search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vilavancode Constituency"

    • பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துடன் திறந்த வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.
    • ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைக்கேற்ப அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    களியக்காவிளை:

    விளவங்கோடு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பா்ட் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அவர் மேல்பாலை பகுதியில் பாராளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்துடன் திறந்த வாகனத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது வேட்பாளர் தாரகை கத்பர்ட் பேசியதாவது, நான் உங்களில் ஒருவராக போட்டியிடுகின்றேன். இயற்கை வளங்களும், பிரசித்திபெற்ற திருக்கோவில்கள், தேவாலயங்கள், பள்ளிவாசல்கள் உள்ள பகுதியாக இருக்கின்றது.

    நமது மாவட்டத்தின் பொருளாதார வளர்ச்சியில் மிகப்பெரிய பங்கு வகிப்பது நமது விளவங்கோடு சட்டமன்ற தொகுதி என்பது பெருமைக்குரிய விஷயம். ரப்பர் விவசாயிகளின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவும், நமது மக்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்திடும் வகையில் ரப்பர் தொழிற்சாலை நமது விளவங்கோடு சட்டமன்ற தொகுதியில் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது பகுதியில் விளையும் முந்திரி, பலா, வாழை, தேன் உள்ளிட்ட பொருட்களை உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மலை கிராமங்களில் வசிக்கும் பழங்குடியின மக்களின் அடிப்படை தேவையான மின்சாரம், குடிநீர் வசதிகள் கிடைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். அதேபோல் ரேஷன் கடை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைக்கேற்ப அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மொத்தத்தில் விளவங்கோடு தொகுதி முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன்.

    எனவே பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் விஜய் வசந்த் எம்.பி.க்கும், எனக்கும் (தாரகை கத்பர்ட்) கை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ்குமார், மாவட்ட தலைவர் பினுலால் சிங், காங்கிரஸ் நிர்வாகி டாக்டர் சாமுவேல் ஜார்ஜ் கலையரசர் மற்றும் கூட்டணி கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.

    • 3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதரணி, இந்த முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தாமரையை மலரச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது.
    • கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க. தற்போது தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது.

    நாகர்கோவில்:

    தமிழகத்தில் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலோடு, கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியும் இடைத்தேர்தலை சந்திக்க உள்ளது.

    மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் குறைந்த வாக்காளர்களை கொண்ட இந்த தொகுதியில், காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளின் வேட்பாளர்கள் தான் அதிக வெற்றியை பெற்றுள்ளனர். இந்த தொகுதி 1952-ம் ஆண்டு முதல் தேர்தலை சந்தித்து வருகிறது.

    ஆனால் 1952 மற்றும் 1954-ல் திருவாங்கூர் கொச்சி சட்டமன்றத்திற்கு தேர்தல் நடந்தது.1957, 62, 67-ம் ஆண்டுகளில் சென்னை மாகாண சட்டசபைக்காக தேர்தலை சந்தித்தது. 1971-ம் ஆண்டு முதல் தான் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கான தேர்தலை விளவங்கோடு எதிர்கொண்டுள்ளது. அது முதல் 12 பொதுத் தேர்தல்களை விளவங்கோடு சந்தித்துள்ளது. இதில் காங்கிரஸ் 7 முறையும், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு 5 முறையும் வெற்றிக்கனியை பறித்து உள்ளன.

    இதில் கடந்த 3 தேர்தல்களில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தொடர்ச்சியாக வெற்றி பெற்றவர் விஜயதாரணி. இவர் சமீபத்தில் பாரதிய ஜனதா கட்சியில் இணைந்ததால், தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். அதனால்தான் விளவங்கோடு தொகுதி தற்போது இடைத்தேர்தலை சந்திக்கிறது.

    3 முறை கை சின்னத்தில் வென்ற விஜயதாரணி, இந்த முறை பாரதிய ஜனதா சார்பில் போட்டியிட்டு தாமரையை மலரச் செய்வாரா? என்ற எதிர்பார்ப்பு பலரிடமும் உள்ளது. ஆனால் அவர் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிடுவாரா? என்பது சந்தேகம் என்கின்றனர். தொகுதியைச் சேர்ந்த பலரும். பாரதிய ஜனதா சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியை தழுவிய ஜெயசீலனும் களம் இறங்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

    அதேநேரம் காங்கிரஸ் கட்சியும் தனது பெருமையை நிலைநாட்ட தொகுதியில் வெற்றியை தக்க வைக்க வேண்டும் என்பதில் முனைப்பாக உள்ளது. தொகுதி தங்களுக்கு தான் ஒதுக்கப்படும் என்ற நம்பிக்கையில், மாவட்டத்தில் உள்ள கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போதே சீட் கேட்டு, சென்னை மற்றும் டெல்லியில் முகாமிட்டு காய் நகர்த்தி வருகின்றனர்.

    கடந்த தேர்தலில் பாரதிய ஜனதாவுக்கு தொகுதியை விட்டுக்கொடுத்த அ.தி.மு.க. தற்போது தனித்து களம் இறங்க முடிவு செய்துள்ளது. காங்கிரஸ்-கம்யூனிஸ்டு கட்சிகளின் கோட்டையான விளவங்கோடு தொகுதியில் வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கும் என தற்போதே அவர்கள் ஆராய்ந்து வருகின்றனர். தங்கள் கட்சிக்கு உள்ள செல்வாக்கு, கடந்த தேர்தலில் கிடைத்த வாக்குகள் போன்றவற்றை வைத்து அ.தி.மு.க.வினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    விளவங்கோடு தொகுதியில் தற்போது ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 694 ஆண் வாக்காளர்கள், ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 685 பெண் வாக்காளர்கள், 3 இதர வாக்காளர்கள் என மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 382 வாக்காளர்கள் உள்ளனர். விளவங்கோடு தொகுதியில் காங்கிரஸ் கட்சி 8-வது முறையாக மகுடம் சூடுமா? வேறு கட்சிகள் வெற்றியை தட்டிப்பறிக்குமா? என்பது பலரது எதிர்பார்ப்பாக உள்ளது.

    ×