இந்து முன்னணி மாநில தலைவர் வீட்டில் சிறைவைப்பு: பலத்த போலீஸ் பாதுகாப்பு
- போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
- போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பரங்குன்றம் மலையை காக்க கோரி இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகள் சார்பில் இன்று திருப்பரங்குன்றத்தில் அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த போராட்டத்திற்கு போலீசார் தடை விதித்தனர். மேலும் திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் போலீசார் தடையை மீறி திருப்பரங்குன்றத்திற்கு செல்வோம் என இந்து அமைப்புகள் தெரிவித்தன. இதையடுத்து போராட்டக்காரர்கள் அங்கு செல்வதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்றிரவு முதல் போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் திருப்பூரை சேர்ந்தவர் என்பதால் அவரது தலைமையில் இந்து முன்னணியினர் திருப்பரங்குன்றம் செல்வார்கள் என்பதால் திருப்பூர் மாநகர் பகுதியில் நேற்றிரவு முதல் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
ஒரு சோதனை சாவடியில் 6 போலீசார் வீதம் வாகனங்களை சோதனை செய்தனர். வாகனங்களில் மொத்தமாக செல்பவர்களை விசாரித்து அதன்பிறகே அனுப்பி வைத்தனர். நேற்றிரவு முதல் இன்று அதிகாலை வரை விடிய விடிய வாகன சோதனை நடைபெற்றது. இன்று காலையும் சோதனை தொடர்ந்தது.
திருப்பூர் மாநகரில் இருந்து வெளியேறும் கார், வேன் மற்றும் பேருந்துகளில் செல்பவர்கள் எங்கே செல்கிறார்கள் என்ற விவரம் சேகரிக்கப்பட்டு அவர்களது ஆவணங்களை சரிபார்த்து அனுப்பி வைத்தனர். போராட்டத்திற்கு பங்கேற்க செல்வதாக கருதப்பட்டவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.
மேலும் முருக பக்தர்களுடன் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் மற்றும் இந்து அமைப்பைச் சார்ந்தவர்கள் திருப்பரங்குன்றம் செல்வதற்கு வாய்ப்பு இருப்பதாக கருதப்பட்டதால் இந்து முன்னணியின் மாநில தலைவர் காடேஸ்வர சுப்பிரமணியம் வீடு-அலுவலகம் அமைந்துள்ள திருப்பூர் பெரிச்சிபாளையம் பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் காடேஸ்வரா சுப்பிரமணியம் வீட்டில் சிறைவைக்கப்பட்டார்.
மாநகர போலீஸ் துணை கமிஷனர் ராஜராஜன் தலைமையில் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். திருப்பரங்குன்றம் செல்ல முயலும் பட்சத்தில் அவர் கைது செய்யப்படுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்பட்ட பிறகு மாநகரின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் நடைபெறும் என்ற தகவலால் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.