வாசுதேவநல்லூர் தொகுதியில் பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும்- அமைச்சரிடம், ராஜா எம்.எல்.ஏ. கோரிக்கை
- தலையணை மற்றும் கோட்டமலையாறு பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 140 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
- எம்.எல்.ஏ.விடம் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி வடக்கு மாவட்டம் வாசுதேவநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட தலையணை மற்றும் கோட்டமலையாறு பகுதிகளில் சுமார் 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 140 பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
கடந்த நவம்பர் 27-ந் தேதி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பழங்குடியின மக்களோடு சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினார். அப்போது பழங்குடியின மக்கள் தங்களுக்கு வீட்டு வசதி, வீட்டுமனைபட்டா, அங்கன்வாடி, ரேஷன் கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி அவரிடம் மனு அளித்தனர். மனுவைப் பெற்றுக் கொண்ட ராஜா எம்.எல்.ஏ. அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கபடும் என உறுதி அளித்தார்.
இந்நிலையில் தலைமை செயலகத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழியை சந்தித்து வாசுதேவநல்லூர் தொகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மனு அளித்தார். மனுவை பெற்றுக் கொண்ட அமைச்சர் அந்த பகுதிக்கு நேரில் வந்து ஆய்வு செய்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.