பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் புதுச்சேரி- பழங்கால கட்டிடங்கள் கணக்கெடுப்பு
- வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன.
- இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன.
புதுச்சேரி:
புதுச்சேரியை யுனெஸ்கோ பாரம்பரிய நகர பட்டியலில் இடம் பெற செய்யும் முயற்சியாக 114 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.
அதில் விடுபட்ட 131 பாரம்பரிய கட்டிடங்கள் 2-ம் கட்ட பட்டியலில் சேர்த்து கடந்த ஆகஸ்டு மாதம் வெளியிடப்பட்டது.
இந்த பட்டியலில் பழமையான கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், தனியார் கட்டிடங்களும் இடம் பெற்றன. இந்த 2 பட்டியலிலும் சேர்த்து இதுவரை 245 பாரம்பரிய கட்டிடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதற்கிடையில் புதுச்சேரி புல்வார்டு பகுதியில் பிரெஞ்சு கட்டிடங்களுக்கு மத்தியில் உள்ள தமிழர் பாரம்பரிய கட்டிடங்களும் தற்போது கணக்கெடுக்கப்பட்டுள்ளன.
இதில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த 18 கட்டிடங்கள் முதல் கட்டமாக அடையாளம் காணப்பட்டு புதுச்சேரி அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் 3-வது பாரம்பரிய கட்டிடங்கள் பட்டியலும் வெளியாக உள்ளது.
புல்வார்டு பகுதி மட்டுமின்றி அதனையொட்டிய பகுதிகளுக்கு அப்பாலும் பல்வேறு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதுச்சேரியில் ஏராளமான கட்டிடங்கள் உள்ளன. குறிப்பாக ஏ.எப்.டி., சுதேசி, பாரதி பஞ்சாலைகள் உள்ளன.
இதுமட்டுமின்றி வில்லியனுார் திருக்காமீசுவரர் கோவில், வில்லியனுார் லூர்து மாதா ஆலயம் உள்பட பல்வேறு வழிபாட்டு தலங்களும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன. எனவே இந்த கட்டிடங்களை இன்டாக், நகர அமைப்பு குழுமங்கள் இணைந்து கணக்கெடுக்க உள்ளன. இதன் மூலம் பாரம்பரிய நகரங்களின் பட்டியலில் புதுச்சேரி இடம் பெறவுள்ளது.