search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? நாளை 2-வது ஒரு நாள் போட்டி
    X

    நியூசிலாந்துக்கு இந்தியா பதிலடி கொடுக்குமா? நாளை 2-வது ஒரு நாள் போட்டி

    • முதல் ஒரு நாள் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே.
    • 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 307 ரன் இலக்கு எடுக்கப்பட்டது பரிதாபமே.

    ஹேமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது.

    இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    3 ஒருநாள் போட்டி தொடரில் ஆக்லாந்தில் நேற்று நடந்த முதல் ஆட்டத்தில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் நாளை (27-ந்தேதி) நடக்கிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருக்கிறது. தோற்றால் ஒருநாள் தொடரை இழந்து விடும். இதனால் இந்திய அணி நியூசிலாந்துக்கு பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    முதல் ஒரு நாள் போட்டியில் 306 ரன்கள் குவித்தும் இந்திய அணி தோல்வியை தழுவியது மிகப்பெரிய ஏமாற்றமே. அந்த அளவுக்கு பந்து வீச்சில் பலவீனத்தை காண முடிந்தது. 17 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் 307 ரன் இலக்கு எடுக்கப்பட்டது பரிதாபமே.

    இதனால் நாளைய போட்டிக்கான இந்திய அணியில் மாற்றம் இருக்கலாம் என்று தெரிகிறது. அர்ஷ்தீப் சிங், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், யசுவேந்திர சாஹல் ஆகியோர் ரன்களை வாரி கொடுத்து இருந்தனர். தமிழகத்தை சேர்ந்த வாஷிங்டன் சுந்தர் ஒருவர் மட்டுமே ரன்களை அதிகம் கொடுக்காமல் நேர்த்தியாக பந்து வீசினார்.

    தீபக் சாஹர், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர் பார்க்கப்படுகிறது. பேட்டிங்கை பொறுத்த வரை மாற்றம் செய்யப்படமாட்டாது என்றே தெரிகிறது.

    வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி நாளைய போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை வெல்லும் ஆர்வத்தில் உள்ளது. அந்த அணியில் டாம் லாதம், கேப்டன் வில்லியம்சன், பின் ஆலன், பிலிப்ஸ், கான்வே, சவுத்தி, பெர்குசன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    இரு அணிகளும் மோதிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டி 'டை' ஆனது. 5 ஆட்டம் முடிவு இல்லை.

    நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    Next Story
    ×