தமிழ்நாடு

தமிழக வெற்றிக் கழகத்துக்கு புதிய செயலி அறிமுகம்- அதிகமாக சேர்ப்பவர்களுக்கு கட்சி பதவியில் முன்னுரிமை

Published On 2024-02-22 07:56 GMT   |   Update On 2024-02-22 07:56 GMT
  • கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.
  • கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

சென்னை:

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கடந்த 2-ந் தேதி அரசியல் கட்சி தொடங்கினார்.

இதையடுத்து கட்சியின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி புஸ்சி ஆனந்த் மற்றும் நிர்வாகிகளுடன் விஜய் அடிக்கடி ஆலோசனை நடத்தி வருகிறார். கட்சி கொடி, சின்னம், தேர்வு செய்யும் பணிகளிலும் விஜய் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு சென்னை பனையூரில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் கட்சிக்கு புதிதாக 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

இதற்காக சிறப்பு செயலி உருவாக்கப்பட்டு அடுத்த வாரம் முதல் செயல்பட உள்ளது. தற்போது அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் நடந்து வருகிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான சிறப்பு முகாம்கள் மாவட்ட, மாநகர், நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக நடைபெற உள்ளது.

கட்சியின் உள் கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் கட்சி பதவிகள் விரைவில் வெளியிடப்பட உள்ளது. முதலில் மகளிர் அணிக்கு நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

அதிகமான உறுப்பினர்களை சேர்க்கும் நிர்வாகிகளுக்கு கட்சி பதவிகளில் முன்னுரிமை வழங்கப்பட இருக்கிறது. புதிய உறுப்பினர் சேர்க்கைக்காக மாவட்ட சட்டமன்ற வாரியாக புதிய பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.

இந்த பணிகள் தொடர்பாக தமிழகம், புதுச்சேரி நிர்வாகிகளை விஜய் உத்தரவின் பேரில் புஸ்சி ஆனந்த் அடிக்கடி தொடர்பு கொண்டு உறுப்பினர் சேர்க்கை பணியை வேகப்படுத்தி வருகிறார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் புதிய நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படும் நிலையில் உறுப்பினர்கள் சேர்க்கைகளில் கட்சி தொண்டர்கள் தீவிர ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

சிறப்பு செயலி மூலம் புதிய உறுப்பினர்களாக சேர விரும்புபவர்களின் ஆதார் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், செல்போன் நம்பர் ஆகியவை இணைக்கப்பட உள்ளது.

Tags:    

Similar News