உள்ளூர் செய்திகள்

திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் உடமைகள் கருவி மூலம் சோதனை

Published On 2022-11-09 15:07 IST   |   Update On 2022-11-09 15:07:00 IST
  • திருச்சி விமான நிலையத்தின் முனைய நுழைவு வாயிலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் பயணச்சீட்டை சோதனை செய்கிறார்கள்.
  • இரண்டாவது முறையாக பயணிகளின் உடமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்படுகிறது.

திருச்சி

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து அதிக அளவில் விமானங்கள் இயக்கப்படுகிறது. இதனால் திருச்சி விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு அதிக அளவில் உணவுப் பொருட்கள், பால் பொருட்கள், காய்கறிகள், பழ வகைகள், பூக்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

இந்த நிலையில் கோவை கார் வெடிப்பு சம்பவத்திற்கு பிறகு விமானத்தில் செல்லும் பயணிகளின் வாகனங்கள் திருச்சி விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பாக மத்திய தொழில் பாதுகாப்பு படையினரால் சோதனை செய்யப்படுகிறது.

வாகனங்கள் மட்டுமின்றி பயணிகளின் உடமைகளும் சோதனைக்கு உள்ளாக்கப்பட்டு அதற்கு அடுத்தபடியாக திருச்சி விமான நிலையத்தின் முனைய நுழைவு வாயிலில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பயணிகளின் பயணச்சீட்டை சோதனை செய்கிறார்கள். இரண்டாவது முறையாக பயணிகளின் உடமைகள் மோப்பநாய் உதவியுடன் சோதனை செய்யப்படுகிறது.

இவ்வாறு சோதனை செய்யப்பட்ட பிறகே முனையத்திற்குள் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக மூன்றாவது கட்டமாக பயணிகளின் உடமைகள் ஸ்கேனர் கருவி மூலம் சோதனை செய்யப்படுகிறது. இந்த மூன்றடுக்கு பாதுகாப்பு பணி நிறைவு பெற்ற பின்பு பயணிகள் விமானத்தில் பயணம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இந்த நிலையானது தற்போது வரை நடைமுறையில் உள்ளது.

இதனால் பயணிகள் வெளிநாடுகளுக்கு விமானத்தில் பயணம் செய்வதற்கு மூன்று மணி நேரம் முன்னதாக வந்தால் பரிசோதனைகள் நிறைவு பெற்று விமான நிலையத்தில் உள்ள முனையத்திற்குள் நுழைவதற்கு ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தவிர விமான நிலையத்தின் நுழைவு பகுதியில் துப்பாக்கி ஏந்திய மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் முழு சோதனையில் ஈடுபட்டு இருக்கின்றனர்.

மேலும் அனுமதிச்சீட்டு இல்லாமல் உள்ளே வரும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. இந்த பாதுகாப்பானது தொடர்ந்து நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News