உள்ளூர் செய்திகள்

பெரியார் பஸ் நிலையம் அருகே மோட்டார் சைக்கிள்களை மறித்து அபராதம் விதிக்கும் போலீசார்.

மதுரையில் வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல்

Published On 2022-11-17 08:47 GMT   |   Update On 2022-11-17 08:47 GMT
  • மதுரையில் சாலை விதிகளை மீறியதாக வாகன ஓட்டிகளிடம் ரூ.5 கோடி அபராதம் வசூல் செய்யப்பட்டது.
  • குண்டும், குழியுமான ரோடுகளை சீரமைப்பது எப்போது? என்பது மதுரை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

மதுரை

கோவில் மாநகரம், தூங்கா நகரம், கூடல் மாநகர் என்றழைக்கப்படும் மாமதுரையில் முக்கிய சாலைகள் மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் உள்ள ரோடுகள் சீரான போக்குவரத்திற்கு வழியின்றி சேதமடைந்து காணப்படுகிறது.

தற்போது வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக மதுரையில் மழை காரணமாக முக்கிய சாலைகள், ரோடுகள் மேலும் சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கி றது.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் பணிகளுக்காக தோண்டப்பட்ட பகுதிகளி லும் ரோடுகள் மற்றும் வீதிகளில் பொதுமக்கள் வாக னங்களில் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மழை நேரங்களில் அந்த பள்ளங்களில் தண்ணீர் தேங்கி பொதுமக்களை மிரட்டி வருகிறது. இந்த நிலை எப்போது மாறும் என்று பொது மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள். மதுரை மற்றும் விரி வாக்கப் பகுதி யில் உள்ள சேதமடைந்த சாலைகளை உட னடியாக சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை பரவலாக எழுந்துள்ளது.

இந்த நிலையில் சமீப நாட்களாக போலீசாரின் வாகன சோதனை மற்றும் கெடுபிடிகள் மதுரையில் அதிகரித்துள்ளன. மதுரை நகர் பகுதிகளை பொறுத்தவரை பெரியார் பஸ் நிலையம், சிம்மக்கல், கோரிப்பாளையம், நெல்பேட்டை, காளவாசல், பழங்காநத்தம், புதூர், தெப்பக்குளம், தெற்கு வாசல், வில்லாபுரம், செல்லூர், பி.பி.குளம் உள்ளிட்ட பகுதிகளில் எப்போதும் வாகன நெருக்கடிகள் அதிகமாக இருக்கும். அதுவும் காலை மற்றும் மாலை வேளைகளில் சொல்லவே வேண்டாம். அந்த அளவுக்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாகவே காணப்படும்.

இந்த பகுதிகளில் வாகனங்களில் செல்பவர்கள் மணிக்கு 10 முதல் 20 கிலோ மீட்டர் வேகத்தில் தான் வாகனங்களை இயக்க முடியும். ஆனாலும் இந்த பகுதிகளில் உள்ள முக்கிய சிக்னல்கள் மற்றும் பஸ் நிறுத்தங்களில் போக்குவரத்து போலீசார் மற்றும் சட்டம்-ஒழுங்கு போலீசார் ரோடுகளில் முகாமிட்டு வாகன ஓட்டிகளை சுற்றி வளைத்து அபராதம் போடுவதை பெரிய சாதனையாக நினைத்து செயல்பட்டு வருகிறார்கள். பல சாலைகள் சேதமடைந்து போக்குவரத்திற்கு வழியின்றி கிடக்கும் நிலையில் கூட அதன் அருகே நின்று வாகனங்களை வழிமறித்து அபராதம் விதிப்பதை முக்கிய கடமையாக எண்ணி போலீசார் பணி செய்து வருகிறார்கள். இதனால் போலீசாரின் அபராத ஜாக்பாட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கடந்த 15-ந் தேதி வரை மதுரை யில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது மதுரையில் சாலை விதிகளை மீறும் நபர் மீதான அபராத தொகை பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதன்படி குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர் ரூ.10 ஆயிரமும், ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டினால் ஆயிரம் ரூபாயும் அபராதம் செலுத்த வேண்டும். அதிவேகம் மற்றும் அதிக நபர்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஒவ்வொரு பகுதியிலும் சாரை, சாரையாக இருசக்கர வாகனங்களை போலீசார் வழிமறித்து அபராதங்களை விதிப்பது அதிகரித்துள்ளது. அந்த வகையில் கடந்த 11 மாதத்தில் மட்டும் மதுரையில் ஹெல்மெட் அணியாமல் வாகனம் ஓட்டியதாக 2 லட்சத்து 23 ஆயிரத்து 338 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 3 ஆயிரத்து 831 பேர் அதிவேகமாக சென்றதாக வும், 1,407 பேர் குடிபோதையில் வாகனத்தை ஒட்டியதாகவும் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.


மதுரையின் முக்கிய சாலையான நேதாஜி ரோட்டில் கழிவுநீர் தேங்கி நிற்கும் காட்சி.

7 ஆயிரத்து 71 பேர் செல்போனில் பேசியபடி வாகனம் ஓட்டியதாகவும், 4 ஆயிரத்து 960 பேர் அதிக நபர்களை வாகனங்களில் ஏற்றி சென்றதாகவும் வழக்கு பதிவு செய்து அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் கார்களில் சீட் பெல்ட் அணியாமல் பயணித்ததாக 15 ஆயிரத்து 646 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி மற்றும் தியாகி இமானுவேல்சேகரன், மருது பாண்டியர், தேவர் ஜெயந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக சென்ற வாகனங்கள் விதிமீறல்களில் ஈடுபட்டதையும் போலீசார் வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் மட்டும் 69 ஆயிரத்து 588 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 மாதத்தில் அதாவது ஜனவரி மாதம் தொடங்கி நவம்பர் 15-ந் தேதி வரை மதுரையில் சாலை விதிகளை மீறியதாக 3 லட்சத்து 7 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூ.5 கோடியே 3 லட்சம் அபராத தொகையாக வசூலித்து மதுரை போலீசார் சாதனை படைத்துள்ளனர்.

ஆனால் மதுரையில் போக்குவரத்திற்கு தகுதி யான சாலைகள் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறி தான். 24 மணி நேரமும் போக்குவரத்து நெரிசல் காணப்படும் டி.பி.கே. ரோடு மற்றும் மேலவாசல் பகுதியில் கூட சாலைகளில் படுகுழிகளாக மோசமாக காணப்படுகிறது.

இது தவிர பல்வேறு பகுதிகளில் சேதம் அடைந்த நிலையில் இருக்கும் சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மதுரை மக்களின் கோரிக்கையாக இருக்கிறது. சாலை பள்ளங்களில் மண்ணை கொட்டி நிரப்பாமல் உரிய தார், ஜல்லி கலவைகளை போட்டு சீரமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பள்ளமான இடங்களில் மண்ணைக் கொட்டி செல்வதால் வெயில் காலங்களில் அந்த பகுதி முழுவதும் தூசி மண்டலமாக மாறி வாகன ஓட்டிகளை பல்வேறு சிர மத்துக்கு உள்ளாக்கி வருகிறது.

எனவே தரமான சாலைகளை முதலில் அமைத்து கொடுத்துவிட்டு சாலை விதிமீறலில் ஈடுபடுபவர்கள் மீது அபராத வசூல் நடவடிக்கைகளை போலீசார் இறங்கலாம் என்பதும் மதுரை மக்களின் கருத்தாக உள்ளது.

எனவே பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு மாவட்ட நிர்வாகம் செவி சாய்த்து தரமான சாலைகளை அமைத்துக் கொடுக்க தேவையான நடவடிக்கைகளில் இறங்க வேண்டும் என்பது தான் மதுரை மக்களின் ஒட்டு மொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News