தென்காசி மாவட்டத்தில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு
- குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாடு குறித்து ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
- 10 ஊராட்சிகளுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமி டிராக்டர்கள் வழங்கினார்.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம் நெற்கட்டும் செவல் மாவீரன் பூலித்தேவன் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் 2021 - 22 ஆம் ஆண்டு பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் இரு வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிகள் மற்றும் ரூ. 5.70 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை கட்டும் பணிகளை அமைச்சர் ஆய்வு செய்தார்.
மேலும் அங்குள்ள குடிநீர் சுத்திகரிப்பு எந்திரம் பயன்பாடு குறித்து பள்ளி ஆசிரியர்களிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.
தொடர்ந்து கடைய நல்லூர் ஊராட்சி ஒன்றியம் புன்னையாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் ரூ.84 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் 5 வகுப்பறைகள் கட்டும் பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். பின்னர் தென்காசி ஊராட்சி ஒன்றிய அலு வலக கூட்டரங்கில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு நடத்தி தூய்மை பாரத இயக்கம் பகுதி 2- ல் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் கடையநல்லூர் வட்டா ரத்திற்குட்பட்ட சொக்கம் பட்டி, நயினாரகரம், குத்துக் கல்வலசை, சுமைதீர்ந்தபுரம் மற்றும் கீழப்பாவூர், கல்லூ ரணி ஊராட்சிகள், தேவி பட்டிணம் சுப்பிரமணியபுரம் ஆகிய 10 ஊராட்சிகளுக்கு ரூ. 45.20 லட்சம் மதிப்பீட்டில் டிராக்டர்களை வழங்கினார்.
ஆய்வின் போது மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரன், தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சிவ பத்மநாதன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (திட்ட இயக்குனர்) மைக்கேல் அந்தோணி பெர்னாண்டோ, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜா, சதன் திருமலைக்குமார், பழனி நாடார், நகராட்சி தலைவர் சாதிர், துணைத் தலைவர் சுப்பையா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தமிழ்செல்வி போஸ், தென்காசி ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் ஷேக் அப்துல்லா, ஒன்றிய குழு துணைத்தலைவர் கனக ராஜ், முத்து பாண்டியன், கீழப்பாவூர் ஒன்றிய சேர்மன் காவேரி சீனித்துரை, ஆலங்குளம் ஒன்றிய சேர்மன் திவ்யா மணிகண்டன், குத்துக்கல் வலசை ஊராட்சி தலைவர் சத்யராஜ், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி உட்பட பலர் உடனிருந்தனர்.