- சி.சி.டி.வி. கேமராவில் கொள்ளையர்கள் உருவம் பதிவு
- போலீசார் விசாரணை
ஆரணி:
ஆரணி அடுத்த துந்தரீகம்பட்டு ஆரணி விழுப்புரம் நெடுஞ்சா லையில் பழமையான ஸ்ரீ முத்தாலம்மன் கோவில் உள்ளது.
இந்தக் கோவிலில் வழக்கம்போல் பூசாரி பூஜை செய்துவிட்டு நேற்று இரவு நடையை பூட்டி விட்டு சென்றார். இன்று காலை கோவிலை திறப்பதற்கு பூசாரி வந்தார். அப்போது கோவில் கேட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது உண்டியல் உடைக்கப்பட்டு அதிலிருந்து ரூ.10 ஆயிரம் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.
பின்னர் இது குறித்து ஆரணி தாலுகா போலீசில் கோவில் நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆரணி தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது கோவிலில் இருந்த சி.சி.டி.வி. காட்சியில் 2 பேர் கோவில் கேட்டின் பூட்டை உடைப்பதும் மற்றொரு நபர் கோவிலின் வெளியே பைக்கில் காத்திருப்பதும், பின்னர் கோவிலில் உள்ளே புகுந்த 2 பேர் உண்டியலை கடப்பாரையால் உடைத்து பணத்தை திருடி செல்வதும் சி.சி.டி.வி. காட்சியில் பதிவாகி இருந்தன. அதனை போலீசார் கைப்பற்றி மர்ம கும்பல் யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.