உள்ளூர் செய்திகள்

அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார். 

அணைக்கரையில் வெள்ள தடுப்பு பணி; அமைச்சர்- கலெக்டர் ஆய்வு

Published On 2022-09-03 09:56 GMT   |   Update On 2022-09-03 09:56 GMT
  • ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.
  • வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தஞ்சாவூர்:

தஞ்சை மாவட்டம் அணைக்கரை ஆய்வு மாளிகையில் கொள்ளிட கரையோர பகுதிகளில் வெள்ளத்தடுப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து அரசு உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-

காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதால் ஆற்றின் கரையோர தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் வெள்ள அபாயம் ஏற்படாமல் தடுக்கும் பொருட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து துறைகளையும் ஒன்றிணைத்து பல்வேறு குழுக்கள் தயார் நிலையில் உள்ளது.

பொதுமக்கள் பேரிடர் காலங்களில் தங்குவதற்கு ஏதுவாக அடிப்படை வசதிகளுடன் கூடிய தற்காலிக பாதுகாப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்புக்குழு, தீயணைப்புத்துறை ஆகியவை தயார் நிலையில் உள்ளது.

பாதுகாப்பு முகாமில் பொதுமக்களுக்கு வேண்டிய அடிப்படை வசதிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் பேரிடர் மேலாண்மை கட்டுப்பாட்டு அறை உள்ளது.

இலவச அழைப்பு எண்-1077 மற்றும் தொலைபேசி எண்கள் 04362-264114, 264115 மற்றும் 94458-69848 என்ற வாட்ஸ்அப் எண் மூலம் மழை, வெள்ள சேதம் தொடர்பாக புகார் தெரிவிக்கலாம்.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் தண்ணீர் செல்வதை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், அரசு தலைமை கொறடா கோவி.செழியன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

Tags:    

Similar News