search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    சோதனையிலும் சாதனை மன்னனாக திகழும் பாபர் அசாம்
    X

    சோதனையிலும் சாதனை மன்னனாக திகழும் பாபர் அசாம்

    • நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 டி20 போட்டிகளிலும் பாகிஸ்தான் தோல்வியை தழுவியுள்ளது.
    • இந்த 3 போட்டிகளிலும் பாபர் அசாம் அரை சதம் விளாசி உள்ளார்.

    நியூசிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தான் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த பாகிஸ்தான் அணி தோல்விகளை சந்தித்தது.

    இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கிய அந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி முதலில் விளையாடிய நியூசிலாந்து 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பின் ஆலன் 5 பவுண்டரி 16 சிக்சருடன் 137 (62) ரன்கள் விளாசினார்.

    அதனை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 179 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக பாகிஸ்தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் பாபர் அசாம் நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும் எதிர்ப்புறம் களமிறங்கிய வீரர்கள் கை கொடுக்காமல் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை ஏற்படுத்தினர். வெற்றிக்காக போராடிய பாபர் அசாம் 8 பவுண்டரி 1 சிக்சருடன் 58 (37) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இந்த தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகள் முறையே பாபர் அசாம் 66, 57, 58 ரன்கள் அடித்து அசத்தியுள்ளார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஒரு குறிப்பிட்ட தொடரில் தோல்வியை சந்தித்த 3 போட்டிகளில் தொடர்ச்சியாக 3 அரை சதங்கள் அடித்த முதல் ஆசிய வீரர் என்ற சோகமான சாதனையையும் பாபர் அசாம் படைத்துள்ளார்.

    மேலும் ஒரு அணிக்கு எதிராக அதிக அரை சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் விராட் கோலி சாதனையை பாபர் அசாம் சமன் செய்துள்ளார். விராட் கோலி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 8 அரை சதங்கள் அடித்துள்ளார். அதுபோல பாபர் அசாம் நியூசிலாந்துக்கு எதிராக 8 அரை சதங்கள் விளாசியுள்ளார்.

    இதை தவிர அயல்நாட்டு மண்ணில் 23 அரைசதங்கள் விளாசிய ரோகித், விராட் கோலி சாதனையை பாபர் அசாம் முறியடித்தார். அவர் 24 அரை சதம் விளாசியுள்ளார்.

    Next Story
    ×