மாணவி பாலியல் வன்கொடுமை: ஆசிரியர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க ராமதாஸ் வலியுறுத்தல்
- ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும்.
- இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
கவர்னர், அரசுக்கு இடையிலான மோதல் உயர்கல்வியை பாதிக்கக்கூடாது. பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தரின் நீடிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைந்தது. பாரதியார், கல்வியியல், அண்ணா, பெரியார், அழகப்பா, அண்ணாமலை பல்கலைக்கழகம் உள்ளிட்ட ஆறுடன் பாரதிதாசன் பல்கலைக்கழகமும் இணைந்து 7 பல்கலைக்கழகத்தில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. உயர்கல்விதுறையில் உள்ள 13 பல்கலைக்கழகத்தில் 11 பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவி காலியாகிவிடும். துணைவேந்தர் கையெழுத்து இல்லாத சான்றிதழ்கள் செல்லதக்கது அல்ல. இந்த நிலை நீடிக்கக்கூடாது. துணைவேந்தர் நியமனம் தொடர்பான வழக்கில் சாதகமான தீர்ப்பு பெற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழக அரசு பள்ளிகளில் 3,192 பட்டதாரி ஆசிரியர்களை தேர்வு செய்ய 2023-ம் ஆண்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி விண்ணபித்தவர்களுக்கு 2024 தேர்வு நடத்தப்பட்டு மே மாதம் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு தேர்வானவர்கள் பட்டியல் ஜூலை மாதம் வெளியிடப்பட்டு இன்று வரை பணிநியமன ஆணை வழங்கவில்லை. இடைநிலை ஆசிரியர்களுக்கும் போட்டி தேர்வு நடத்தப்பட்டு 6 மாதம் கடந்தும் திருத்தம் செய்யவும் அரசு முயற்சிக்கவில்லை. அரசுப்பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறையால் 50 ஆயிரம் ஆசிரியர்கள் ஒய்வு பெற்ற நிலையில் ஒரு ஆசிரியர்கூட நியமிக்கவில்லை. பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணையையும், இடைநிலை ஆசிரியர்களுக்கான போட்டி தேர்வு முடிவை வெளியிடவேண்டும்.
தெலுங்கானாவில் சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து பாராட்டி, தேசிய அளவில் இக்கணக்கெடுப்பு நடத்த எதிர்கட்சித்தலைவர் ராகுல்காந்தி வலியிறுத்தியுள்ளார். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் தேசிய தலைமை வலியிறுத்த வேண்டும்.
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க உச்சநீதிமன்றத்தில் தடையாணை பெறவேண்டும். ஆன்லைன் ரம்மிக்கு தமிழக அரசு தடைவிதித்தது செல்லாது என உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் 19 தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது. எனவே ஆன்லைன் ரம்மிக்கு தடை பெற அரசு முயற்சிக்க வேண்டும்.
தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 963 கிமீ நீளத்திற்கு 4 வழிச்சாலைகள் பயன்பாட்டிற்கு வர உள்ளதால் சுங்கச்சாவடிகள் 90 ஆக அதிகரிக்கும் என மக்களவையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் சுங்கக்கட்டணம் செலுத்த முடியாமல் செல்ல இயலாத நிலை ஏற்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிக சுங்கச்சாவடிகள் உள்ளது.
அரசு மருத்துவமனைகளில் 658 சிறப்பு டாக்டர்களை நேர்காணல் மூலம் நியமிக்கும் முடிவை அரசு கைவிட்டு போட்டித்தேர்வின் மூலமே நியமிக்க வேண்டும். இப்படி நியமிக்கப்பட்டால் முறைகேடுகளுக்கு வழிவகுக்கும்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கும் மாணவியை 3 ஆசிரியர்கள் பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளியான தகவல் அதிர்ச்சி அளிக்கிறது. இந்த ஆசிரியர்கள் மீது தமிழக அரசும், காவல்துறையும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு பொறுப்பேற்க வேண்டும். அரியலூர் மாவட்டம், காடுவெட்டியில் உள்ள காடுவெட்டி குருவின் சிலைக்கு அமைச்சர் சிவசங்கர் மாலை அணிவிக்க சென்றபோது வன்னியர்களுக்கு தி.மு.க. செய்த துரோகத்தை உரக்க சொல்லிய 3 பேரை போலீசார் கைது செய்ததை கண்டிக்கிறோம்.
திருப்பரங்குன்றம் தொடர்பாக நிகழ்வில், அம்மலை யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனை 100 ஆண்டுகளுக்கு மேலாக உள்ளது. கடந்த காலங்களில் இந்துக்களும், இஸ்லாமியர்களுக்கும் கடைபிடித்த நடைமுறை தொடர்பான அமைதிக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது பா.ம.க. கவுரவ தலைவர் ஜி.கே.மணி உடன் இருந்தார்.