கலைஞர் நூலகம் அமைப்பது பயனற்ற செயல்-ஆர்.பி.உதயகுமார் பாய்ச்சல்
- டிஜிட்டல் யுகத்தில் கலைஞர் நூலகம் அமைப்பது பயனற்ற செயல் என்று ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
- எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார்.
மதுரை
சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் மதுரை மூன்றுமாவடியில் நடைபெற்ற அரசு விழாவில் பேசும்போது, கடந்த 10 ஆண்டுகளில் மதுரையில் எந்த ஒரு பணியும் நடைபெறவில்லை என்று கூறியுள்ளார். இது முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் செயலாக உள்ளது. அவர் சொன்னதை யாரும் நம்ப மாட்டார்கள்.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, மதுரை மாவட்ட மக்களுக்கு பல்வேறு வரலாற்று திட்டங்களை செயல்படுத்தி கொடுத்துள்ளார். தென் மாவட்ட மக்களின் கோரிக்கையை ஏற்று எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் உருவாக்கி கொடுத்தார். இதற்காக 223 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்து அங்கு ரூ. 21 கோடி செலவில் சாலை மற்றும் பல்வேறு பணிகள் செய்யப்பட்டன. இதைத்தொடர்ந்து எய்ம்ஸ் கட்டிட பணிகள் விரைவில் தொடங்க உள்ளது.
மதுரை மாவட்டத்தில் ரூ.1296 கோடி மதிப்பில் முல்லை பெரியார் லோயர் கேம் வழியாக கூட்டு குடிநீர் திட்டத்தை தொடங்கி வைத்தார். அதேபோல் ரூ. 30 கோடி மதிப்பில் மதுரை மாவட்ட கலெக்டர் கூடுதல் கட்டிடத்தை உருவாக்கி கொடுத்தார்.
மக்கள் பிரதிநிதியாக உள்ளவர்கள் உண்மை நிலையை மக்களுக்கு எடுத்துக் கூற வேண்டும். அரசியல் உள்நோக்கத்தோடு இருக்கக்கூடாது என்பதை நிதி அமைச்சர் நன்கு அறிவார். அரசு பொறுப்பில் உள்ளவர்கள் அதிகாரத்தை பயன்படுத்தி மக்களுக்கான திட்டங்கள் செய்ய வேண்டும். தற்போதுதான் மதுரை மாநகராட்சிக்கு மாஸ்டர் பிளான் என்று கூறி உள்ளீர்கள். இதுவரை கடந்த 18 மாதங்களாக தி.மு.க. ஆட்சியில் மதுரை மாவட்ட வளர்ச்சிக்கு எந்த திட்டங்கள் செய்யப்படுத்தப்பட்டது என்று பட்டியலிட்டு கூற முடியுமா?
மதுரையில் கருணாநிதி பெயரில் நூலகம்தான் அமைக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்த டிஜிட்டல் யுகத்தில் ஆன்லைன் மூலம் நூலகத்தை தங்கள் இல்லம் தேடி வரவழைக்கும் வேளையில் மக்கள் நூலகங்களை நாடுவார்கள் என்ற மாய தோற்றம் உருவாக்கப்பட்டு வருகிறது.
வாய் சொல் வீராக இருப்பது வளர்ச்சியைத் தந்துவிடாது. மதுரை மாவட்டத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நீங்கள் தமிழகத்திற்கு நிதியை ஒதுக்கும் மந்திரியாக உள்ளீர்கள், மதுரை மாவட்ட மக்களின் வளர்ச்சிக்காக கடந்த 18 மாதங்களில் என்னென்ன சிறப்பு நிதியை கொண்டு வந்தீர்கள்? என்று விளக்கம் சொன்னீர்கள் என்றால் மக்கள் மட்டுமல்லாது நானும் மகிழ்ச்சி அடைவேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.