புதுச்சேரி

தலைவர் பதவி விலக கோரி அரை நிர்வாண போராட்டம் நடத்திய பா.ஜனதா நிர்வாகி சஸ்பெண்டு

Published On 2024-06-15 05:45 GMT   |   Update On 2024-06-15 05:45 GMT
  • அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.
  • கட்சி நிர்வாகிகள் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் அவரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

புதுச்சேரி:

புதுவை பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் நமச்சிவாயம் தோல்வியடைந்தார்.

தேர்தல் தோல்விக்கு பாஜக மாநில தலைவர் செல்வகணபதியின் அணுகுமுறை தான் காரணம் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் ஏற்கனவே போர்கொடி உயர்த்தினார். அதோடு மட்டுமல்லாது செல்வகணபதியை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் அல்லது தார்மீக பொறுப்பேற்று அவர் தானாக முன் வந்து பதவி விலக வேண்டும் என வலிறுத்தியிருந்தார்.

இந்த நிலையில் நேற்று கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு பாஜக தலைமை அலுவலகத்தில் உள்ள பாரத மாதா சிலையின் கீழ் அமர்ந்து மேல் சட்டை அணியாமல் திடீரென அரை நிர்வாண போராட்டம் நடத்தினார். இது கட்சி வட்டாரத்தில் பரபரப்பை எற்படுத்தியது, அவரை அங்கிருந்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அனுப்பினர்.

அரை நிர்வாண போராட்டம் நடத்திய மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சி பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டள்ளார்.

இதுகுறித்து மாநில பொது செயலாளர் மோகன்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதவது:-

பாஜக மாநில தலைவர் வழிகாட்டுதலின்படி கட்சியின் மாநில செயலாளர் ரத்தினவேலு கட்சியின் நெறிமுறைகளை பின்பற்றாமல் கட்டுபாட்டை மீறி செயல்பட்டதால் மாநில செயலாளர் பொறுப்பில் இருந்து தற்காலிகமாக விடுவிக்கப்படுகிறார். கட்சி நிர்வாகிகள் கட்சி தொடர்பாக எந்த தொடர்பும் அவரிடம் வைத்துக்கொள்ள வேண்டாம்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Tags:    

Similar News