நீலகிரியில் பற்றி எரியும் காட்டுத்தீ: 200 ஏக்கர் வனப்பகுதி சாம்பலானது
- உதகை நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
- காட்டுப் பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது.
நீலகிரி:
நீலகிரியில் உள்ள கவர்னர் சோலை, பார்சன்ஸ்வேலியில் உள்ள வனப்பகுதிகளில் இன்று திடீரென தீப்பற்றியது. இந்த காட்டுத்தீ வேகமாக பரவி காய்ந்த செடிகொடிகள், மரங்கள் பற்றி எரிந்தன.
நகரின் முக்கிய பகுதிகள் அருகே உள்ள குப்பை குழி பகுதியிலும் தீ பரவியது. இதனால் மின்விநியோகம் தடைப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வாழைத்தோட்டம் பகுதியிலும் தீ பரவியது. வனத்துறையினர், தீயணைப்பு துறையினர் மற்றும் உள்ளூர் மக்கள் இணைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த காட்டுத் தீயால் நீலகிரியில் 200 ஏக்கர் வனப்பகுதி சாம்பலானது. உதகை நகரம் முழுவதும் புகை மூட்டமாக காணப்படுகிறது.
தீ பரவும் காட்டுப் பகுதிகளுக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தி உள்ளது. மேலும், காட்டுத் தீ பரவ சமூக விரோதிகள் யாராவது காரணமாக இருந்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.