உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு பணியில் 10 ஆயிரம் போலீசார் குவிப்பு

Published On 2022-10-27 08:04 GMT   |   Update On 2022-10-27 08:04 GMT
  • பசும்பொன் தேவர் ஜெயந்தி விழாவில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டனர்.
  • கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

கமுதி

ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வருகிற 30-ந் தேதி சுதந்திரப் போராட்ட தியாகி முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர்கள், முன்னாள் முதல்வர்

ஓ.பன்னீர்செல்வம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள், பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பல்வேறு சமுதாய அமைப்பினரும், பொது மக்கள் என 1 லட்சத்திற்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு நினைவிடத்தில் மரியாதை செலுத்துகின்றனர்.

இதற்கான பாதுகாப்பு முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் கமுதி ஆயுதப்படை கூட்ட அரங்கில் தென்மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் தலைமையில் நடந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை முன்னிலை வகித்தார்.

இதில் கோவை, ராமநாதபுரம் உட்பட 5 சரக டி.ஐ.ஜி.கள், 28 மாவட்டங்களை சேர்ந்த எஸ்.பி.க்கள் பங்கேற்றனர். பின்னர் நிருபர்களிடம் தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க் கூறுகையில், தேவர் ஜெயந்தியையொட்டி ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 ஆயிரம் போலீசார் இன்று (27-ந் தேதி) முதல் 30-ந் தேதி வரை பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

தடை செய்யப்பட்டுள்ள பகுதிகள், அனுமதிக்கப்பட்ட வழித்தடங்கள், சம்பந்தப்பட்ட காவல் நிலையங்கள் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையின் உத்தரவுகளை மீறி செயல்படும் வாகனங்கள் மீது கண்காணிப்பு காமிரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். கண்காணிப்பு பணியில் 13 டிரோன் காமிராக்கள், 92 நிரந்தர காமிராக்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News