search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "woman employee murder"

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே குடும்ப தகராறு காரணமாக மின்வாரிய பெண் ஊழியரை கணவர் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள பழமங்கலத்தை அடுத்துள்ளது கரட்டூர் கிராமம். இந்த ஊரை சேர்ந்தவர் தமிழ்மணி (வயது 45). எல்.ஐ.சி.ஏஜண்டாக உள்ளார்.

    இவரது மனைவி பெயர் ஜோதிமணி (35). திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. குழந்தைகள் கிடையாது.

    இந்த நிலையில் கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வீட்டின் மற்றொரு பகுதியில் ஜோதிமணி தனியாக வாழ்ந்து வந்தாராம்.

    பணி காரணமாக ஜோதிமணி பல்லடம் மற்றும் காங்கயத்தில் இருந்து வந்துள்ளார். விடுமுறை நாட்களில் மட்டும் சிவகிரி அருகே கரட்டூருக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜோதிமணி ஆயுத பூஜை விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார்.

    அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததால் கணவர் தமிழ்மணி மனைவி ஜோதிமணியிடம் விவாகரத்து வாங்கி பிரிந்து விடுவோம் என்று கூறுவாராம். ஆனால் அதற்கு ஜோதிமணி விவாகரத்துக்கு எல்லாம் சம்மதிக்க மாட்டேன். உங்களிடம்தான் உங்கள் மனைவியாகத்தான் வாழ்வேன் என்று கூறி வந்துள்ளார்.

    நேற்று மாலை 6.30 மணியளவில் இதேபோல் கணவன் மனைவி இடையே விவாகரத்து தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்மணி மனைவி ஜோதிமணியை அடித்து உதைத்தார். மேலும் வீட்டில் கிடந்த அரிவாளால் மனைவியை சரமாரியாக வெட்டினார்.

    இதில் ஜோதிமணியின் ஒரு கை துண்டானது. மேலும் தலை மற்றும் உடலில் வெட்டு விழுந்ததில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ஜோதிமணி பரிதாபமாக இறந்தார்.

    மனைவி இறந்ததும் கணவர் தமிழ்மணி அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொடுமுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் பெருந்துறை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜாகுமார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்.

    தலைமறைவான தமிழ்மணியை போலீசார் தேடி வருகிறார்கள்.
    ×