தமிழ்நாடு

நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட வேண்டும்- அரசுக்கு பா.ஜ.க. வலியுறுத்தல்

Published On 2025-02-06 13:07 IST   |   Update On 2025-02-06 13:07:00 IST
  • தமிழக விவசாயிகள் வரலாற்றில், தமிழகப் போராட்டகள் வரலாற்றில் மிக மிக முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு.
  • வாழ்க்கை வரலாற்றை, போராட்ட குணத்தை, தமிழக மக்களிடம் குறிப்பாக, விவசாயிகள், இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும்.

சென்னை:

தமிழக பா.ஜ.க. மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் தந்த மாபெரும் விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடு நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் தமிழக அரசு கொண்டாட வேண்டும்.

விவசாயிகளின் வாழ்வுரிமைக்காக, தன் வாழ்வையே அர்ப்பணித்த மாபெரும் விவசாய சங்கத் தலைவர் சி.நாராயணசாமி நாயுடுவின் 100வது பிறந்தநாள் இன்று.

விவசாயிகளுக்காகப் போராடி வரலாறு படைத்த நாராயணசாமி நாயுடு நூற்றாண்டை முன்னிட்டு, "துடியலூர்-கோவில் பாளையம் இணைப்புச் சாலையில் அமைக்கப்பட்டு வரும், குருடம்பாளையம் என்.ஜி.ஓ. காலனி ரெயில்வே மேம்பாலத்திற்கு நாராயணசாமி நாயுடு பெயர் சூட்டப்படும். அவர் பிறந்து வாழ்ந்த வையம்பாளையத்தில் நூற்றாண்டு நினைவு வளைவு அமைக்கப்படும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழக விவசாயிகள் வரலாற்றில், தமிழகப் போராட்டகள் வரலாற்றில் மிக மிக முக்கியமானவர் நாராயணசாமி நாயுடு. அவரது வாழ்க்கை விவசாயிகளுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் ஓர் பாடம். எனவே அவரது நூற்றாண்டையொட்டி நினைவு வளைவு அமைப்பது, ரெயில்வே மேம்பாலத்துக்கு பெயர் வைப்பதோடு மட்டும் நின்று விடாமல், அவரது வாழ்க்கை வரலாற்றை, போராட்ட குணத்தை, தமிழக மக்களிடம் குறிப்பாக, விவசாயிகள், இளைஞர்களிடம் கொண்டுச் சேர்க்க வேண்டும்.

அதற்காக தமிழகம் முழுவதும் கருத்தரங்குகள், மாநாடுகள் நடத்தப்பட வேண்டும். பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு நாராயணசாமி நாயுடு குறித்த பேச்சு, கட்டுரை போட்டிகள் நடத்தப்பட வேண்டும். அவரது நூற்றாண்டு நிறைவில் மிகப்பெரிய விவசாயிகள் பேரணியுடன், மாநாட்டையும் தமிழக அரசு நடத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags:    

Similar News