சமூக ஆர்வலர் கொலை வழக்கு: குவாரி உரிமையாளர்கள் வீடுகளில் முக்கிய ஆவணங்கள் சிக்கின
- லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
- காவலில் எடுக்கப்பட்ட 5 பேர் இன்று கோர்ட்டில் ஆஜர்
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜகபர் அலி( வயது 58) அ.தி.மு.க. பிரமுகரும் சமூக ஆர்வலருமான இவர், திருமயம் பகுதியில் கல் குவாரிகளில் நடைபெறும் சட்டவிரோத கனிமவள கொள்ளையை தடுப்பதற்காக போராடி வந்தார்.
மேலும் நீதிமன்றங்களிலும் வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து கடந்த 17-ம் தேதி அவரை லாரி ஏற்றி கொலை செய்தனர்.
இதுதொடர்பாக திருமயம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்குவாரி உரிமையாளர்கள், ராசு ராமையா, ராசுவின் மகன் தினேஷ், லாரி உரிமையாளர் முருகானந்தம், டிரைவர் காசிநாதன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.
பின்னர் இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு தற்போது விசாரணை நடந்து வருகிறது. இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கைதான 5 பேரையும் 3 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.
நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைவதைத் தொடர்ந்து, அவர்களை இன்று மாலை 4 மணிக்கு மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைக்க உள்ளனர்.
இதற்கிடையே ஜகபர் அலியின் மனைவி மரியம் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், சில தினங்களுக்கு முன்பு ஜகபர் அலியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு தாசில்தார் முன்னிலையில் எக்ஸ்ரே எடுக்கப்பட்டது.
இதையடுத்து நேற்று சிபிசிஐடி போலீசார் இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி தலைமையில் கைதான ராமையா மற்றும் ராசு ஆகியோருக்கு சொந்தமான துளையானூரில் உள்ள அவர்களுக்கு சொந்தமான கல் குவாரிகள், வீடுகள் மற்றும் திருமயத்தில் உள்ள ராசுவுக்கு சொந்தமான நகை அடமானக் கடை ஆகிய இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர்.
மேலும் திருமயத்தில் உள்ள லாரி உரிமையாளர் முருகானந்தத்தின் வீடு மற்றும் கடைகளிலும் சோதனை நடந்தது.
இதில் குவாரிகள் மற்றும் அவர்களின் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனையில் கனிமவள முறைகேடு தொடர்பாக முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதன் அடிப்படையில் சிபிசிஐடி போலீசார் சிலருக்கு சம்மன் அனுப்பி விசாரணையை தீவிர படுத்த முடிவு செய்துள்ளனர்.