உள்ளூர் செய்திகள்

குணா குகை பகுதியில் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

கொடைக்கானல் குணா குகையில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு

Published On 2023-04-19 06:25 GMT   |   Update On 2023-04-19 06:25 GMT
  • வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர்.
  • ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொடைக்கானல்:

கொடைக்கானலில் வனத்துறைக்கு சொந்தமான மோயர்பாய்ண்ட், பைன் பாரஸ்ட், குணா குகை, தூண்பாறை உள்ளிட்ட ஏராளமான இடங்கள் உள்ளன. பேய்களின் சமையல்அறை என அழைக்கப்பட்ட இடத்தில் நடிகர் கமல்ஹாசனின் குணா திரைப்படம் எடுக்கப்பட்டது. அதன்பின்னர் இந்த இடம் பிரபலமானது. இதனால் குணா குகை என அழைக்கப்பட்டது. இங்கு 15க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் தவறி விழுந்து இறந்துள்ளனர்.

இதனால் குணா குகையை சுற்றிலும் வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் இங்கு வனத்துறை அனுமதி பெற்று குணா குகை, பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இடங்களில் கேரள திரைத்துறையினர் படப்பிடிப்பு நடத்தினர். காலக்கெடு முடிந்த நிலையிலும் அங்கு தொடர்ந்து சினிமா படப்பிடிப்பு எடுக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து மதுரையை சேர்ந்த வக்கீல் ரமேஷ் வன பாதுகாவலருக்கு மனு அனுப்பி உள்ளார். அதில் அனுமதியின்றி சினிமா படப்பிடிப்பு நடத்தியது, மரங்களை வெட்டியது, விதிகளை மீறி அனுமதிக்கப்படாத இடங்களில் சூட்டிங் நடத்தியது, வனப்பகுதியில் கியாஸ் சிலிண்டர் வைத்து சமைத்தது உள்ளிட்டவை குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் முதன்மை உதவி வன பாதுகாவலர் தெபாஸீஸ்ஜனா மற்றும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிக்க தொடங்கி உள்ள நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்து அனுமதியின்றி படப்பிடிப்பு நடைபெற்றது குறித்து விசாரித்தனர். ஊட்டியை போல் கோடை காலங்களில் கொடைக்கானலிலும் சினிமா படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க கூடாது என வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News