தமிழ்நாடு

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி சரத்குமார் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-12-13 07:29 GMT   |   Update On 2022-12-13 07:29 GMT
  • மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள்.
  • 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

சென்னை:

மது மற்றும் போதை பொருட்களுக்கு எதிராகவும், பூரண மது விலக்கை அமல்படுத்த கோரியும் சென்னை எழும்பூரில் இன்று சமத்துவ மக்கள் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.

எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்துக்கு கட்சி தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார். துணை பொதுச்செயலாளர் சுந்தர் முன்னிலை வகித்தார்.

துணை பொதுச்செயலாளர் மகாலிங்கம் உண்ணாவிரதத்தை தொடங்கி வைத்தார். தலைமை நிலைய துணை செயலாளர் அந்தோணி ராஜ் உறுதிமொழியை வாசித்தார்.

ஆந்திர மாநில தென் மண்டல செயலாளர் லோகநாதன், மாணவர் அணி துணை செயலாளர் கிஷோர், வர்த்தகர் அணி செயலாளர் பெருமாள், இளைஞர் அணி செயலாளர் கிச்சா ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உண்ணாவிரதத்தில் பங்கேற்ற சரத்குமார் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மது மற்றும் போதை பழக்கத்தால் இளைஞர்கள் சீரழிந்து வருகிறார்கள். கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வருவதாக கூறுகிறார்கள்.

இதனை தடுக்க தற்போதுள்ள 1 லட்சம் போலீசார் போதாது. இதற்காக தனிப்படை அமைக்க வேண்டும். 36 ஆயிரம் கோடி வருவாய் மதுவால் கிடைப்பதாக கூறுகிறார்கள்.

அதனை ஈடுகட்ட தொழில் வளத்தை மேம்படுத்தி மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும். 34 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமலில் இருந்துள்ளது.

அப்போது எப்படி சமாளித்தார்கள் என்பதையெல்லாம் ஆராய்ந்து பார்த்து பூரண மதுவிலக்கை அமல்படுத்தலாம்.

இவ்வாறு சரத்குமார் கூறினார்.

Tags:    

Similar News