search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women's Self Help Committee"

    • 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது.
    • மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள்.

    மதுரை:

    மதுரையில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

    வரலாற்று சிறப்பு மிக்க மதுரை யானைமலை ஒத்தக்கடை பகுதியில் நடைபெறும் இந்த விழா நான் அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பாகவே கடந்த 2024-ம் ஆண்டு தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கியதிலும், 72 ஆயிரம் மகளிர் சுயஉதவிக்குழு வினருக்கு கடனுதவி வழங்கியதிலும் இடம் பிடித்துள்ளது.

    மதுரை என்றாலே அமைச்சர் மூர்த்தி, மூர்த்தி என்றாலே மதுரை என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரர் ஆவார். இன்று நடைபெறும் விழாவில் 12 ஆயிரத்து 307 மகளிர் சுயஉதவி குழுக்களை சேர்ந்த 17 ஆயிரம் பேருக்கு ரூ.108 கோடியில் கடனுதவியும், அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ரூ.298 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டுள்ளன.


    கடந்த 2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாரத்தை நான் மதுரையில் தான் தொடங்கினேன். மதுரை, விருதுநகர், தேனி ஆகிய தொகுதிகளுக்கு சென்று பொதுமக்களிடம் வாக்கு கேட்டேன்.

    அவர்களும் வாக்களித்து எங்கள் கூட்டணியை வெற்றிபெற செய்திருக்கிறார்கள். அதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

    பள்ளி மாணவர் என்றால் தேர்வு நடத்தியும், விளையாட்டு வீரராக இருந்தால் விளையாட்டுத் திறன் மூலமாகவும் மதிப்பீடு செய்யப்படுகிறது.

    தேர்தல் என்றால் வாக்காளர்கள் மூலம் அவர்கள் அளிக்கும் வெற்றியின் அடிப்படையில் அரசின் ஸ்திரத்தன்மை உறுதி செய்யப்படுகிறது.

    அந்த வகையில், திராவிட மாடல் அரசுக்கு நற்சான்றிதழ் அளிக்கும் விதமாக பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணியை 40-க்கு 40 என்ற விகிதத்தில் வெற்றி பெறச்செய்து இன்னும் எங்களை கூடுதலாக உங்களுக்கு உழைக்க நிர்பந்தித்து உள்ளீர்கள்.

    தமிழ் பண்பாட்டுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட மதுரையை நோக்கி ஏராளமான திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.

    அந்த வகையில் இன்று நடைபெறும் விழாவில் மகளிர் சுய உதவிக்குழுவினர் அதிகளவில் வந்துள்ளார்கள்.

    அரசின் சேவைகளை நீங்கள் தேடிச்சென்ற காலம் மாறி இன்று உங்களை தேடி அரசின் திட்டங்கள் வந்து கொண்டிருக்கின்றன.


    கடந்த காலத்தில் ரூ.30 ஆயிரத்து 75 கோடி என்று இருந்த வங்கி கடன் இணைப்பு தற்போது ரூ.35ஆயிரம் கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை ரூ.17 ஆயிரம் கோடி வங்கிக்கடன் இணைப்புகளை திராவிட மாடல் அரசு வழங்கி உள்ளது.

    31 ஆயிரம் மகளிர் குழுவைச்சேர்ந்த 3 லட்சத்து 74 ஆயிரம் பேருக்கு ரூ.290 கோடி கடன் வழங்கியிருக்கிறோம். 2 ஆயிரம் பேருக்கு வீட்டு மனை பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு வீட்டுமனை பட்டா பெறுவதில் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து இருக்கிறார்கள்.

    ஆனால் இன்றைய விழாவின் மூலம் வீட்டுமனை பட்டா பெற்ற 12 ஆயிரம் பேரும் இனிமேல் தங்கள் வீடுகளில் நிம்மதியாக தூங்கலாம். உங்களின் உரிமைகளை திராவிட மாடல் அரசு நிலைநாட்டி இருக்கிறது.

    2-வது முறையாக தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்றதும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்த கட்டணமில்லா பேருந்து சேவை மூலம் 520 பேர் பயணம் செய்துள்ளனர். மதுரையில் மட்டும் 21 கோடி பேர் கட்டணமில்லா பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்.

    பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் பசியுடன் செல்லக்கூடாது என்பதை உணர்த்தும் வகையில் காலை உணவுத்திட்டத்தை அறிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்துள்ளார். இந்த காலை உணவுத்திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சம் பேர் பயனடைந்து உள்ளனர்.

    மதுரையில் மட்டும் 80 ஆயிரம் மாணவர்கள் பசியாறி வருகிறார்கள். இதேபோல் கல்லூரி மாணவிகளுக்கான புதுமைப்பெண் திட்டம், மாணவர்களுக்கான தமிழ்புதல்வன் திட்டம் ஆகியவற்றின் மூலம் தமிழகம் முழுவதும் 7 லட்சம் பேரும், மதுரையில் மட்டும் 15 ஆயிரம் பேரும் பயனடைந்து உள்ளனர்.

    கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தின் மூலம் 1 கோடியே 16 லட்சம் பேர் மாதந்தோறும் ரூ.1000 பெறுகிறார்கள். மதுரையில் மட்டும் 4 லட்சத்து 62 ஆயிரம் பேர் இந்த உரிமைத்தொகையை பெறுகின்றனர்.

    இதேபோல் உயர்கல்வியில் தமிழக முதலிடத்தை பிடித்துள்ளது. வறுமை ஒழிப்பு, சுகாதாரம் ஆகியவற்றிலும் தொடர்ந்து முதலிடம் பெற்று வருகிறது.

    இன்று நலத்திட்ட உதவிகள் பெற்ற பொதுமக்கள், மகளிர் குழுவினர் அரசின் சாதனைகளை பிறருக்கும் எடுத்துக்கூற வேண்டும். மகளிர் குழுவுக்கு வழங்கப்பட்டது வெறும் கடன் அல்ல.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை. இந்த கடன் உதவியை கொண்டு மகளிர் குழுவினர் தொழில் முனைவோராக உருவாக வேண்டும். அதற்கு அரசும், முதல்-அமைச்சரும் துணை நிற்பார்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×