search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    ரஷித் கான் ஓவரை பறக்க விட்ட பிரையன் லாரா- வைரலாகும் வீடியோ

    • அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாக ரஷித் கான் கூறினார்.
    • இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்

    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் பிரைன் லாரா சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய மகத்தான பேட்ஸ்மேன்களில் முதன்மையானர். கடந்த 1990-ம் ஆண்டு சர்வதேச அரங்கில் அறிமுகமான அவர் 2007 வரை மிகச் சிறந்த இடது கை பேட்ஸ்மனாக அந்த சமயத்தில் இருந்த கிளன் மெக்ராத் முதல் சோயப் அக்தர் வரை அத்தனை உலகத்தரம் வாய்ந்த பவுலர்களையும் சிறப்பாக எதிர்கொண்டு டெஸ்ட் மற்றும் ஒருநாள் ஆகிய 2 வகையான கிரிக்கெட்டிலும் தலா 10000-க்கும் மேற்பட்ட ரன்களை விளாசி நிறைய சரித்திர வெற்றிகளை பெற்றுக் கொடுத்தவர்.

    நிறைய இளம் வீரர்களுக்கு ரோல் மாடலாகவும் திகழும் அவர் கடந்த 2007-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று தற்போது வர்ணனையாளராக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் 2022 டி20 உலக கோப்பைக்கு பின் ஆஸ்திரேலிய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் பங்கேற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பிரைன் லாரா வர்ணனையாளராக செயல்பட்டார்.

    மறுபுறம் டிசம்பர் 13-ம் தேதி முதல் துவங்கும் பிக்பேஷ் லீக் தொடரில் சிட்னி சிக்ஸர்ஸ் அணிக்கு விளையாடுவதற்காக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்து வீச்சாளர் ரஷித் கான் ஆஸ்திரேலியா சென்றடைந்துள்ளார். அந்த நிலையில் நேராக சந்தித்துக் கொள்ளும் வாய்ப்பை பெற்ற அவர்கள் சர்வதேச அரங்கில் மோத வாய்ப்பில்லை என்றாலும் நட்பின் அடிப்படையில் வலைப் பயிற்சியில் மோதினால் எப்படி இருக்கும் என்பதை பார்ப்பதற்காக போட்டி போட்டார்கள்.


    அதை அறிந்து ஏராளமான ரசிகர்கள் அதைப் பார்க்க ஆவலுடன் கூடிய நிலையில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்து வீச்சாளராக கருதப்படும் ரஷித் கானை எதிர்கொண்ட பிரைன் லாரா எந்த பந்துகளிலும் கொஞ்சமும் தடுமாறாமல் அதிரடியாக பேட்டிங் செய்தார். குறிப்பாக காத்திருந்து அடித்த ஸ்கொயர் கட் மற்றும் இறங்கி வந்து பவுண்டரி பறக்க விட்ட அவரது ஷாட்களை பார்த்து உற்சாகமான ரசிகர்கள் ஆரவாரம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

    24 வயதாகும் நம்பர் ஒன் டி20 பவுலரான ரஷித் கான் பந்துகளை வெளுத்து வாங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ரஷித் கான் பேசியது பின்வருமாறு. "அவருக்கு எதிராக பந்து வீசப் போகிறேன் என்று தெரிந்ததும் நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். ஏனெனில் சுழல் பந்து வீச்சை அற்புதமாக எதிர்கொள்ளும் பிரைன் லாரா போன்ற ஒருவருக்கு பந்து வீசுவது சவாலாகும். இதில் வெற்றி தோல்வி என்பதை விட அவருக்கு எதிராக பந்து வீசியதே எனக்கு மிகப்பெரிய பெருமையாகும்" என்று கூறினார்.

    அவரை எதிர்கொண்டது பற்றி லாரா பேசியது பின்வருமாறு. "இது மிகவும் வேடிக்கையாக இருந்தது. இருப்பினும் ரசித் தற்போது பார்மில் இல்லை என்று நினைக்கிறேன். ஆனால் அவரைப் போன்ற பெரிய பவுலரை எதிர்கொள்வது அற்புதமானது. அது எனக்கு அதிர்ஷ்டமாகும்" என்று கூறினார்.

    Next Story
    ×