search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vedakriswarar Temple"

    • செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை உள்ளது.
    • முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை மீது அமைந்துள்ள சொக்கநாயகி உடனாய வேதகிரீஸ்வரர் கோவிலும், மலை அடிவாரத்தில் தாழக்கோவில் எனப்படும் திரிபுரசுந்தரி உடனாய பக்தவத்சலேஸ்சவரர் கோவிலும் இருக்கின்றன.

    திருக்கழுக்குன்றத்திற்கு, கழுகாசலம், நாராயணபுரி, பிரம்மபுரி, இந்திரபுரி, உருத்திரகோடி, நந்திபுரி மற்றும் பட்சிதீர்த்தம் என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.

    வேதமலையின் மீது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலம் பிரம்மன், இந்திரன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது. மேலும் கழுகுகள் பூஜித்த பெருமையும் கொண்டது.

    நான்கு வேதங்களும் மலையாக அமைந்ததால், இந்த மலைக்கு 'வேதமலை', 'வேதகிரி' என்று பெயர். வேதகிரியின் மீது எழுந்தருளி அருள்பாலிப்பதால் இறைவனுக்கு வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.

    வேதகிரீஸ்வரரை வணங்கி அருள்பெற 567 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலைப்பாதையில் ஏறும் போது வலது புறத்தில் கம்பாநதி சன்னிதி உள்ளது. மலைக் கோவில் கருவறையில் இறைவன் சுயம்புத் திருமேனியாக வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார்.

    பிரகாரத்தில் நர்த்தன விநாயகரும், சொக்கநாயகி அம்பாளும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வெளிப்பிரகார கருவறை கோஷ்டங்களில் புடைப்புச் சிற்பங்களாக அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உள்ளனர்.

    வழக்கமாக சிவாலயங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் பலிபீடமும், கொடிமரமும் மட்டுமே உள்ளன.


    பட்சி தீர்த்தம்

    கிரேதா யுகத்தில் சண்டன் - பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி - சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் - மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி வேதகிரீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார்கள்.

    கலியுகத்தில் பூஷா - விருத்தா ஆகிய முனிவர்கள், இத்தல இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்கள் இருவரும் இத்தல இறைவனிடம் சாயுட்சய வரம் வேண்டும் என்று கேட்டதால், இறைவனின் அருளாசிப்படி கழுகாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு காலம் பகல் வேளையில் வேதமலை வந்து இறைவனை வழிபட்டு அமுதுண்டு வந்தனர். இரண்டு கழுகுகள் வலம் வந்த காரணத்தால் இந்த ஆலயம் 'பட்சி தீர்த்தம்' என்ற பெயர் பெற்றது.


    சங்கு தீர்த்தம்

    மார்க்கண்டேய முனிவர் இவ்வாலயத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்ய முற்பட்டார். அப்போது 'ஓம்' என்ற ஒலியுடன் சங்கு ஒன்று தீர்த்தத்தில் தோன்றியது. அந்த சங்கைக் கொண்டு சிவபெருமானை, முனிவர் பூஜித்தார்.

    அன்று முதல் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. இதனால் இத்தீர்த்தம் 'சங்கு தீர்த்தம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத்தீர்த்தத்தில் கடந்த மார்ச் மாதம் சங்கு தோன்றியது குறிப்பிடத்தக்கது.


    வேதமலையின் சிறப்பு

    வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள வேதமலையானது, சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பல அரிய மூலிகைகள் நிறைந்த இந்த மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மலையை வலம் வருகிறார்கள். வேதகிரீஸ்வரரை தரிசிக்க வேதமலையில் ஏறும்போது மலைப்பாதையில் இடை இடையே ஓய்வெடுத்துச் செல்ல சிறு மண்டபங்கள் உள்ளன.

    இந்த திருக்கோவிலில் இறைவனை தரிசிக்க ஏறிச் செல்ல ஒரு மலைப்பாதையும், தரிசனத்தை முடித்துக் கொண்டு இறங்கி வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயமானது தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் பேருந்துகள், திருக்கழுக்குன்றம் வழியாகவே செல்லும்.

    • சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்றுவதாக நம்பப்படுகிறது.
    • சங்கு நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்குதீர்த்த குளத்தில் 12 ஆண்டுக்கு ஒருமுறை சங்கு தோன்று வதாக நம்பப்படுகிறது. சங்குகள் பெரும்பாலும் கடலில் உள்ள உப்பு நீரில் தோன்றும். ஆனால் நன்னீரில் உருவாவது அதிசயமாக பார்க்கப்படுகிறது.

    சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தெப்பக்குளத்தில் சங்கு தோன்றியது. அதன்பின்னர் நேற்று காலை அந்த குளத்தில் மீண்டும் புனித சங்கு தோன்றி வெளியே வந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர். இதனை காண ஏராளமான பக்தர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    இதைத்தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் புதிதாக தோன்றிய சங்கிற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிறிய பல்லக்கில் மேள தாளத்துடன் ஊர்வலமாக மாடவீதியை சுற்றி வந்து தாழக்கோவிலை வந்தடைந்தது.

    பின்னர் பக்தர்கள் பார்வைக்காக அங்கு சங்கு வைக்கப்பட்டது. நேற்று இரவு 8 மணிவரை திரளான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சங்கை பார்த்து தரிசனம் செய்து சென்றனர்.

    இன்று சிவராத்திரி என்பதால் காலை முதலே கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்தது. குளத்தில் தோன்றிய சங்கை பார்க்க ஏராளமான பக்தர்கள் சுற்றுப்புற பகுதியில் இருந்து வந்தனர். இதனால் கோவிலில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. பக்தர்கள் பக்தியுடன் சங்கை பார்த்து வழிபட்டு சென்றனர்.

    உள்ளுர் மற்றும் வெளியூர் பக்தர்கள் அதிகளவில் சங்கை பார்க்க வருவதால் வருகிற 13-ந் தேதி வரை சங்கு தரிசனம் செய்ய கோவில் நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. சங்கை சுற்றி பூ அலங்காரம் செய்து பக்தர்கள் பார்வைக்கு வைத்து உள்ளனர்.

    சிவராத்திரியை முன்னிட்டு தாழக்கோவில் கிழக்கு கோபுரம் மின்வி ளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கிறது. சங்கு தரிச னம் நடைபெறும் நாட்கள் வரை கோபுர மின் அலங்காரமும் இருக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.
    • 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரர் கோவில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்குள்ள சங்கு தீர்த்த குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு வெளியே வரும்.

    இந்த சங்கு குளத்தில் கரை ஒதுங்கியதும், கோவில் நிர்வாகம் சார்பில் அதற்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படும். இதைத் தொடர்ந்து கார்த்திகை மாதத்தின் கடைசி திங்கட்கிழமையில் மலை மீது வேத கிரீஸ்வரருக்கு நடைபெறும் 1008 சங்காபிஷேகத்தில் குளத்தில் பிறந்த புதிய சங்கு முதன்மை பெறும்.

    இதனை கண்டு வழிபட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவார்கள். சங்கு தீர்த்த குளத்தில் கடைசியாக கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 1-ந்தேதி புதிய சங்கு வெளியேவந்தது.

    இதனால் சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கின் வருகைக்காக பக்தர்கள் ஆவலுடன் காத்திருந்தனர்.

    இந்த நிலையில் இன்று காலை குளத்தில் புதிய சங்கு கோவில் குளக்கரை யில் கரை ஒதுங்கி இருந்தது. இதனை கண்ட பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.

    இதுபற்றி கோவில் நிர்வாகத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதற் கிடையே சங்கு தீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்தது பற்றி அறிந்ததும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் ஏராளமானோர் குவிந்தனர். அவர்கள் சங்கை பார்த்து பயபக்தியுடன் வழிபட்டனர். இதனால் கோவில் குளக்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

     

    பின்னர் அந்த சங்கிற்கு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து சங்கு பாதுகாப்பாக கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது.

    மார்கண்டேயர் அனைத்து சிவாலயங்களுக்கும் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோவிலுக்கு வந்து உள்ளார்.அப்போது, சிவ பெருமானை வழிபடுவதற்காக தீர்த்தம் எடுக்க பாத்திரம் இல்லாததால், இங்குள்ள குளத்தில் தீர்த்த பாத்திரம் வேண்டி சிவபெருமானை வணங்கியதாவும் அப்போது குளத்தில் இருந்து சங்கு ஒன்று பிறந்து கரை ஒதுங்கியதாகவும் நம்பப்படுகிறது. இந்த சங்கை சுவாமியே வழி பாட்டுக்கு வழங்கி யதாகவும் தல வரலாறு கூறுகிறது. இதனால் இந்த குளத் துக்கு சங்கு தீர்த்த குளம் என பெயர் பெற்று உள்ளது. மேலும் 12 ஆண்டுக்கு ஒரு முறை குளத்தில் இருந்து சங்கு வெளியே வருவது பக்தர்களை ஆச்சரியப்பட வைத்து வருகிறது.

    நாளை சிவராத்திரி விழா நடைபெற உள்ள நிலையில் இன்று சங்குதீர்த்த குளத்தில் புதிய சங்கு வெளியே வந்ததால் பக்தர்கள் விசேஷமாக கூறி மகிழ்ச்சி அடைந்தனர். இன்றுடன் எடுத்த சங்குடன் மொத்தம் 8 சங்குகள் கோவிலில் இருப்பதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்து உள்ளனர்.

    • நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.
    • 19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது.

    மாமல்லபுரம்:

    திருக்கழுகுன்றம் வேதகிரீஸ்வரர் கோவில் ஆறுமுக சுவாமி கந்த சஷ்டி உற்சவம் நாளை மறுநாள் துவங்குகிறது. இந்த உற்சவம் வரும் 18-ந் தேதி வரை நடைபெறுகிறது. தினமும் அபிஷேகம், சிறப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெறுகிறது. நிறைவு நாளான 18-ந் தேதி இரவு தென்மாட வீதியில் சூரசம்ஹாரம் நடத்தப்படுகிறது.

    19-ந் தேதி மாலை சந்தனக்காப்பும், 20-ந் தேதி பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. இந்து சமய அறநிலையத்துறையினர் கந்த சஷ்டி உற்சவவிழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

    ×