கோவையில் மேட்டுப்பாளையம் வழித்தடத்தில் பஸ் கட்டணம் குறைப்பு
- திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் நாளை (மார்ச் 29) முதல் அமலாகும்
- கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவிக்கலாம்
கோவை,
சாய்பாபா கோவில் புதிய பஸ் நிலையத்தை (ஸ்டேஜ்) அடிப்படையாகக் கொண்டு, கோவை-மேட்டுப்பாளையம் இடையே இயங்கும் பஸ்களில் திருத்தியமைக்கப்பட்ட கட்டணம் நாளை (மார்ச் 29) முதல் அமலாகும் என போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து பல ஆண்டுகளாக மேட்டுப்பாளையம், ஊட்டிக்கு அரசு, தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால், நகருக்குள் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் நோக்கில், சாய்பாபா கோவில் அருகே புதிய பஸ் நிலையம் 2010-ம் ஆண்டு கட்டப்பட்டது. 'புதிய பஸ் நிலையத்திலிருந்து பஸ்களை இயக்கினால், காந்திபுரம் செல்வதற்கு நகர பஸ் அல்லது வேறு வாகனங்களை பொதுமக்கள் நாட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.
இது தங்களது வசூலைப் பாதிக்கும் என்று கருதிய தனியார் பஸ் உரிமையாளர்கள், காந்திபுரம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையத்துக்கு பஸ்களை இயக்கும் வகையில் ஐகோர்ட்டில் உத்தரவு பெற்றனர்.
இருப்பினும் சாய்பாபா கோவில் பஸ் நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்ல வேண்டுமென கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து, சாய்பாபா கோவில் அருகில் உள்ள பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் சென்றாலும், காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்வதற்கான கட்டணத்தையே வசூலித்து வந்தனர்.
இந்நிலையில் புதிய பஸ் நிலையத்திலிருந்து மேட்டுப்பாளையம் சென்றால், பயண தூரம் குறைவதால், புதிய ஸ்டேஜ் உருவாக்கி, அதற்கேற்ப கட்டணத்தை குறைக்க வேண்டும்" என முந்தைய மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டனர். ஆனால், அந்த உத்தரவுகளை எதிர்த்து தனியார் பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் (எஸ்டிஏடி) மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர்.
இதன் காரணமாக, தனியார் பஸ் திருத்தி யமைக்கப்பட்ட கட்டணத்தை வசூலிக்காமல் பழைய கட்டணத்தையே பல ஆண்டுகளாக வசூலித்து வந்தனர்.
இந்நிலையில், 2022-ம் ஆண்டு அப்போதைய ஆட்சியர் சமீரன் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, பஸ் உரிமையாளர்கள் மாநில போக்குவரத்து மேல்மு றையீட்டு தீர்ப்பாயத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த தீர்ப்பாயம், கடந்த பிப்ரவரி 3-ம் தேதி அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்தும், திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை தனியார் பஸ் உரிமையாளர்கள் வசூலிக்கவில்லை.
இந்நிலையில், கோவை-மேட்டுப்பாைளயம் வழித்தடத்தில் இயங்கும் அனைத்து பஸ் உரிமையாளர்கள், தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தி னர், ேகாவை அரசுப் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர், அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் ஆகியவற்றுக்கு கோவை வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் (ஆர்டிஓ) கடந்த 15-ம் தேதி ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
அந்த உத்தரவில், "பொதுமக்கள் பயணிக்காத தூரத்துக்கும் சேர்த்து கட்ட ணத்தை செலுத்துவதை தவிர்க்கும் வகை யில், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள புதிய பஸ் நிலையத்தை ஒரு ஸ்டேஜாக மாவட்ட கலெக்டர் நிர்ணயம் செய்தார். அதை எதிர்த்து தாக்கல் செய்த மனுக்களை எஸ்டிஏடி தள்ளுபடி செய்துள்ளது. எனவே, கலெக்டரின் உத்தரவுப்படி தங்கள் வழித்தடத்தில் புதிய ஸ்டேஜ் உருவாக்கி, கடந்த 2018-ல் திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தையே வசூலிக்க வேண்டும்" என்று தெரிவித்திருந்தார்.
இருப்பினும், இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 12 நாட்களாகியும் அமலாகவில்லை. இது தொடர்பாக கோவை வடக்கு வட்டார போக்கு வரத்து அலுவலர் சிவகுருநாதனிடம் கேட்ட போது "திருத்தியமைக்கப்பட்ட கட்டணத்தை மட்டுமே இனிமேல் வசூலிக்க வேண்டும் என பஸ் உரிமையாளர்கள், அரசுப் போக்கு வரத்துக்கழகத்துக்கு அறிவுறுத்தியுள்ளோம். அதன்படி, கட்டணத்தை குறைத்து நாளை முதல் பஸ்கள் இயக்கப்படும். யாரேனும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் போக்குவரத்து துறையிடம் புகார் தெரிவிக்கலாம் என்றார்.
அதன்படி திருத்தி அமைக்கப்பட்ட பஸ் கட்டணம் நாளை முதல் அமலுக்கு வருகிறது. காந்திபுரத்தில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு செல்ல வழக்கமான கட்டணம் ரூ.23 வசூலிக்க ப்படும். சாய்பாபா கோவில் புதிய பஸ்நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல ரூ.20 மட்டுமே பயணி களிடம் பெற வேண்டும்.
அதேபோல புதிய பஸ்நிலையத்தில் இருந்து காரமடைக்கு ரூ.15-ம், மத்தம்பாளையத்துக்கு ரு.12-ம்,
ஜோதி மில்ஸ்சுக்கு ரூ.10-ம், பெரியநாயக்கன் பாளையத்துக்கு ரூ.9-ம், புதுப்பாளையத்துக்கு ரூ.7-ம் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.