந்தா போஸ் அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார்.

    கடந்த மே 2 ஆம் தேதி மேற்கு வங்க கவர்னர் மாளிகையான ராஜ் பவனில் வேலை செய்து வந்த பெண் ஒருவர் ஆளுநர் ஆனந்தா போஸ் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டியிருந்தார். இதுதொடர்பாக கல்கத்தா போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

     

    இந்த விவகாரம் மேற்கு வங்க அரசியலில் மெல்ல புகைந்து கொண்டிருந்த நிலையில் நேற்று முன் தினம் தலைமைச் செயலகத்தில் நடந்த நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, 'சமீப காலங்களாக எழுந்துள்ள புகார்களால் ராஜ் பவனுக்கு செல்லவே தங்களுக்கு பயமாக இருப்பதாக பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்' என்று பேசியிருந்தார். மேலும் ஆளுநர் மீதான குற்றச்சாட்டு குறித்து திரிணாமுல் கட்சித் தலைவர்களும் பலமுறை பொதுவெளியில் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.

     

    இந்த நிலையில்தான் ஆளுநர் ஆனந்தா போஸ் தனது பெயருக்கு களங்கம் விளைவிப்பதாக மம்தா மீதும் திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் மீதும் நேற்று அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளதாக பார்க்கமுடிகிறது. தமிழகம் மற்றும் கேரளாவைப் போல் மேற்கு வங்கத்திலும் ஆளுநருக்கும் ஆளும் கட்சிக்கும் இடையில் சமீப காலங்களாக மோதல் போக்கு  நிலவி வருவது குறிப்பிடத்தக்கது. 

    • பாராளுமன்றத்தில் திமுக எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தினர்.
    • இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா?

    நேற்று பாராளுமன்றத்தில் நுழைந்த திமுக மாநிலங்களவை எம்.பி எம்.எம்.அப்துல்லாவை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் (CISF) தடுத்து நிறுத்தியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக மாநிலங்களை சபாநாயகர் ஜெகதீப் தன்கருக்கு எம்.பி எம்.எம்.அப்துல்லா கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், "பாராளுமன்றவளாகத்தில் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் என்னிடம் நடந்து கொண்ட வேதம் எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. இதற்கு முன்னர் பாராளுமன்ற பாதுகாப்பு படையினர் இருக்கும் பொழுது இத்தகைய சம்பவங்கள் நடைபெற்றது கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ வேலைகள் இல்லாமல் வேறு வேலைகளுக்காக கூட பாராளும்னறத்தில் நுழைய உரிமை உண்டு என்று நான் நம்புகிறேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் திமுக எம்.பி பாராளுமன்றத்தில் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

    இது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. சாகேத் கோகலே தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "பாராளுமன்றத்தில் மத்திய பாதுகாப்பு படை (CISF) வீரர்களால் திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா தடுத்து நிறுத்தப்பட்டது பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியா கூட்டணி எம்.பிக்களை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காகவே பாராளுமன்றம் பாதுகாப்பு மத்திய பாதுகாப்பு படைக்கு மாற்றப்பட்டதா? மக்கள் பிரதிநிதியான மாநிலங்களவை உறுப்பினரை ஏன் பாராளுமன்றம் செல்கிறீர்கள் எனக் கேட்டது கண்டனத்துக்குரியது" என்று தெரிவித்துள்ளார்.

    இந்தாண்டு மே மாதம் பாராளுமன்ற பாதுகாப்பது பணியை பாராளுமன்ற பாதுகாப்பு படையிடமிருந்து மத்திய பாதுகாப்பு (CISF) படைக்கு மாற்றியதை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது .

    ×