பா.ம.க.வினர் கைது- அன்புமணி ராமதாஸ் கண்டனம்
- தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
- தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
சென்னை:
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
அரியலூர் மாவட்டம் காடுவெட்டி கிராமத்தில் கடந்த ஒன்றாம் தேதி மாவீரன் ஜெ.குருவின் பிறந்தநாள் நிகழ்வு களில் பங்கேற்க அமைச்சர் சிவசங்கர் சென்ற போது, திமுகவின் சமூக அநீதியைக் கண்டித்து முழக்கம் எழுப்பியதற்காக பா.ம.க.வைச் சேர்ந்த அன்புமணி, சிங்கார வேலு, சீனு ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தி.மு.க. அரசின் இந்த அடக்குமுறை கண்டிக்கத்தக்கது.
இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும் தான் பரிசாகக் கிடைக்கும்.
பா.ம.க.வினர் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதற்கும், பா.ம.க.வினர் மீது வன்மம் காட்டுவதற்கும் பதிலாக, தெலுங்கானாவில் நடத்தப்பட்டது போன்று தமிழ்நாட்டிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, தமிழ்நாட்டில் சமூகநீதியை நிலைநாட்டுவதில் இந்த அரசு முழு கவனம் செலுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.