செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை அலுவலகத்தில் அமைச்சர் பொன்முடி ஆஜர்
- 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு போடப்பட்டது.
- செம்மண் முறைகேடு வழக்கு தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து உள்ளனர்.
சென்னை:
கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரையில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியில் கனிம வளம் மற்றும் சுரங்கத்துறை அமைச்சராக இருந்தவர் பொன்முடி. அப்போது விழுப்புரம் மாவட்டம் பூத்துறையில் செம்மண் எடுப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டதில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.
இது தொடர்பாக 2012-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின்போது பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு போடப்பட்டது. விழுப்புரம் குற்றப்பிரிவு போலீசார் செம்மண் முறைகேடு தொடர்பாக ரூ.28.36 கோடி இழப்பீடு ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.
இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத் துறை அதிகாரிகள் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் ஏற்கனவே சோதனை நடத்தியுள்ளனர். அவரிடம் விசாரணையும் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜரானார். செம்மண் முறைகேடு வழக்கு தொடர்பாக அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி தகவல்களை சேகரித்து உள்ளனர்.