போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபர் கைது
- போலி பாஸ்போர்ட் எடுத்து சிங்கப்பூரில் வேலை பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
- கைதான வாலிபர் மீது ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
சேலம்:
சேலம் வீரகனூர் அருகே உள்ள வடக்கு ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 46). இவர் அம்மம்பாளையத்தில் உள்ள ஆவினில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது பெயரில் அவரது உறவினரான தெற்கு ராமநாதபுரத்தைச் சேர்ந்த ராஜேஷ் (37) என்பவர் வீரமுத்து பெயரில் போலியாக பாஸ்போர்ட் 2002-ம் ஆண்டு எடுத்து சிங்கப்பூரில் டிரைவராக வேலை பார்த்து வந்தது தெரியவந்தது.
இது குறித்து வீரமுத்து சேலம் குற்றப்பிரிவு போலீசில் கடந்த ஆண்டு புகார் அளித்தார். அதன் பேரில் டிஎஸ்பி இளமுருகன் மற்றும் போலீசார், ஆள்மாறாட்டம், போலி பாஸ்போர்ட் என 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் ராஜேஷ் நாடு திரும்பும் போது தகவல் கொடுக்குமாறு லுக் அவுட் நோட்டீஸ் விமான நிலையத்துக்கு அனுப்பினர்.
இதையடுத்து ராஜேஷ் நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கியதும் அங்குள்ள அதிகாரிகள் பிடித்து சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் ஒப்படைத்தனர்.
அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தியதில் எனக்கு 17 வயது என்பதால் பாஸ்போர்ட் எடுக்க முடியாது. எனவே வீரமுத்து ரேஷன் கார்டு உள்ளிட்ட ஆவணங்களை திருடி பாஸ்போர்ட் எடுத்ததாக தெரிவித்தார். இதையடுத்து ராஜேசை சேலம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.