என் மலர்
சினிமா செய்திகள்
ஜவான் வெற்றி விழா - மேடையில் அசத்தலாக நடனமாடிய ஷாருக்கான், தீபிகா படுகோனே
- ஜவான் திரைப்படம் உலகளவில் வசூலை குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
- ஜவான் திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது.
மும்பை:
ராஜா ராணி, தெறி, மெர்சல், பிகில் என தமிழில் வசூல் ரீதியாக தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் அட்லீ. இவர் தற்போது ஷாருக்கான் நடிப்பில் 'ஜவான்' படத்தை இயக்கியுள்ளார்.
'ஜவான்' படத்தில் ஷாருக்கானுடன் நயன்தாரா, விஜய் சேதுபதி இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் தீபிகா படுகோனே, யோகிபாபு, பிரியாமணி, சஞ்சய் தத் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 'ஜவான்' திரைப்படம் உலகம் முழுவதும் கடந்த 7-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. 'ஜவான்' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
தொடர்ந்து 'ஜவான்' திரைப்படம் உலகளவில் வசூலைக் குவித்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி 'ஜவான்' திரைப்படம் வெளியான 8 நாட்களில் ரூ.696.67 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. ரூ.700 கோடி வசூலை நெருங்கியுள்ளது.
இந்நிலையில், ஜவான் படத்தின் வெற்றி விழா நிகழ்ச்சி மும்பையில் இன்று நடைபெற்றது. இதில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, இசை அமைப்பாளர் அனிருத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அப்போது மேடையில் பாடிக் கொண்டிருந்த அனிருத், ஷாருக்கானை நடனமாட வரும்படி அழைத்தார். அவருடன் தீபிகா படுகோனேவும் வந்தார்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே ஜோடி சலியா பாடலுக்கு அசத்தலாக நடனமாடியது. இதைக் கண்ட ரசிகர்கள் இந்த நடனத்தை வைரலாக்கி வருகிறார்கள்.