தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இன்று விலகியது- இந்திய வானிலை மையம்
- வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கியது.
- தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வட கிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் 14-ந்தேதி தொடங்கியது. நாடு முழுவதும் அதிக மாநிலங்களில் மழைப் பொழிவை கொடுக்கும் வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு தமிழகத்தில் இயல்பை விட அதிகமாக பெய்துள்ளது.
நவம்பர், டிசம்பர் மாதங்களில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதிகள் மூலமாக தமிழகத்தில் உள்ள ஏரி, குளங்கள், அணைகள், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பின.
'பெஞ்சல்' புயல் உருவாகி பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் கடந்து சென்றது. இதனால் தென் மாவட்டங்கள், வட மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்தது.
பொதுவாக வடகிழக்கு பருவமழை காலம் அக்டோபர் மாதம் தொடங்கி டிசம்பர் வரை யிலும் ஜனவரி 2-வது வாரம் வரையும் நீடிக்க வாய்ப்பு உள்ளது.
ஆனால் இந்த வருடம் ஜனவரி மாதம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. பருவ நிலை மாற்றத்தின் காரணமாக கடும் குளிர் பனி இருந்த போதிலும் கூட மழை பெய்தது.
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால், மாகே, கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் இன்று நிறைவு பெற்றதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.