search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வீணான அஷ்வினின் அதிரடி ஆட்டம்: திண்டுக்கல்லை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்
    X

    வீணான அஷ்வினின் அதிரடி ஆட்டம்: திண்டுக்கல்லை வீழ்த்தியது சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

    • மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.
    • ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    8 அணிகள் பங்கேற்றுள்ள 8-வது தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சேலத்தை அடுத்த வாழப்பாடியில் உள்ள சேலம் கிரிக்கெட் பவுண்டேசன் ஸ்டேடியத்தில் கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

    இங்கு அரங்கேறிய முதல் 9 லீக் ஆட்டங்கள் கடந்த 11-ம் தேதி நிறைவடைந்ததை அடுத்து தற்போது 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    நேற்று இரவு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சேப்பாக் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    ஆனால் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் துவங்குவதில் தாமதம் ஏற்பட்டது. மழையின் காரணமாக ஆட்டம் 7 ஓவர்கள் கொண்ட போட்டியாக குறைக்கப்பட்டது.

    முதலில் களமிறங்கிய திண்டுக்கல் அணியில் டாப் 4 பேட்ஸ்மேன்களில் 3 பேர் டக் அவுட்டாகி வெளியேறினர். ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களமிறங்கிய ரவிசந்திரன் அஷ்வின் அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 45 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 7 ஓவர்கள் முடிவில், 6 விக்கெட் இழப்பிற்கு 64 ரன்கள் எடுத்தது திண்டுக்கல் அணி. சேப்பாக்க அணி தரப்பில் அபிஷேக் தன்வர், கணேசன் பெரியசாமி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    65 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சேப்பாக் அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் சந்தோஷ் குமார் துரைசாமி முதல் பந்திலேயே டக் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் ஜோடி சேர்ந்த நாராயண் ஜெகதீசன், பாபா அபார்ஜித் திண்டுக்கல் அணியின் பந்துவீச்சை நாலாபக்கமும் சிதறடித்தனர்.

    4.5 ஓவர்களில் 65 ரன்கள் அடித்து சேப்பாக் அணி எளிதாக இப்போட்டியில் வென்றது. அதிரடியாக விளையாடிய நாராயண் ஜெகதீசன் 32 ரன்களும் பாபா அபார்ஜித் 31 ரன்களும் அடித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இப்போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் 5 ஆம் இடத்திலிருந்து 3 ஆம் இடத்திற்கு சேப்பாக் சூப்பர் கில்லீஸ் முன்னேறியுள்ளது.

    Next Story
    ×