300சிசி-ல புது பைக் பார்சல்.. டிவிஎஸ்-இன் அசத்தல் அறிவிப்பு..!
- புதிய மாடல் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்டு இருக்கிறது.
- புதிய டிவிஎஸ் அபாச்சி RTR310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படலாம்.
டிவிஎஸ் மோட்டார் கம்பெனி நிறுவனம் செப்டம்பர் 6-ம் தேதி புதிய அறிவிப்புகளை வெளியிட இருக்கிறது. இதற்கான நிகழ்வில் புதிய மோட்டார்சைக்கிள் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது. எனினும், இந்த மாடலின் பெயர் மற்றும் விவரங்களை டிவிஎஸ் நிறுவனம் ரகசியமாகவே வைத்திருக்கிறது. தற்போதைய தகவல்களின் படி புதிய மாடல் அபாச்சி RR310 மாடலை தழுவி உருவாக்கப்பட்ட RTR310 ரோட்ஸ்டர் மாடலாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக இந்த மோட்டார்சைக்கிள் டெஸ்டிங் செய்யப்படும் போது எடுக்கப்பட்ட ஸ்பை படங்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. அதன்படி இந்த மாடலின் டெயில் லைட் டுவின்-பாட் டிசைன் கொண்டிருக்கும் என்றும் பின்புறம் டயர் ஹக்கரில் நம்பர்பிலேட் மற்றும் இன்டிகேட்டர்கள் பொருத்தப்பட்டு இருக்கும் என்று தெரியவந்துள்ளது.
தோற்றத்தில் இந்த மாடல் RR310-ஐ விட வித்தியாசமாக காட்சியளிக்கிறது. அந்த வகையில் புதிய அபாச்சி RR310 மாடலில் இருப்பதை போன்றில்லாமல், RTR310 மாடலில் அப்ரைட் எர்கோனோமிக்ஸ் வழங்கப்படுகிறது. இதனால் ஹேன்டில்பார் அகலமாக காட்சியளிக்கிறது. புதிய மாடலின் மெக்கானிக்கல் அம்சங்கள் RR310 மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்படும் என்று தெரிகிறது.
அந்த வகையில், புதிய டிவிஎஸ் அபாச்சி RTR310 மாடலில் 312.2சிசி, சிங்கில் சிலின்டர், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்படும் என்று தெரிகிறது. இந்த யூனிட் 33.5 ஹெச்பி பவர், 27.3 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்தும் திறன் கொண்டிருக்கிறது. ஹார்டுவேரை பொருத்தவரை அப்சைடு டவுன் முன்புற ஃபோர்க்குகள், பின்புறம் மோனோஷாக் யூனிட், இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.