தமிழ்நாடு

சென்னையில் ஓலா ஆட்டோ, கார் கட்டணம் உயர்ந்தது- குறைந்தபட்சம் ரூ.110 ஆக அதிகரிப்பு

Published On 2022-09-26 10:48 IST   |   Update On 2022-09-26 10:48:00 IST
  • சென்னையில் தற்போது ஓலா, நிறுவனத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் ஓடுகின்றன.
  • ஆட்டோ மற்றும் கார்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.110 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை:

சென்னையில் சுமார் 1½ லட்சம் ஆட்டோக்கள், ஒரு லட்சம் வாடகை கார்கள் ஓடுகின்றன.

ஆட்டோக்களுக்கு கடந்த சில ஆண்டுகளாக புதிய கட்டணம் நிர்ணயிக்கப்படாததால் டிரைவர்கள் கூடுதலாக வசூலித்து வருகின்றனர்.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வால் ஆட்டோ கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் வாடகை ஆட்டோ மட்டுமின்றி ஓலா நிறுவனத்தின் கீழ் இயங்கும் ஆட்டோ, கார் ஆகியவற்றின் கட்டணம் திடீரென தற்போது உயர்த்தப்பட்டு உள்ளது.

சென்னையில் தற்போது ஓலா, நிறுவனத்தின் கீழ் ஆயிரக்கணக்கான ஆட்டோக்கள் ஓடுகின்றன. இந்த ஆட்டோ மற்றும் கார்களில் குறைந்தபட்ச கட்டணமாக ரூ.110 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதுவரையில் 2.5 கி.மீ. தூரம் வரை குறைந்தபட்சமாக ரூ.55 வசூலிக்கப்பட்டது. தற்போது இந்த கட்டணம் ரூ.110 முதல் ரூ.130 வரை அதிகரித்து உள்ளது. பயணிகள் வசதி கட்டணமாக 5 கி.மீ. தூரத்திற்கு ரூ.35 வசூலிக்கப்படுகிறது.

ஓலா கார், ஆட்டோக்களில் திடீரென கட்டணம் உயர்த்தப்பட்டு இருப்பது பயணிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சென்னையில் சொந்த கார் வைத்திருப்பவர்கள் கூட நெரிசலில் பயணித்து தாமதம் ஏற்படுவதை தவிர்க்க ஓலா ஆட்டோக்களில் அதிகம் பயணம் செய்கிறார்கள்.

பஸ், ரெயில் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அவசர தேவைகளுக்கு ஓலா ஆட்டோ, கார்களை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். கட்டணம் இரு மடங்கு உயர்ந்ததால் வாடகை ஆட்டோ, கார்களை பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர்.

கொரட்டூரில் இருந்து பாடி ஷாப்பிங் மாலுக்கு 1.3 கி.மீ. தூரம் செல்ல ரூ.110 கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. கூடுதல் கட்டணமாக ரூ.54 குறிப்பிடப்பட்டு வசூலிப்பதாக பயணி ஒருவர் தெரிவித்தார். கொரட்டூர் மின்சார வாரிய காலணியை சேர்ந்த கிருஷ்ணன் கூறும் போது, 2.5 கி.மீ.க்கு ரூ.120 முதல் ரூ.130 வரை ஓலா புக்கிங் பண்ணும்போது காட்டுகிறது என்றார்.

இதே போல சென்ட்ரலில் இருந்து அம்பத்தூர் தொழில்பேட்டைக்கு சென்ற பயணி ஒருவரிடம் வசதி கட்டணம் எனக்கூறி ரூ.38 வசூலிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து பயணிகள் கூறும்போது, ஓலா ஆட்டோ, கார் கட்டணத்தை அரசு முறைப்படுத்தி நிர்ணயிக்க வேண்டும். அவரவர் இஷ்டத்திற்கு கட்டணத்தை உயர்த்தி வசூலிப்பதால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் ஓலா ஆட்டோ, கார் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் மீண்டும் தற்போது கூட்டி இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறும்போது, ஆட்டோ, கார் கட்டணம் உயர்த்துவதற்கு எந்தவித அனுமதியும் கொடுக்கவில்லை. ஏற்கனவே உள்ள கட்டணம் தான் வசூலிக்க வேண்டும் என்றனர்.

Tags:    

Similar News