search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Tuticorin Old Harbour"

    தூத்துக்குடி பழைய துறைமுகத்தில் மிதவை கப்பலில் விஷவாயு தாக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளது. #TuticorinHarbour
    தூத்துக்குடி:

    மாலத்தீவில் இருந்து சிங்கப்பூரை சேர்ந்த ஒரு மிதவை கப்பல் (பார்ஜ்) நேற்று முன்தினம் தூத்துக்குடி பழைய துறைமுகத்துக்கு வந்தது. இந்த மிதவை கப்பல் மூலம் தூத்துக்குடியில் இருந்து கருங்கல் ஏற்றி செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது.

    மிதவை கப்பல், மிதப்பதற்கு வசதியாக கப்பலின் அடிப்பகுதியில் 5 மீட்டர் உயரமும், 72 அடி நீளமும், 22 அடி அகலமும் கொண்ட அறை அமைந்து உள்ளது. இந்த கப்பலை, கப்பல் நிறுவன அதிகாரிகள் வருகிற 3-ந்தேதி ஆய்வு செய்ய வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஊழியர்கள் கப்பலை சுத்தம் செய்ய முடிவு செய்தனர்.

    அதன்படி நேற்று அந்த கப்பலில் வேலை பார்த்து வந்த, தூத்துக்குடி தபால் தந்தி காலனியை சேர்ந்த சக்திவேல் (வயது 27), நெல்லை மாவட்டம் கீழ சடையமான்குளம் கீழத் தெருவை சேர்ந்த ஜாம்டேவிட் ராஜா (23) ஆகியோர் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது, மிதவை கப்பலின் அடியில் அறையை சுத்தம் செய்வதற்காக சக்திவேல் இறங்கினார். அவர் இறங்கிய சிறிது நேரத்தில் திடீரென மயங்கி அறைக்குள் விழுந்து விட்டார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜாம் டேவிட்ராஜா, சக்திவேலை மீட்பதற்காக அந்த அறைக்குள் இறங்கினார்.

    ஆனால் அவரும் மயங்கி விழுந்தார். உடனடியாக கப்பல் என்ஜினீயர் திருச்சி அய்யப்பநகர் குமுதம் தெருவை சேர்ந்த திருப்பதி மகன் கோபிநாத் (30) என்பவர் அறைக்குள் இறங்க முயன்றார். ஆனால் அவருக்கும் மயக்கம் வருவது போல் தெரிந்ததால் உடனடியாக வெளியே வந்து விட்டார்.

    இதுகுறித்து உடனடியாக துறைமுக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புபடை வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் மிதவை கப்பலில் அறையில் மயங்கி கிடந்த சக்திவேல், ஜாம்டேவிட்ராஜா ஆகிய 2 பேரையும் மீட்டனர்.

    பின்னர் அவர்களை தூத்துக்குடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி 2 பேரும் பரிதாபமாக இறந்தனர். கோபிநாத்துக்கு தனியார் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து தருவைகுளம் கடலோர பாதுகாப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாயின. மிதவை கப்பலின் அடிப்பகுதியில் உள்ள அறையை சுமார் 7 மாதங்களுக்கு பிறகு நேற்றுதான் சுத்தம் செய்ய முயன்றுள்ளனர்.

    7 மாதமாக அந்த அறை பூட்டியே கிடந்ததால் அதில் வி‌ஷவாயு உருவாகியிருந்தது. இதை சுத்தம் செய்ய சென்ற ஊழியர்கள் அறியவில்லை. வழக்கம்போல் அவர்கள் ஒருவர் பின் ஒருவராக அறைக்குள் சென்றதும் மயங்கி விழுந்துள்ளனர்.

    இதையறிந்த கோபிநாத் உடனடியாக அறையில் இருந்து வெளியேறியதால் உயிர்தப்பினார். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பலியான சக்திவேல் தேனி மாவட்டம் வீரபாண்டி தாலுகா வாயில்பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. #TuticorinHarbour
    ×