தமிழ்நாடு

தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பதாக கூறி 25 பேரிடம் மோசடி: சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை

Published On 2023-11-04 10:00 GMT   |   Update On 2023-11-04 10:00 GMT
  • ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது.
  • விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

சென்னை:

தீபாவளி பட்டாசை ஆன்லைனில் விற்பனை செய்வதாக கூறி பண மோசடியில் ஈடுபடும் கும்பலிடம் உஷாராக இருக்குமாறு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இது தொடர்பாக சைபர்கிரைம் போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

தீபாவளிப் பண்டிகை காலத்தில் பட்டாசுகளுக்கான தேவை அதிகரிப்பதால், சைபர் குற்றவாளிகள் போலி இணையதளங்களை உருவாக்கி நம்ப முடியாத விலையில் பட்டாசுகளை வழங்குவதாக உறுதியளித்து மோசடி செய்வதற்கு பயன்படுத்திக் கொள்கின்றனர். எனவே பொதுமக்கள் இந்த மோசடி பற்றிய விழிப்புணர்வோடு இருப்பதும், இத்தகைய மோசடிகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வதும் அவசியமாகும்.

பொதுமக்கள் https://luckycrackers.com/ என்ற இணைய தளத்திற்குச் சென்று ஆர்டரைச் செய்தபின் பின்னர் வாட்ஸ்அப் மூலம் வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு ஆர்டரின் ஸ்கிரீன் ஷாட்டை அனுப்புகிறார்கள். விலைகள் மிகவும் குறைவாக இருப்பதால், தங்கள் பண்டிகை கொண்டாட்டங்களுக்காக இணைய தளத்தில் ஆர்டர்களை ஆர்வத்துடன் செய்கிறார்கள்.

ஆர்டருக்கான பணம் செலுத்தப்பட்டவுடன், இணைய தளத்தை தொடர முடியாத நிலை ஏற்பட்டு விடுகின்றது. இதனால் சம்பாதித்த பணத்தையும் இழந்து மிகவும் ஏமாற்றம் அடைகின்றனர்.

கடந்த ஒரு மாதத்தில் இந்த மோசடி தொடர்பாக மொத்தம் 25 வழக்குகள் பதிவாகி உள்ளன. நீங்கள் பட்டாசு வாங்கும் இணைய தளத்தின் சட்டபூர்வமான தன்மையை எப்போதும் சரி பார்க்கவும், வாடிக்கையாளர் மதிப்புரைகளைப் பார்க்கவும், அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்ணுக்கான லேண்ட்லைன் எண் இணைய தளத்தில் உள்ளதா? எனச் சரி பார்த்து, பாதுகாப்பான கட்டண முறைகளைப் பயன்படுத்துவதை உறுதி செய்யவும்.

நீங்கள் இது போன்ற மோசடிக்கு ஆளாகி இருந்தால், உடனடியாக சைபர்கிரைம் கட்டணமில்லா உதவி எண். 1930-ஐ டயல் செய்து புகார் அளிக்கலாம் அல்லது www.cybercrime.gov.in என்ற இணைய தளத்தில் உங்களது புகாரைப் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News