தமிழ்நாடு

எதிர்குரல்களை நசுக்க முயற்சிப்பதா?- பா.ஜனதா நிர்வாகி கைதுக்கு அண்ணாமலை கண்டனம்

Published On 2023-06-17 09:37 IST   |   Update On 2023-06-17 10:48:00 IST
  • விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற தி.மு.க., எதிர் கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, குரலை முடக்கப் பார்க்கிறது.
  • பா.ஜ.க. தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது.

சென்னை:

தமிழக பா.ஜனதா செயலாளர் எஸ்.ஜி.சூர்யா மதுரை எம்.பி. பற்றி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்த கருத்து காரணமாக கைது செய்யப்பட்டுள்ளார்.

இதற்கு தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

தமிழக பா.ஜ.க. மாநிலச் செயலாளர் சூர்யா நேற்று இரவோடு இரவாக கைது செய்யப்பட்டிருப்பது மிகவும் கண்டிக்கத்தக்கது. சமூகப் பிரச்சினைகளில் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சியின் இரட்டை வேட நிலைப்பாட்டினை விமர்சித்ததற்காக கைது செய்திருக்கிறார்கள்.

விமர்சனங்களை கருத்தால் எதிர்கொள்ளத் திறனற்ற தி.மு.க., எதிர் கருத்துக்கள் கூறுபவர்களைக் கைது செய்து, அவர்கள் குரலை முடக்கப் பார்க்கிறது. அரசின் செயல்பாடுகளை விமர்சிப்பவர்களை எல்லாம் கைது செய்யும் ஜனநாயக விரோதப்போக்கு தமிழகத்தில் நிலவுகிறது.

கருத்து சுதந்திரத்தின் காவலர்கள் போல் தங்களைக் காட்டிக்கொண்டு, எதிர்குரல்களை எல்லாம் நசுக்க நினைக்கும் முயற்சி நீண்ட நாளைக்குச் செல்லாது என்பதை தி.மு.க. அரசு நினைவில் கொள்ள வேண்டும். விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல் இதுபோல தொடர்ந்து பா.ஜ.க. தொண்டர்களைக் கைது செய்வது எதேச்சதிகாரப்போக்கு.

பா.ஜ.க. தொண்டர்களை, இதுபோன்ற அடக்குமுறைகளால் முடக்கி விட முடியாது. எங்கள் குரல், மக்களுக்காக எப்போதும் துணிச்சலாக ஒலித்துக்கொண்டிருக்கும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

Similar News