சிறுமி இறந்ததால் மூடப்பட்ட பள்ளி 16 நாட்களுக்கு பின்பு திறப்பு- முற்றுகையிட்ட பெற்றோர்கள்
- பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதா என கடந்த 7-ந் தேதி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
- பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர்.
விக்கிரவாண்டி:
விக்கிரவாண்டியிலுள்ள செயின்ட் மேரீஸ் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் எல்.கே.ஜி. படித்த அதே ஊரைச்சேர்ந்த பழனிவேலுவின் மகள் லியா லட்சுமி(4) என்ற சிறுமி கடந்த 3-ந் தேதி பள்ளி வளாகத்திலுள்ள செப்டிக் டேங்கில் விழுந்து இறந்தது. இதையடுத்து பெற்றோர்கள், உறவினர்கள் பள்ளி முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பள்ளி விடுமுறை விடப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
இந்த சம்பவத்தில் பள்ளி தாளாளர் எமில்டா, பள்ளி முதல்வர் டோமினிக் மேரி, ஆசிரியை ஏஞ்சல் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் சென்னை உயர்நீதி மன்ற உத்திரவுபடி நிபந்தனை ஜாமீனில் வெளிவந்துள்ளனர் .
பள்ளியில் குழந்தைகளுக்கு தேவையான பாதுகாப்பு உள்ளதா என கடந்த 7-ந் தேதி பள்ளியில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் அரையாண்டு தேர்வு முடிந்த நிலையில் இப்பள்ளியில் அரையாண்டு தேர்வு நடைபெறாமல் விடுமுறையால் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்று மாலை பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கும் செல்போன்களில் குறுந்தகவல், பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இன்று முதல் பள்ளி திறக்கப்படும் எனவும், அனைவரும் முழு யூனிபார்ம்வுடன்பள்ளிக்கு 9 மணிக்கு வரவேண்டும் எனவும், இன்று சிறப்பு வகுப்புகள் ஏதும் கிடையாது என அறிவிப்பு அனுப்பினர். மாணவி இறந்த சம்பவம் நடந்து 16 நாட்களுக்கு பிறகு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பள்ளி மீண்டும் இன்று திறக்கப்பட்டது. பள்ளி மாணவர்களை பெற்றோர்கள் அழைத்து வந்து பள்ளியில் விட்டு சென்றனர்.
9 மணிக்கு பிரேயர் தொடங்கிய நிலையில் இறந்த சிறுமியின் பெற்றோர்கள் மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளின் பெற்றோர்கள் சுமார் 50 பேர் பள்ளியை முன்பு முற்றுகையிட்டு எங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு இல்லை.
பள்ளி நிர்வாகம் பள்ளியில் உள்ள குறைபாடுகளை சரி செய்து விட்டோம் என்றும் இனி நாங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பாக வைத்திருப்போம் என்றோ உறுதி அளிக்கவில்லை. திடீரென நேற்று செல்போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு இன்று பள்ளி திறக்கப்படுகின்றது. பள்ளி நிர்வாகம் முறையாக பெற்றோர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் போட்டு தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும். என்று கூறி பள்ளியின் முன்பு முற்றுகையிட்டனர்.