மத்திய அரசு மீனவர்களுக்கு எதிரான மசோதா கொண்டு வந்தாலும் மீனவர்கள் பக்கம் தான் தி.மு.க. அரசு இருக்கும்
- 14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும்.
- உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேச்சு
நாகர்கோவில்:
கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி இயக்கம் குமரி மாவட்ட மீனவர்கள் கூட்டமைப்பு தமிழக அரசின் மீன்வளம் மற்றும் மீனவநலத் துறை சார்பில் உலக மீனவர் தின வெள்ளிவிழா கொண்டாட்டம் முட்டத்தில் நடந்தது.
பொதுக்கூட்டத்திற்கு கோட்டார் மறை மாவட்ட ஆயர் நசரேன்சூசை தலைமை தாங்கினார்.துணைத் தலைவர் சகாயராஜ் தி.மு.க. மாநில சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளர் ஏ.ஜே.ஸ்டாலின் முன்னிலை வகித்தனர். முட்டம் பங்கு தந்தை அமல்ராஜ் வரவேற்று பேசினார்.கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி மைய இயக்குனர் டன்ஸ்டன் தொடக்க உரையாற்றினார். தி.மு.க. மாநில இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. நலத்திட்ட உதவிகள் வழங்கியும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கும் சிறப்பாக மீன் வளர்ப்பில் ஈடுபட்டவர்களுக்கும் பரிசுகளை வழங்கினார்.
பின்னர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. பேசியதாவது:-
இயற்கையோடு இணைந்து வாழக்கூடிய உங்களோடு இந்த மீனவர் தின விழாவில் கலந்து கொள்வதில் நான் பெருமைப்படுகிறேன். நான் உங்கள் வீட்டுப் பிள்ளை எனது சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி பாதி மீனவர்கள் வசிக்கின்றனர். மெரினா கடற்கரை பாதி தொகுதியில் வருகிறது. என் எம்.எல்.ஏ. அலுவலகம் மீனவ பகுதியில் தான் உள்ளது. அவர்களின் செல்ல பிள்ளையாக அவர்கள் வீட்டில் ஒருவராக நான் உள்ளேன். இங்கே உங்களை அன்போடு பார்க்கிறேன்.
கலைஞர் அரசு தான் கை ரிக்ஷாவை ஒழித்தது. படகுகளுக்கு இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் தந்தது, மீனவர் நல வாரியம், மீன்பிடி தடை கால நிவாரணம், டீசல் மானியம் உயர்வு போன்றவற்றை தந்தது கலைஞர் அரசுதான்.
சிறு படகுகளுக்கு மண்எண்ணெய், காணாமல் போன மீனவர்களை கண்டு பிடிப்பதில் முனைப்பு காட்டியது வெளிநாடுகளில் சிறையில் வாடிய 170 மீனவர்களை விடுவித்து தாய் நாட்டிற்கு அழைத்து வந்தது தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு.ரூ.320 கோடி மீனவர்களுக்கு நிவாரணம் ரூ.743 கோடியில் கடல் அரிப்பு தடுப்பு சுவர் கட்ட ஒதுக்கீடு செய்தது. 15 ஆயிரம் கிலோ லிட்டர் மண்எண்ணெய் மீன்பிடி தடைகால நிவாரணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து 6000 ஆக உயர்த்தியது மு க ஸ்டாலின் அரசு தான். விரைவில் தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி ரூ.8000 ஆக உயர்த்தப்பட உள்ளது.
14 மாவட்டங்களிலும் மீனவர்களுக்கு 2 லட்சம் வீடுகள் படிப்படியாக கட்டித் தரப்படும். கடலில் காணாமல் போன மீனவர்களில் இறந்தவர்க ளாக அறிவிக்க 7 ஆண்டுகள் என்பது அதிகம்.இதை குறைக்க நடவடிக்கையை மேற்கொள்ளப்படும்.
கணவரை இழந்து வாடும் பெண்களுக்கு மீன்பிடி தடை கால நிவாரணம் கிடைக்க பரிசீலனை செய்யப்படும். மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க மத்திய அரசுக்கு அழுத்தம் தரப்படும். கடல் ஆம்புலன்ஸ் சர்வதேச அடையாள அட்டை அரசின் கவனத்தில் உள்ளது. நிதி நிலையை பொறுத்து அவற்றை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி தருவார் என உறுதி அளிக்கிறேன். பன்னாட்டு சரக்கு பெட்டக மாற்று முனையம் அமைவதால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். வீடுகள் காலி செய்ய வேண்டும் தி.மு.க. இதனை ஏற்காது. மீனவர்களின் கோரிக்கைகளை முதல்வ ரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும்.
மத்திய அரசு மீனவர்க ளுக்கு எதிராக எந்த மசோதாவை கொண்டு வந்தாலும் மீனவர்கள் பக்கம் தான் திமுக அரசு இருக்கும் அதனால் உங்களுக்கு எந்த தயக்கமும் வேண்டாம்.
13 கோரிக்கைகள் இங்கு தந்துள்ளீர்கள். மீன வர்களின் கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் தீர்வு காணும் பணியில் திராவிட மாடல் அரசு ஈடுபடும். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், அனிதா ராதாகிருஷ்ணன், விஜய் வசந்த் எம்.பி., நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மீன் துறை ஆணையர் பழனிச்சாமி, கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகரன் பிரசாத், எம்.எல்.ஏக்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில தலைமை மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் சேவியர் மனோகரன், மீனவரணி முன்னாள் அமைப்பாளர் நசரேத் பசலியான் கலந்து கொண்டனர்.