தமிழ்நாடு
பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி- போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

பெண் பயிற்சி மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சி- போலீஸ் சூப்பிரண்டு நேரில் விசாரணை

Published On 2025-03-25 12:52 IST   |   Update On 2025-03-25 12:52:00 IST
  • இருட்டில் மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று பயிற்சி மருத்துவரின் முன்பாக வந்து நின்றுள்ளார்.
  • மருத்துவமனை ஊழியர் ஒருவர் அலறல் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி வேகமாக ஓடி வந்தார்.

சிவகங்கை:

சிவகங்கையில் அரசு மருத்துவக்கல்லூரி கீழவாணியங்குடி பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மருத்துவம் பயின்று வருகிறார்கள். அதே மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அவர்களுக்கான விடுதிகளும் தனித்தனியாக இயங்கி வருகிறது.

இதில் இறுதியாண்டு படிக்கும் 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பயிற்சி மருத்துவர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் ஒருவர் நேற்று நள்ளிரவில் பணிகளை முடித்துவிட்டு, மருத்துவமனை கல்லூரி வளாகத்தில் உள்ள விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சென்றபோது, இருட்டில் மறைந்திருந்த மர்மநபர் ஒருவர் திடீரென்று பயிற்சி மருத்துவரின் முன்பாக வந்து நின்றுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேகமாக விடுதியை நோக்கி நடையை கட்டினார். இருந்தபோதிலும் அவரை பின்தொடர்ந்து சென்ற மர்ம நபர் கண்ணிமைக்கும் நேரத்தில் பயிற்சி மருத்துவரின் முகத்தை தான் வைத்திருந்த துணியால் மூடி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார்.

உடனடியாக அந்த பயிற்சி மருத்துவர் கூச்சல் போட்டார். அவரது அலறல் சத்தம் கேட்ட மருத்துவமனை ஊழியர் ஒருவர் அலறல் சத்தம் கேட்ட பகுதியை நோக்கி வேகமாக ஓடி வந்தார். அவரை பார்த்ததும் மர்ம நபர் மாணவியை விட்டுவிட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் தப்பித்து மறைந்தார்.

இதுகுறித்து அரசு மருத்துவக் கல்லூரியின் முதல்வர் சத்தியபாமா உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் விரைந்து வந்த போலீசார் பாலியல் துன்புறுத்தலுக்கு முயற்சிக்கப்பட்ட பயிற்சி மருத்துவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, மருத்துவக் கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் எதுவும் செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்து உள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவியிடம் நடந்த பாலியல் அத்துமீறல் பூதாகரமாக வெடித்துள்ள நிலையில் சிவகங்கையில் பயிற்சி பெண் மருத்துவரை மர்ம நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News