விளையாட்டு

இங்கிலாந்துக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றி ஆர்வத்தில் இந்தியா: ராஜ்கோட்டில் நாளை 3-வது 20 ஓவர் போட்டி

Published On 2025-01-27 10:06 IST   |   Update On 2025-01-27 10:06:00 IST
  • நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை.
  • இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது.

ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

இரு அணிகள் இடையேயான ஐந்து 20 ஓவர் தொடரில் 2 போட்டி முடிவில் இந்தியா 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. கொல்கத்தாவில் நடந்த முதல் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்திலும், சென்னையில் நடைபெற்ற 2-வது போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 3-வது 20 ஓவர் ஆட்டம் குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நாளை நடக்கிறது.

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி இந்த ஆட்டத்திலும் இங்கிலாந்தை வீழ்த்தி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது. முதல் ஆட்டத்தில் எளிதில் வெற்றி கிடைத்தது. ஆனால் சேப்பாக்கத்தில் கடும் போராட்டத்துக்கு பிறகே திலக் வர்மாவின் ஆட்டத்தால் தோற்கடிக்க முடிந்தது.

நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஷிவம் துபேக்கு வாய்ப்பு வழங்கப்படும். காயத்தால் விலகிய நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக அவர் இடம் பெறலாம். துருவ் ஜூரல் தனக்கு கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள தவறிவிட்டார். வாஷிங்டன் சுந்தரின் செயல்பாடு சிறப்பாக இருந்ததால் 11 பேர் கொண்ட அணியில் நீடிப்பார்.

நீண்ட இடைவெளிக்கு பிறகு அணிக்கு திரும்பிய முகமது ஷமி முதல் 2 ஆட்டத்திலும் இடம்பெறவில்லை. 3-வது போட்டியிலாவது வாய்ப்பு கிடைக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கிலாந்துக்கு இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடி உள்ளது. ஏனென்றால் தோற்றால் தொடரை இழந்து விடும். இதனால் அந்த அணி வீரர்கள் முழு திறமையை வெளிப்படுத்துவார்கள்.

கடந்த போட்டியில் இங்கிலாந்து கடுமையான சவாலை கொடுத்தது. கேப்டன் பட்லர் ஒருவரே நிலையாக ஆடி வருகிறார். ஹேரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜேமி சுமித் போன்ற சிறந்த வீரர்களும் உள்ளனர்.

இரு அணிகளும் நாளை மோதுவது 27-வது 20 ஓவர் போட்டியாகும். இதுவரை நடந்த 26 ஆட்டத்தில் இந்தியா 15-ல், இங்கிலாந்து 11-ல் வெற்றி பெற்றுள்ளன.

இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது. இரு அணிவீரர்கள் விவரம்:-

இந்தியா: சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அக்ஷர் படேல் (துணை கேப்டன்), சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, ரிங்குசிங், ஷிவம் துபே, அர்ஷ் தீப் சிங், ரவி பிஷ்னோய், வருண் சக்கரவர்த்தி. துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஹர்சித் ராணா, முகமது ஷமி, ரமன்தீப்சிங்.

இங்கிலாந்து: ஜோஸ் பட்லர் (கேப்டன்), பில்சால்ட், பென் டக்கெட், ஹேரி புரூக், லிவிங்ஸ்டன், ஜேக்கப் பெதல், ஒவர்டன், அட்கின்சன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், மார்க்வுட், ஜேமி சுமித், பிரைடன் கார்ஸ்,ரெகான் அகமது, சகீப் மகமூத்.

Tags:    

Similar News