தமிழ்நாடு

வடசென்னையில் தாதாவாக வலம் வந்த காக்காத்தோப்பு பாலாஜி

Published On 2024-09-18 04:51 GMT   |   Update On 2024-09-18 04:51 GMT
  • போலீசாரை பார்த்ததும் காக்காத்தோப்பு பாலாஜி தப்பி ஓட முயன்றான்.
  • இணை கமிஷனர் பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

சென்னை:

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந் தேதி வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இதன் பிறகு புதிய போலீஸ் கமிஷனராக பொறுப்பேற்ற அருண் ரவுடிகளுக்கு எதிராக அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

இதைத்தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள ரவுடிகள் தப்பி ஓடி தலைமறைவானார்கள்.

இதுபோன்று தப்பி ஓடிய ரவுடிகளையும் போலீசார் வேட்டையாடி கைது செய்து வருகிறார்கள். அந்த வகையில் கடந்த 2½ மாதத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இப்படி போலீசார் பிடிக்கச் செல்லும்போது தாக்குதல் நடத்தும் ரவுடிகளுக்கு போலீசார் தங்களது பாணியில் பதிலடி கொடுக்க தொடங்கி உள்ளனர்.

அந்த வகையில் சென்னையை கலக்கி வந்த பிரபல ரவுடியான காக்காத்தோப்பு பாலாஜி போலீஸ் என்கவுண்டரில் இன்று அதிகாலையில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளான்.

சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

வடசென்னை பகுதியை கலக்கி வந்த பிரபல தாதாவான காக்காத்தோப்பு பாலாஜியையும் போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய அவன் எங்கு செல்கிறான்? என்ன செய்கிறான்? என்பதை போலீசார் ரகசியமாக கண்காணித்தனர்.

இதில் காக்காத்தோப்பு பாலாஜி வியாசர்பாடியில் உள்ள போ்ஸடல் டெலிகிராம் குடியிருப்பு பகுதிக்கு வந்திருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் கொடுங்கையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார் இன்று அதிகாலை 4.30 மணியளவில் அங்கு விரைந்து சென்றனர்.

போலீசாரை பார்த்ததும் காக்காத்தோப்பு பாலாஜி தப்பி ஓட முயன்றான். அப்போது போலீசார் சரண் அடைந்துவிடுமாறு எச்சரித்தனர். ஆனால் அதனை கேட்காமல் காக்காத்தோப்பு பாலாஜி போலீசார் மீதும் போலீஸ் வாகனங்கள் மீதும் ஆயுதங்களால் தாக்கினான். இதில் போலீசார் விலகிக்கொண்ட நிலையில் வாகனங்கள் பலத்த சேதம் அடைந்தது.

இதையடுத்து போலீசார் தங்களை பாதுகாத்துக் கொள்வதற்காக அதிரடியில் இறங்கினார்கள். இன்ஸ்பெக்டர் சரவணன் தனது துப்பாக்கியை எடுத்து காக்காத்தோப்பு பாலாஜியை நோக்கி சுட்டார். இதில் இடது பக்க மார்பில் குண்டுகள் பாய்ந்தன. காக்காத்தோப்பு பாலாஜி சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து பலியானான். இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இணை கமிஷனர் பிரவேஷ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர் காக்காத்தோப்பு பாலாஜியின் உடல் ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டது. அதன் பின்னர் பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு உடலை மாற்றினார்கள். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு காக்காத்தோப்பு பாலாஜியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சென்னை பாரிமுனை பி.ஆர்.என்.கார்டன் பகுதியை சேர்ந்த பாலாஜி, அங்குள்ள காக்காத்தோப்பு பகுதியில்தான் தனது ஆதிக்கத்தை செலுத்தி ரவுடியாக வலம் வந்துள்ளான். இதன் காரணமாகவே காக்காத்தோப்பு பாலாஜி என்று அழைக்கப்பட்டு வந்தான். கொலை, ஆள் கடத்தல், அடிதடி உள்ளிட்ட பல்வேறு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த இவன் வடசென்னை பகுதியில் பிரபல தாதாவாக வலம் வந்தவன் ஆவான்.

தனது வளர்ச்சிக்கு தடையாக இருந்தவர்களை திட்டம் போட்டு போட்டுத் தள்ளி இருக்கும் பாலாஜி போலீசாருக்கு பெரிய தலைவலியாகவும் உருவெடுத்திருந்தான். இந்த நிலையில்தான் பிடிக்கச் சென்ற இடத்தில் போலீசாரை தாக்கி தப்ப முயன்றபோது துப்பாக்கி குண்டுகளுக்கு இரையாகியுள்ளான்.

ஆம்ஸ்ட்ராங் படுகொலை சம்பவத்துக்கு பிறகு சென்னை மாநகர போலீசார் தொடர்ச்சியாக அதிரடி காட்டி வருகிறார்கள். துப்பாக்கியால் சுட்டு அவர்கள் ரவுடிகளை வேட்டையாடி வருவதால் தப்பி ஓடி தலைமறைவாக உள்ள ரவுடிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

Tags:    

Similar News