search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vana Bhadrakali Amman Temple"

    • பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.
    • ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று மேட்டுப்பாளையம் அருகே தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் உள்ள வனபத்ர காளியம்மன் கோவில்.

    இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிக்குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி, கொடியேற்றம் நிகழ்வு நடைபெற்றது.


    திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி இன்று காலை நடந்தது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு அம்மன், சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து குண்டம் அமைக்கப்பட்ட இடத்தில் எழுந்தருளினார்.

    காலை 5.30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது. தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப்பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. ஏ.கே.செல்வராஜ், முன்னாள் அமைச்சர் செ.ம.வேலுசாமி, மற்றும் போலீசார், உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர். தொடர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். பலர் கைகளில் குழந்தைகளை வைத்துக்கொண்டே குண்டம் இறங்கினர்.


    தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும், தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    பக்தர்களின் பாதுகாப்புக்காக கோவை போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏ.டி.எஸ்.பி. சுரேஷ்குமார் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார்நிலையில் நிறுத்தப்பட்டு இருந்தனர்.

    பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

    ×