பாரம்பரிய உடையுடன் நடனமாடி பொங்கல் கொண்டாடிய தோடர் இன மக்கள்
- சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
- விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களில் ஆண்டு முழுவதும் அனைத்து பண்டிகைகளும் கொண்டாடப்படுவது வழக்கமான ஒன்றாகும்.
இதன் ஒரு கட்டமாக ஊட்டி அருகே உள்ள பகல்கோடு மந்து, சூட்டிங் மட்டம் சுற்றுலா தளத்தில், நீலகிரியின் ஆதி பழங்குடியினர்களான தோடர் இன மக்கள் தமிழர்களின் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.
அங்கு அவர்கள் அடுப்பு வைத்து புதிய பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வழிபட்டனர்.இதனை தொடர்ந்து தோடர் இன மக்களின் பாரம்பரிய படி பூஜைகள் செய்து கடவுளுக்கு பொங்கல் படைத்து கொண்டாடினர்.
இதனையடுத்து சுற்றுலா தலத்திற்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளுக்கு பொங்கல் வழங்கி மகிழ்ந்தனர். மேலும் தங்களுடைய பாரம்பரிய கலாசார உடையுடன் நடனமாடியது அங்கு வந்திருந்த சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
ஊட்டியில் இன்று காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ள ஆயுதப்படை பிரிவு வளாகத்தில் நடைபெற்ற இந்த விழாவில் நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அவர் விழா மைதானத்திற்கு வரும் பொழுது அனைத்து காவலர்களுடன் இணைந்து நடனம் ஆடியபடியே மேடைக்கு வந்தார். இது அங்கிருந்த அனைவரையும் உற்சாகப்படுத்தியது.
இந்த விழாவில் காவல்துறையினர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் அனைவரும் கலந்து கொண்டனர். தொடர்ந்து காவல்துறை குடும்ப உறுப்பினர்கள் கலந்து கொண்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டு போட்டிகளும் நடைபெற்றது.